பாலத்துக்கு விஞ்ஞானி பெயர்

தமிழ்நாட்டின் கோயம்புததூர் மாவட்டத்தில் ரூ.1,621 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மேம்பாலத்திற்கு, இந்தியாவின் எடிசன் என அழைக்கப்படும் ஜி.டி.நாயுடுவின் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் எடிசன் என சொல்லும் அளவிற்கு என்ன செய்தார் ஜி.டி.நாயுடு? என்ற கேள்விக்கு அவர் கண்டுபிடித்து குவித்திருக்கும் அறிவியல் கண்டுபிடிப்புகளே ஆதாரம்.

கோவையின் கலங்கல் என்ற குக்கிராமத்தில் 1893ஆம் வருடம், மார்ச் 23ம் தேதியில் பிறந்தவர் ஜி.டி.நாயுடு. பள்ளிக்கூடத்தில் ஆரம்பக் கல்வி மட்டுமே பயின்ற ஜி.டி.நாயுடு பல கருவிகளை கண்டுபிடித்துள்ளார். இளம் வயது முதலே தொழில்நுட்பம் மீதான ஆர்வத்துடன்தான் வளர்ந்திருக்கிறார்.

ஓர் ஆங்கிலேயர் ஓட்டிச் சென்ற இருச்சக்கர வாகனம்தான் அவரது மனத்தை தொழில்நுட்பத்தின் பக்கம் திருப்பியிருக்கிறது. குதிரையோ, மாடோ பூட்டாமல் இந்த வண்டி எப்படி செல்கிறது என அப்போதே கேள்வி எழுப்பியிருக்கிறார்.  ஜவுளி, பருத்தி, பேருந்து தொழில்களில் ஈடுபட்டு முதலாளியாக வலம் வந்தார் ஜி.டி.நாயுடு. வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய தொடங்கிய பிறகே பல்வேறு தொழில்நுட்பங்களை கண்டுபிடித்துள்ளார்.

ஜெர்மனியில் அவருடைய முக்கியமான கண்டுபிடிப்பான ‘ரசன்ட்’ என்ற மின்சார சவரம் செய்யும் கருவியை உருவாக்கினார். ஐரோப்பாவிலேயே காப்புரிமையும் பெற்றார். பல்வேறு நிறுவனங்களும் காப்புரிமையை தங்களுக்கு தருமாறு கோரின. ஆனால் ஜி.டி.நாயுடு இந்தியாவுக்குதான் எனது கண்டுபிடிப்பு பயன்பட வேண்டும் என கூறினார். அதோடு இந்தியாவிலிருந்து முழுமையாக உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்தார்.

பிற கண்டுபிடிப்புகள்

பழச்சாற்றை திறம்பட எடுக்கும் கருவியை உருவாக்கினார்.

விவசாயத்திற்கு பயன்படுத்தும் மின் மோட்டாரை இந்தியாவிலேயே முதன்முறையாக தயாரித்தார்.

அன்றாடம் சாவி கொடுக்க வேண்டிய சுவர் கடிகாரங்களை மாற்றி, வாரத்தில் இரண்டு முறை சாவி கொடுத்தால் இயங்கும் சுவர் கடிகாரத்தை கண்டுபிடித்தார்.

உருளைக்கிழங்கில் உள்ள தோலை உரிப்பதற்காகவென ஒரு தனி கருவியையே கண்டுபிடித்தார்.

இந்தியாவில் வானொலி தயாரிப்பில் முன்னோடியாக விளங்கினார்.

திருத்த முடியாத வாக்குப் பதிவு இயந்திரத்தை உருவாக்கினார்.

சொந்தமாக பேருந்து நிறுவனம் வைத்து நடத்திவந்தார் ஜி.டி.நாயுடு. தானியங்கி பயணச்சீட்டு இயந்திரத்தையும் கண்டுபிடித்திருக்கிறார். இதே போல பல்வேறு புதுவித தொழில்நுட்பங்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட முக்கியக் காரணமாகவும் இருந்திருக்கிறார் ஜி.டி.நாயுடு என்ற ஜி.துரைசாமி.

இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அவரது பங்களிப்பு மறக்க முடியாதது. வெறும் ஆரம்பக் கல்வியுடன் தனது ஆர்வத்தாலும், உழைப்பாலும் பல அறிவியல் கண்டுபிடிப்புகளை செய்து “இந்தியாவின் எடிசன்” என்ற பட்டத்தை பெற்றவர் ஜி.டி.நாயுடு.

  • மு.இசக்கிமுத்து
சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now