இன்றைய நவீன காலத்தில், இசை கேட்கும் சேவைகள் நம் அன்றாட வாழ்க்கையின் இன்றியமையாத அங்கமாகி விட்டன. உலகின் முன்னணி தளமான ஸ்பாடிஃபை போலவே பல்வேறு தளங்கள் தனித்துவமான இசை அனுபவத்தையும் கலைஞர்களுக்கு ஏற்ற வசதிகளையும் வழங்கி ரசிகர்களை ஈர்த்துள்ளன.
அந்த வகையில். அமேசான் மியூசிக் கோடிக்கணக்கான பாடல்களையும் பாட்காஸ்ட்களையும், சிறந்த பாடல் தொகுப்புகளையும் பயனர்களுக்கு வழங்குகிறது. இது அலெக்சா கருவியுடனும் பிரைம் சேவையுடனும் எளிதில் இணைந்து செயல்படுகிறது. அமேசான் மியூசிக் அன்லிமிடெட் போன்ற முதல் தர பதிப்புகள் உயர் தர ஒலியையும் இணையம் இல்லாவிட்டாலும் பாடல்கள் கேட்கும் வசதியையும் வழங்குகின்றன.
ஆப்பிள் மியூசிக் 2015 இல் அறிமுகமானது. அழகான வடிவமைப்பு, உலகளாவிய இசை நூலகம், இழப்பில்லா ஒலித் தரம் கொண்டது. ஐபோன், மேக் மற்றும் சிரி போன்ற கருவிகளுடன் இணைந்து செயல்படுகிறது. பாடல்களை விளம்பரமில்லாமல் கேட்கும் அனுபவத்தை பயனர்களுக்கு கொடுக்கிறது.
டீசர் (Deezer) பிரான்சில் 2007 இல் அறிமுகமானது. 90 மில்லியனுக்கும் மேற்பட்ட பாடல்கள், வானொலி சேவைகள் கொண்ட இசை ஒலிபரப்புத் தளம். இதன் முக்கியமான அம்சமான ப்லொவ் (Flow) எனும் செயற்கை நுண்ணறிவு, பயனரின் விருப்பத்தை அறிந்து தொடர்ந்து பாடல்களை வழங்குகிறது. எளிய இடைமுகமும் உயர் தர ஒலி வடிவங்களும் இசையை ஆர்வமுள்ளவர்களுக்கு தனித்துவமாக அனுபவிக்க வாய்ப்பு அளிக்கின்றன.
உயர் தர ஒலியும் பல்வேறு கருவிகளில் கேட்டுகம் வசதியும் கொண்டுள்ள டைடல் உண்மையான இசை அனுபவத்தை தருகிறது. பல புகழ்பெற்ற கலைஞர்களான, பியான்ஸ், ரியான்னா, மாதோனா போன்றோர் வெளியிடும் தனித்துவமான சிறப்பு பாடல்தொகுப்புகள், உள்ளடக்கங்கள் டைடலில் மட்டுமே கிடைக்கின்றன, கலைஞர்களுக்கு நியாயமான வருமானம் வழங்கப்படுவது இதன் முக்கியமான அம்சமாகும், இதனால் அவர்கள் தங்கள் படைப்புகளை மேலும் உற்சாகமாக உருவாக்க முடிகிறது.

யூடியூப் மியூசிக், பாடல்களையும் காணொளிகளையும் ஒரே இடத்தில் இணைத்து, செயற்கை நுண்ணறிவுப் பரிந்துரை இயந்திரம் மூலம் பயனரின் விருப்பப்படி பாடல்களை பரிந்துரைக்கிறது. பாடல் வகைகள், நேரடி நிகழ்ச்சிகள், ரீமிக்ஸ்கள் என பயனருக்கு தனி அனுபவத்தை தருகின்றன.
பாண்ட்காம்ப் 2008 இல் தனிநபர் கலைஞர்களுக்கான தளமாக அறிமுகமானது. கலைஞர் உரிமைகள் பாதுகாப்பும் வெளிப்படையான வருவாய் பகிர்வும் ரசிகர்களுடன் நேரடி தொடர்பும் இந்த தளத்தின் சிறப்புகள். இதன் மூலம் கலைஞர்கள் நியாயமான வருமானத்தைப் பெற முடியும், மேலும் சிறிய இசைத் தொகுப்புகளை எந்த சந்தாவும் இல்லாமல் கேட்கும் வசதியும் கிடைக்கிறது.
ஜெர்மனியில் 2007 இல் தொடங்கப்பட்ட சவுண்ட்கிளவுட், தனிநபர் கலைஞர்கள் தங்கள் பாடல்களை பகிர்ந்து புதிய திறமைகளை வெளிப்படுத்த உதவும் தளம். சுதந்திரமான படைப்புத் தளமான இது, புதிய கலைஞர்களை கண்டுபிடிக்கும் வாய்ப்பை உருவாக்கிக்கொடுக்கிறது.
2002 இல் இங்கிலாந்தில் தொடங்கப்பட்ட லாஸ்ட்.எஃஎம், இசை கண்டுபிடிப்பில் முன்னோடி. இதன் ஸ்க்ரோப்ளிங் (scrobbling) அம்சம் பயனரின் கேட்கும் பழக்கத்தை பதிவு செய்து அதற்கேற்ப பாடல்களை பரிந்துரைக்கிறது. இது சமூக வலைத்தளமாகவும் செயல்படுகிறது, பயனர்கள் தங்கள் இசை விருப்பங்களை இதில் பகிரலாம். இப்போது இது இசை புள்ளிவிவரத் தளமாகவும் கருதப்படுகிறது.
ஒவ்வொரு தளமும் தனித்துவமான அனுபவத்தை வழங்குகின்றன. பாடல்களின் தரம், கலைஞர்களுக்கு நேரடி ஆதரவு ஆகிய அம்சங்களில் ஒவ்வொரு இசை ஆர்வலரும் தங்களுக்கு உகந்த தளத்தை தேர்ந்தெடுத்து விருப்பப் பாடல்களைக் கேட்டு மகிழலாம்.
- அருட்செல்வம்
