விரைவில் பகிரும் கூகுள் சேவை (Quick Share) இனிமேல் ஐபோன் பயனர்களுக்கும் கிடைக்க இருக்கிறது. ஆண்டிராய்டு கருவிகளுக்கிடையே கோப்புகளைப் பகிர்வதற்கான இந்த வசதி, இனி ஆப்பிளின் ஐஓஎஸ் இயக்க முறைமையிலும் செயல்பட உள்ளது. அண்மையில் கிடைத்த தகவல்களின்படி, இந்த புதிய அம்சத்தின் செயல்பாடு குறித்த முதல் பார்வை வெளியாகியுள்ளது.

ஆண்டிராய்டு பயனர்கள் விரைவுப் பதில் குறியீடு முறையைப் பயன்படுத்தி ஐபோன் பயனர்களுடன் கோப்புகளைப் பகிர்ந்து கொள்ள முடியும். ஐபோன் பயனர் ஆண்டிராய்டு கருவியின் திரையில் காட்டப்படும் விரைவுப் பதில் குறியீட்டை ஸ்கேன் செய்து கோப்புகளைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த முறையில் பகிரப்படும் கோப்புகள் end-to-end குறியாக்கம் செய்யப்பட்டு, கூகுளின் சேவையகங்களில் பதிவேற்றம் செய்யப்படும்.
ஐபோன் பயனர்களுக்குப் பகிரப்படும் கோப்புகள் முதலில் மேகக் கணிமையில் பதிவேற்றம் செய்யப்பட்டு, 24 மணி நேரம் வரை சேமிக்கப்படும். இது நேரடியாக ஒரு கருவியில் இருந்து மற்றொரு கருவிக்கு நிகழும் பரிமாற்றம் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டிராய்டு கருவிகளுக்கிடையே பயன்படுத்தப்படும் நேரடி பரிமாற்ற முறையைப் போலல்லாமல், ஆண்டிராய்டில் இருந்து ஐஓஎஸ் கருவிகளுக்கு பரிமாற்றம் செய்யும்போது இணைய இணைப்பு அவசியம்.
தற்போது விரைவுப் பகிரும் சேவை விண்டோசு கணினிகள், ஆண்டிராய்டு கருவிகளுக்கு இடையே கோப்புகளைப் பகிர்ந்து இயங்கி வருகிறது. ஐபோனுக்கான ஆதரவு சேர்க்கப்பட்டால், பல்வேறு இயங்குதளங்களுக்கிடையே கோப்பு பரிமாற்றம் மேலும் எளிதாகும். ஆப்பிளின் ஏர்டிராப் (AirDrop) போன்று செயல்படும் இந்த சேவை, ஆண்டிராய்டு, ஐஓஎஸ் இயங்குதளங்களை இணைக்கும் பாலமாக அமையலாம். கூகுள் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- செல்லினம் குழு
