நம்மில் பலருக்கும் இது ஒரு முறையாவது நடந்திருக்கும். நண்பருடன் ஏதோ ஒரு செய்தியைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்போம். சிறிது நேரத்தில் திறன்பேசியில் எந்த ஒரு செயலியைத் திறந்தாலும் அல்லது இணையதளத்துக்குச் சென்றாலும், நாம் பேசிய அதே தகவல் பற்றிய விளம்பரம் திரையில் தோன்றும். முதல்முறை இது நடக்கும்போது திடுக்கிட வைக்கும். “இது எப்படி நடக்கிறது?” என்று எண்ணத் தொடங்குவோம். யாரேனும் நமது திறன்பேசி மூலம் ஒட்டு கேட்கிறார்களோ என்ற அச்சம் கூட எழும்.

எனினும் கடந்த சில ஆண்டுகளாகத் தரவுப் பாதுகாப்பு ஒரு பெரிய பேசு பொருளாகி வருகிறது. இப்போது நம் கருவிகளில் எப்போது எந்த உணர்விகள் பயன்படுத்தப்படுகின்றன என்பதைக் காட்டும் குறியீடுகள் வந்துவிட்டன. அவற்றைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் கூடுதலாகக் கிடைக்கின்றன. அவற்றின் மூலம் ஒலி, ஒளி போன்றவை பதிவு செய்யப்படுகிறதா என்பதை அறிய முடியும். இருந்தாலும் விளம்பரம் பற்றிய அச்சம் யாருக்கும் தீர்ந்தபாடில்லை. இப்போது இன்ஸ்டாகிராமின் தலைமை செயல் அதிகாரி ஆடம் மொசெரி இந்தச் சிக்கலைப் பற்றி ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில் நாம் பேசும் செய்திகளுக்கான விளம்பரங்கள் ஏன் தோன்றுகின்றன என்பதை விளக்கியிருக்கிறார்.
“இன்ஸ்டாகிராம் உங்கள் உரையாடல்களை ஒட்டுக் கேட்பதில்லை. அப்படிச் செய்வது சட்டத்திற்கு எதிரான செயல். உண்மையிலேயே திறன்பேசி ஒட்டுக் கேட்கப்பட்டால், மின்கலம் வெகு வேகமாகத் தீர்ந்துபோகும். செயலியைத் திறக்காதபோதும் கூட ஒலிப்பதிவு பயன்பாட்டில் இருப்பதைக் காட்டும் குறியீடுகள் தெரியும். அப்படி ஏதாவது தெரிந்திருந்தால் நீங்கள் கவனித்திருப்பீர்கள் அல்லவா?” என்று பயனர்களிடம் கேட்கிறார் மொசெரி.
அப்படியானால் இன்ஸ்டாகிராம் ஒட்டுக் கேட்காமல், நமக்கான விளம்பரங்களை எப்படி இவ்வளவு சரியாகக் காட்டுகிறது? இதற்கு விடை எளிதானது. செயலி வழியாகச் சேகரிக்கப்படும் தரவுகள்தான் காரணம். மேலும் விளம்பர நிறுவனங்களுடனான தொடர்புகளும் ஒரு காரணம். இன்ஸ்டாகிராம் போன்ற செயலியில் கணக்கு உருவாக்கும்போதே நாம் பல தகவல்களைக் கொடுத்துவிடுகிறோம்.
இந்தத் தரவுகளை எல்லாம் செயலி சேகரித்துத் தன் விருப்பப்படி பயன்படுத்துகிறது. இது பலருக்கும் பிடிக்காத ஒன்று. இந்தத் தரவுகள் எல்லாம் நமக்குத் தேவையான பதிவுகளையோ விளம்பரங்களையோ காட்டப் பயன்படுத்தப்படுகின்றன. இந்தச் செயலிகளிலோ இணையதளங்களிலோ எதுவுமே தற்செயலானது அல்ல. அதிகமாக விரும்பி பார்ப்பது, பின்தொடர்வது போன்றவற்றை அடிப்படையாக கொண்டே விளம்பரங்கள் காண்பிக்கப்படுகின்றன. அதோடு, சில நேரங்களில் இது வெறும் தற்செயல் நிகழ்வாகவும் இருக்கலாம் என்று மொசெரி கூறுகிறார்.
ஒரு தளத்தையோ, கருவியையோ பயன்படுத்தும்போது தரவுகள் கண்காணிக்கப்பட்டுச் சேகரிக்கப்படுகின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்தத் தளங்கள் இலவசமாகப் பயன்படுத்தக் கிடைக்கின்றன, எனவே அவை பணம் ஈட்ட வழி தேட வேண்டியிருக்கிறது. அதனால் தரவுகள் சேகரிக்கப்படுகின்றன. எனவே நாம் செயலிகளை பயன்படுத்தும் விதத்தில்தான் அனைத்தும் அடங்கியிருக்கிறது.
- மு. இசக்கிமுத்து
