பல்வேறு நிறுவனங்கள் நீண்ட காலமாக திறன் கைக்கடிகாரங்களில் இரத்த அழுத்தத்தை கண்காணிக்கும் வசதியை இணைக்க முயன்று வருகின்றன. இப்போது கூகுளும் இந்தப் பட்டியலில் சேரப் போகிறது. பிக்சல் திறன் கைக்கடிகாரத்தில் இரத்த அழுத்த அறிவிப்பு வசதி வரவிருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி 4 திறன் கைக்கடிகாரம், இரத்த அழுத்தத்தை நேரடியாக அளக்கும் வசதியை ஏற்கெனவே வழங்கி வருகிறது. ஆனால் ஒவ்வொரு மாதமும் இரத்த அழுத்த சுற்றுப்பட்டை அல்லது ஸ்பைக்மோமனோமீட்டர் (cuff-type blood pressure monitor Or sphygmomanometer) என்ற இரத்த அழுத்தத்தை அளவிடும் கருவி மூலம் கடிகாரத்தை அளவீடு செய்ய வேண்டும். அப்படி அளவீடு செய்தால் மட்டுமே சரியான இரத்த அழுத்தத்தை காண்பிக்கும்.
இதற்கு மாற்றாக ஆப்பிள் வித்தியாசமான வழியைத் தேர்ந்தெடுத்தது. ஆப்பிள் கடிகாரம் தொடர் 9 மற்றும் அதற்குப் பிறகு வந்த ரகங்களில், பயனர்கள் நேரடியாக இரத்த அழுத்தத்தை அளக்க அனுமதிக்கப்படவில்லை. மாறாக, உயர் இரத்த அழுத்த அபாயம் இருக்கலாம் என்று எச்சரிக்கையை மட்டும் தருகிறது. சில திறன் கைக் கடிகாரங்கள் ஒளியியல் இதயத் துடிப்பு உணரி மூலம் இதயம் துடிக்கும்போது ரத்த நாளங்கள் எவ்வாறு மாற்றமடைகின்றன என்பதை ஆய்வு செய்து தரவுகளை வழங்குகின்றன.
கூகுளும் இப்போது இதே அணுகுமுறையைப் பின்பற்றத் தயாராகி வருகிறது. ஃபிட்பிட் செயலியின் சமீபத்திய பதிப்பு 4.53-ல், பிக்சல் கடிகாரம் மூலம் உயர் இரத்த அழுத்த பரிசோதனைக்கான ஆராய்ச்சி குறிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உயர் இரத்த அழுத்த கண்காணிப்பு செயல்பாட்டிற்கு “டைடல்” என்ற குறியீட்டுப் பெயர் வழங்கப்பட்டுள்ளது.
இதனை சோதனையாக மட்டுமே நடத்திக்கொண்டிருக்கிறது கூகுள். அதோடு பயனர்களும் இந்த ஆய்வில் பங்கேற்கலாம் எனவும் கூறியிருக்கிறது. பயனர்களின் இரத்த அழுத்த தரவுகளைக் கொண்டு, பிக்சல் கடிகாரத்தை மேம்படுத்த திட்டமிட்டிருக்கிறது. இந்த ஆய்வில் சேர விரும்புபவர்கள் முதலில் ஒரு கேள்வித்தாளை நிரப்ப வேண்டும். அதில் தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர்களின் பிக்சல் கடிகாரம் உணரி தரவுகளைத் தானாகவே சேகரிக்கும். சில பங்கேற்பாளர்கள் 24 மணி நேரம் இரத்த அழுத்த கண்காணிப்பு கருவியை அணிய வேண்டிய நிலை ஏற்படும். இதற்கு 50 டாலர் இழப்பீடு வழங்கப்படும் எனவும் கூகுள் அறிவித்திருக்கிறது.
உயர் இரத்த அழுத்த அறிவிப்பு தற்போதுள்ள எந்த பிக்சல் கடிகாரத்திற்கும் கிடைக்குமா அல்லது எதிர்காலத்தில் வரும் மாடலுக்கு மட்டுமா என்பது பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை. தரவு சேகரிப்பு தற்போதுள்ள வன்பொருளின் உணரிகளை அடிப்படையாகக் கொண்டது என்பதால், பழைய பிக்சல் கடிகாரங்களும் இந்த அம்சத்தைப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்றால், விரைவில் அனைத்து பிக்சல் திறன் கடிகார பயனர்களும் இரத்த அழுத்ததை எளிதாக அளவீடு செய்ய முடியும்.
- மு. இசக்கிமுத்து
