ஆப்பி​ள் திறன் கண்ணாடி

ஆப்பிளின் அடுத்த பெரிய புதுமையாக நீண்ட காலமாகக் கருதப்படும் ஆப்பிள் கண்ணாடி (Apple Glass) விரைவிலேயே வெளியாகும் வாய்ப்புள்ளது.

பிளூம்பெர்க் தளத்தில் வெளியான செய்தி ஒன்று இந்த தகவலை உறுதிப்படுத்தியிருக்கிறது. ஆப்பிள் அடுத்த 12 முதல் 16 மாதங்களுக்குள் தனது திறன் கண்ணாடியை அறிமுகப்படுத்த உள்ளது. சரி இந்த முதல் பதிப்பு திறன் கண்ணாடிகளில் என்னென்ன அம்சங்கள் வெளியாக வாய்ப்பிருக்கிறது என பயனர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. அதற்கும் சில பரிந்துரைகள் இருக்கின்றன.

திறன் கண்ணாடிகளில் கணொளி பதிவுசெய்வதற்கான புகைப்படக் கருவிகள், ஒலியை இசைத்தல், பதிவு செய்தலுக்கான அமைப்பு, ஐபோன் திறன்பேசிகளுடன் இணைக்கும் வசதி போன்றவை இருக்கும் வாய்ப்புள்ளது. இவை எல்லாமே பெரும்பாலும் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டதுதான்.

ஆனால் அயர்ன் மேனை போல கண்ணாடி முன் தகவல்களை பார்க்க முடியுமா? என்ற கேள்விக்கு இப்போதைக்கு வாய்ப்பில்லை என்பதே பதிலாக கிடைக்கிறது. அதாவது திறன் கண்ணாடியில் திரைக்கான அமைப்பு உருவாக்கப்படவில்லை. திறன் கண்ணாடியின் வில்​லை (lens) வழியாக தேவையான தரவுகளை பார்க்கக் கூடிய அனுபவத்தை பெற இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும்.

அடுத்த முக்கியமான ஒன்று என்னவெனில் எடை, அளவுக்குறைப்புதான். திறன் கண்ணாடியை அணிவது ஒரு சாதாரண ​மூக்குக் கண்ணாடியை அணிவதை போன்ற அனுபவத்தையே தரும். விஷன் புரோ கருவிகளின் முக்கிய குறைபாடான எடை, திறன் கண்ணாடிகளில் சரி செய்யப்பட்டிருக்கிறது. இந்த முதல் பதிப்பில் முழுமையான மிகை மெய்ம்மை (Augmented reality) அனுபவம் கிடைப்பது மிகவும் குறைவுதான்.

ஆனால் எதிர்காலத்தில் புகைப்படக் கருவிகள் பொருத்தப்பட்ட ஆப்பிள் ஏர்பாட்களை திறன் கண்ணாடிகளோடு இணைத்து பயன்படுத்தும் வாய்ப்பும் இருக்கிறது. இந்த புது ரக ஏர்பாட்கள், சுற்றுப்புற சூழலை அறிந்து அதற்கேற்றார்போல் பாடல்களை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருகின்றன. இவை திறன் கண்ணாடிகளுடன் இணைந்து வேலை செய்தால், நாம் இதுவரை எதிர்பா​ர்க்காத பல்வேறு அனுபவங்களை வழங்கும்.

ஆப்பிள் தனது வழக்கமான நடையில் படிப்படியாக இந்த தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது போலத்தான் தெரிகிறது. முதலில் எளிமையான திறன் கண்ணாடி, பின்னர் முழுமையான மிகை மெய்ம்மை அனுபவம். பயனர்கள் சிறிது சிறிதாக பழக்கப்படுத்திக்கொண்டு, அதன்பின்னர் முழுமையாக தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியும்.

ஆப்பிள் திறன் கண்ணாடியின் வெளியீட்டிற்கு பின்னரே அதன் முழு பயன்பாடுகளைப் பற்றி அறிந்துகொள்ள முடியும். அது வரை காத்திருப்போம்.

  • மு. இசக்கிமுத்து

பிளூம்பெர்க் தளத்தில் வெளியான செய்தி

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now