கூகுளின் செயற்கை நுண்ணறிவு கருவியான நோட்புக்எல்எம் (NotebookLM) வழியாக மொழி கற்றுக்கொள்வது எளிதாக இருக்கிறதாம். இணையத்தளம் ஒன்றில் தன்னுடைய அனுபவத்தைப் பயனர் ஒருவர் பகிர்ந்துள்ளார். நோட்புக்எல்எம் ஆய்வுக் கருவி மட்டுமல்ல, மொழி கற்றலுக்கும் சிறந்த துணையாக மாறியுள்ளது.

நோட்புக்எல்எம் என்பது பயனர்களின் ஆவணங்களை பகுப்பாய்வு செய்து, சிக்கலான விஷயங்களைத் தெளிவாக விளக்கும் செயற்கை நுண்ணறிவு மொழி மாதிரி. வலைத்தளக் கட்டுரைகள், காணொளிகள், PDF கோப்புகள் என பல்வேறு வகை உள்ளடக்கங்களைப் பதிவேற்றி, அவற்றுடன் உரையாடல் வடிவில் தொடர்பு கொள்ள முடியும். மாணவர்களுக்கு இது மெய்நிகர் பயிற்சியாளராகச் செயல்படுகிறது.
பயனர்கள் தங்கள் படிப்பு தொடர்பான கோப்புகளைப் பதிவேற்றி, கேள்விகள் கேட்டு பதில்களைப் பெறலாம். மேலும், வலையொலிபரப்பு (podcast) பாணியிலான ஒலிச் சுருக்கங்களை உருவாக்கும் திறன் கொண்டது. இது உண்மையான தகவல்களையும், சிக்கலான கருத்துகளையும் எளிமையாக விளக்குகிறது.
இக்கருவி இலவசமாகக் கிடைக்கிறது. ஜிமெயில் கணக்கு உள்ளவர்கள் யாரும் இதைப் பயன்படுத்தலாம். பல மொழிகளில் இதன் இடைமுகத்தைப் பார்க்க முடியும். மாணவர்களுக்கு உடனடியாக குறிப்பு அட்டைகள், வினாத்தாள்கள், தொழில்முறை அறிக்கைகள் போன்றவற்றை உருவாக்கித் தருகிறது.
வகுப்பு உள்ளடக்கங்கள், பாடநூல் பகுதிகள், சொந்த குறிப்புகள் ஆகியவற்றைப் பதிவேற்றி நோட்புக்குகளை உருவாக்கலாம். இதன் உரையாடல் இடைமுகம் வழியாக கேள்விகள் கேட்டு, பதிவேற்றிய ஆதாரங்களிலிருந்து பதில்களைப் பெறமுடியும். இக்கேள்விகள் எளிமையானவையாகவோ அல்லது கருத்துசார்ந்தவையாகவோ இருக்கலாம். மொழி கற்றலுக்கு இக்கருவி தனிப்பட்ட அனுபவத்தை வழங்குகிறது.
பயனர் ஒருவரின் அனுபவத்தைக் கீழே கொடுத்திருக்கிறோம்.
“புதிய மொழி கற்பது எளிதான காரியமல்ல. புத்தகங்கள், செயலிகள், காணொளிகள் என எதுவும் நிரந்தரத் தீர்வாக அமையவில்லை. இந்நிலையில், ஸ்பானிஷ் மொழிப் பயிற்சியாளராக கூகுள் நோட்புக்எல்எம் (NotebookLM) செயலியை ஒரு வாரம் பணியாற்ற வைத்ததில் கிடைத்த அனுபவம் முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது.
கற்றல் திட்டத்தை அமைப்பது மிக எளிது. ஸ்பானிஷ் மொழி வழிகாட்டிகள், இலக்கணப் பட்டியல்கள், யூடியூப் காணொளிகள் ஆகியவற்றைப் பதிவேற்றியதும், நோட்புக்எல்எம் ஏழு நாள் கற்றல் திட்டத்தை உருவாக்கித் தந்தது. முதல் நாள் அடிப்படை சொற்றொடர்கள், இரண்டாம் நாள் எண்கள், நேரம், மூன்றாம் நாள் வினைச்சொற்கள், நான்காம் நாள் உரையாடல் பயிற்சி, ஐந்தாம் நாள் வாசிப்பு, ஆறாம் நாள் எழுத்துப் பயிற்சி, ஏழாம் நாள் தன்மதிப்பீடு என அமைந்தது.
படிப்பு வழிகாட்டி அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. முக்கியமான சொற்களை வரையறைகளுடன் தொகுத்தது. இலக்கண விதிகளை எளிமையாக விளக்கியது. விரைவான வினாத்தாள், பதில்கள் ஆகியவற்றை வழங்கியது. திறன்பேசியில் சில நிமிடங்களில் திரும்பப் பார்க்க ஏதுவாக இருந்தது.
மன வரைபடம் (Mind map) அம்சம் புதிய சொற்கள், சொற்றொடர்களை மனப்பாடம் செய்யும்போது குழப்பத்தைத் தீர்த்தது. நீண்ட பட்டியல்களுக்குப் பதிலாக, வாழ்த்துகள், அறிமுகங்கள், விடைபெறும் சொற்கள் போன்றவை மன வரைபடத்தின் கிளைகளாகத் தோன்றின. வினைச்சொல் மாற்றங்களும் காட்சிப் படமாகத் தெளிவாகத் தெரிந்தன.
ஒலிக்கற்றல் வழிமுறை மிகவும் வியப்பான அம்சம். ஒவ்வொரு நாளின் கற்றல் குறிப்புகளையும் வலைபரப்பு பாணியில் ஒலித் துணுக்காக மாற்றியது. நடைப்பயிற்சி, பயணம் போன்ற நேரங்களில் கேட்டு கற்றுக்கொள்ள முடிந்தது. உண்மையான பயிற்றுவிப்பாளரின் குரல் நயம் இல்லை என்றாலும், மறுபரிசீலனைக் கருவியாக மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
காட்சி முறையில் கற்போருக்கு ஏற்றது காணொளி அம்சம். வாசிப்புக்குப் பதிலாக, குறுகிய காணொளிகளில் முக்கியக் கருத்துகள் விளக்கப்பட்டன. வினைச்சொல், வாக்கிய அமைப்பு பற்றிய காணொளி எளிமையான சொற்றொடர்களை எவ்வாறு உருவாக்குவது என்று தெளிவாக விளக்கியது. பல நாள்கள் உரை வடிவில் படித்த பின், காணொளி வடிவம் புத்துணர்ச்சி அளித்தது.
ஒரு வாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிகம் கற்றுக்கொள்ள முடிந்தது. செயற்கை நுண்ணறிவு மொழி மாதிரி மூலம் கற்றல் எளிமையாகவும் தனிப்பட்டதாகவும் அமைந்தது. புலமை அடையவில்லை என்றாலும், அடிப்படை கற்றல் நிறைவானது. உண்மையான உரையாடல், மொழி சூழலுக்கு மாற்றாக இல்லை என்றாலும், கட்டமைக்கப்பட்ட பயிற்சியாளராக மிகவும் பயனுள்ளதாக இருந்தது.”
இவ்வாறு அந்தப் பயனர் தன் அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
- செல்லினம் குழு
மொழிப்பயிற்சியாளர் அனுபவம் கட்டுரை
