விழிப்புணர்வு உண்டாக்கும் பொம்மை

குழந்தைகளின் திரை நேரத்தைப் பயனுள்ளதாக்க கூகுள் பயிலரங்கத் திட்டம் ஒன்றைக் கொண்டுவரவுள்ளது. தொழில்நுட்ப விழிப்புணர்வை முன்னிறுத்துகிறது இத்திட்டம்.

1969 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் செஸமி ஸ்ட்ரீட்  (Sesame Street) என்ற ஒரு புதிய தொலைக்காட்சி நிகழ்ச்சி பிறந்தது. உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான குழந்தைகளின் கல்வி வாழ்க்கையில் ஒரு புரட்சியாக மாறியது. அக்காலக்கட்டத்தில் குழந்தைகளுக்கு எழுத்துகள், எண்கள், அன்பு, நட்பு, மரியாதை போன்ற வாழ்க்கையின் அடிப்படை பாடங்களை கற்றுத் தந்தது.

மரபான வகுப்பறைகளில் அமைதியாக அமர்ந்து கேட்பதற்கு பதிலாக, செஸமி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி ​மூலம்,  விளையாட்டு, பாடல்களுடன் குழந்தைகள் கற்றுக் கொண்டார்கள். கல்வி என்பது சுமை அல்ல, மகிழ்ச்சி. ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானவர், சிறப்பானவர் என்ற நம்பிக்கையை விதைக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக லட்சக்கணக்கான குழந்தைகளின் முதல் ஆசிரியராகவும், நண்பராகவும் இருந்து வருகிறது.

இந்நிலையில் செஸமி ஸ்ட்ரீட்  தொலைக்காட்சி நிகழ்ச்சியை பயன்படுத்தி, குழந்தைகளுக்கு தொழில்நுட்பம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முன்னெப்பை, Sesame Workshop என்ற அமைப்புடன் இணைந்து மேற்கொண்டிருக்கிறது கூகுள். குழந்தைகள் இளம் வயதிலிருந்தே தொழில்நுட்பம் பற்றிய முன்னெச்சரிக்கைகளோடு வளர்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதோடு தொழில்நுட்ப பயன்பாட்டில், உறவுகளுடன் அன்பாக இருப்பது பற்றியும் விளக்குகிறார்கள்.

Sesame.org/digitalwellbeing என்ற இணையதளத்தில் இது தொடர்பான வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. 2026 ஜனவரி முதல் யூட்யூபில் செஸமி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியின் காணொளிகள் ஒளிபரப்பப்படும் எனவும் கூகுள் அறிவித்திருக்கிறது. நூற்றுக்கணக்கான முழுமையான அத்தியாயங்களாக காணொளிகளை பதிவிடவும் கூகுள் திட்டமிட்டிருக்கிறது.

இதேபோல குழந்தைகள் மட்டுமில்லாமல் பெரியவர்களுக்கான இலவச தொழில்நுட்ப மேம்பாட்டு பாடநெறியும் உருவாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், சமூக சேவகர்கள், சுகாதார நிபுணர்கள், பராமரிப்பாளர்கள் உள்ளிட்ட பெரியவர்களுக்கான ஆரோக்கியமான பழக்கங்களை இது கற்பிக்கிறது.

தொழில்நுட்பம் நம் வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கும் இந்த காலகட்டத்தில், குழந்தைகளுக்கு இளம் வயதிலிருந்தே நல்ல பழக்கங்களை கற்றுக் கொடுப்பது மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்திருக்கிறது கூகுள். இதே போன்ற முன்னெடுப்புகளை பிற நிறுவனங்களும் மேற்கொண்டால், குழந்தைகள் நிச்சயம் தொழில்நுட்பத்தை அளவுடன் பயன்படுத்துவார்கள்.

  • மு.
Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now