கூகுள் குறுஞ்செய்தி பயன்பாடு

கூகுள் குறுஞ்செய்திகள் செயலியில் பெரும்பாலும் எந்த மாதிரியான செய்திகளை பெறுகிறோம். வங்கிக் கணக்கு பற்று வரவுகள், ஒருமுறை பயன்பாட்டு கடவுச்சொற்கள் (OTP), ஏராளமான விளம்பரங்கள் , தரவு பயன்பாட்டு எச்சரிக்கைகள் போன்றவற்றையே பெறுகிறோம். இவற்றை நீக்குவதும், பராமரிப்பதும் பெரிய சுமையாக இருக்கிறது. கூகுள் குறுஞ்செய்திகள் என்பது கட்டணங்களையும், தகவல்களையும் மட்டுமே கொண்டிருக்கும் செயலியாக மாறிவிட்டது. இதை தவிர்த்து சிறந்த வழிகளில் பயன்படுத்துவது எப்படி என்பதற்கான விரிவான வழிமுறைகளை வழங்கியிருக்கிறோம்.

செய்திகளை திட்டமிட்டு அனுப்பலாம்

நண்பர்களின் பிறந்தநாளோ அல்லது முக்கியமான நாள்களோ அவ்வபோது நினைவுக்கு வரும். ஆனால் தேவையான நேரத்தில் நினைவுக்கு வராது. அப்படியான நிலையில் என்ன செய்வது.? முதலில் நினைவுக்கு வரும்பொழுதே, கூகுள் குறுஞ்செய்தி செயலிக்குள் செல்ல வேண்டும். அதில் தட்டச்சு செய்வதற்கான பட்டை அருகே இருக்கும் கூட்டல்(+) குறீட்டை தொட்டால், திட்டமிடு (Schedule) என்று காண்பிக்கும். அதைத் தொட்டு தேவையான குறுஞ்செய்தியை பதிவிட்டு எந்த நாளில், நேரத்தில் அனுப்ப வேண்டும் என்ற தகவல்களையும் வழங்கிவிட்டால் எளிதாக அனுப்பிவிடலாம்.

அதன்பிறகு நீங்கள் மறந்தாலும், கூகுள் குறுஞ்செய்திகள் செயலி மறக்காமல் அனுப்பிவிடும். இதேபோல் வெளிநாடுகளில் இருக்கும் உறவினர்களுக்கு கூட குறுஞ்செய்திகளை அனுப்பலாம். பிரிந்து வாழும் உறவுகளுக்கு நேர வேறுபாட்டால் தகவல்களை தெரிவிக்க முடியாத இன்னலை இந்த அம்சம் தீர்த்து வைக்கிறது.

முக்கியமான உரையாடல்களுக்கு நட்சத்திரத்தை வழங்கலாம்

அவ்வபோது முக்கியமான உரையாடல்கள் எதையாவது நண்பர்களுடன் மேற்கோள்வோம். திடீரென வேலை ஏதேனும் வந்துவிட்டால், உரையாடலை மறந்துவிட்டு, பறந்துவிடும் பலர் உண்டு. பிறகு ஞாபகம் வந்து குறுஞ்செய்திகளை தேடினாலும் கிடைக்காது. அதனால் நாம் போகும்முன்னரே முக்கியமான உரையாடலுக்கு நட்சத்திர குறியீட்டை பதிவிட்டு (favourites) தொகுப்பில் சேர்த்துக்கொள்ளலாம். அடுத்த முறை செயலிக்குள் நுழையும்போது தேடுதல் பட்டை அருகே உள்ள நட்சத்திர குறியீட்டை தொடுவதன் மூலம் முக்கியமான உரையாடல்களை எளிதாக, உடனடியாக பார்க்க முடியும்.

குறுஞ்செய்திகளுக்கு தலைப்புகளை வைப்பது

எப்போதுமே ஏதோவொரு பணியில் இருப்பவர்களுக்குதான் அடுத்த அம்சம். பெரிய குறுஞ்செய்தியை படிப்பதற்கு முன்பு, ஒரு சிறிய அறிமுகம் அல்லது தலைப்பை படிப்பதன் மூலம் உள்ளடக்கத்தை புரிந்துகொள்ள முடிந்தால் எப்படி இருக்கும். அதைத்தான் உள்ளடக்கம் (Subject) அம்சம் வழங்கி வருகிறது. இதில்  குறுஞ்செய்தியின் எளிய உள்ளடக்கத்தை வழங்குவதன்மூலம் படிப்பவர்களுக்கு எளிதாக்க முடியும். இதைப்போன்ற பல்வேறு அம்சங்களை பற்றிய கட்டுரை ஒன்று ஆண்டிராய்டு போலீஸ் தளத்தில் வெளியாகியிருக்கிறது. அதற்கான இணைப்பை கீழே கொடுத்துள்ளோம்.

ஆண்டிராய்டு போலீஸ் தளத்தில் வெளியான கட்டுரை

  • மு. இசக்கிமுத்து
சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now