இனிமேல் யுஎஸ்பி கம்பி கிடையாது

கடந்த சில ஆண்டுகளாக திறன்பேசிகள் எளிமையாகவும் இலகுவாகவும் மாறிவருகின்றன. அவற்றைப்போலவே திறன்பேசி அட்டைபெட்டிகளும் சிறியதாக மாறிவருகின்றன. மின்னழுத்த மாற்றி (Charge adapter) வழங்க மறுக்கப்பட்டதுதான் அட்டை பெட்டிகளின் அளவு குறைந்ததற்கு காரணம். மின்னழுத்த மாற்றி இல்லாததையே பல்வேறு பயனர்கள் எதிர்த்து வருகின்றனர். இப்போது, யுஎஸ்பி கம்பிகளும் நிறுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தகவல்களை உறுதிபடுத்தியிருக்கிறது சோனி எக்ஸ்பீரியா 10 VII திறன்பேசி. இதன் பெட்டியில் யுஎஸ்பி-சி கம்பி போன்ற மின்னேற்றம் செய்வதற்கான எந்த ஒரு பொருளும் இல்லை. அந்த பெட்டியின் பின்புறத்தில் இது பற்றி தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சோனியின் இந்த நடவடிக்கைதான் தொழில்நுட்ப உலகில் புயலை கிளப்பியிருக்கிறது. ஏனெனில் மின்னழுத்த மாற்றி வழங்கப்படாதபோதே பெரும் சர்ச்சையை கிளப்பியது. சுற்றுச்சூழலைக் காப்பதே அதன் நோக்கம் என நிறுவனங்கள் மழுப்பினாலும், பயனர்கள் நம்பவில்லை. இவ்வளவு செலவு செய்து திறன்பேசி வாங்குகிறோம். மின்னேற்றம் செய்வதற்கு மின்னழுத்த மாற்றி வழங்க மாட்டீர்களா எனக் கேள்வி எழுப்பினர்.

சுற்றுச்சூழல் காரணம் உண்மையா?

நிறுவனங்கள் சுற்றுச்சூழல் காரணத்தை முன்வைக்கின்றன. அவர்களின் வாதம் என்னவென்றால், பெரும்பாலான பயனர்களிடம் ஏற்கனவே பல மின்னழுத்த மாற்றிகளும் யூஎஸ்பி கம்பிகளும் உள்ளன. ஒவ்வொரு திறன்பேசியுடனும் புதிய மின்னேற்றியும் கம்பியும் வழங்குவது தேவையற்ற மின்னணு கழிவுகளை உருவாக்குகிறது. இதனை நிறுத்துவதால் கார்பன் உமிழ்வும் குறையும் என்கின்றனர்.

அதே நேரத்தில், மின்னழுத்த மாற்றியை வழங்க மறுத்த நிறுவனங்கள், சந்தையில் தனியாக அவற்றை விற்பனை செய்துவந்தன. திறன்பேசியோடு தயாரித்து வழங்கினால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுவிடும், தனியாக தயாரித்து வழங்கினால் பாதிக்கப்படாதா என பயனர்கள் கேள்வி எழுப்பினர். மேலும், தனியாக விற்கப்படும் மின்னேற்றிகளால் கூடுதல் கார்பன் உமிழ்வுதான் ஏற்படுகிறது என்றும் பயனர்கள் கூறுகின்றனர்.

இப்போது மின்னழுத்த மாற்றியின் நிலை யுஎஸ்பி கம்பிக்கும் உருவாகியிருக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய ஏர்பாட்ஸ் 4 மற்றும் ஏர்பாட்ஸ் மேக்ஸ் ரகங்கள் ஏற்கனவே பெட்டியில் யுஎஸ்பி-சி கம்பியை சேர்க்காமல் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றை கம்பி இல்லாமலும் மின்னேற்றம் செய்ய முடியும் என்பதால், யுஎஸ்பி தேவையற்றதாகவே இருக்கிறது.

இப்போது சோனி நிறுவனமும் தனது திறன்பேசியில் அதையே செய்கிறது. இது தொடர்ந்தால், பிற தயாரிப்பு நிறுவனங்களும் இதைப் பின்பற்றும் வாய்ப்புள்ளது. சாம்சங், ஷாவோமி போன்ற முன்னணி நிறுவனங்களும் இந்த பாதையை பின்பற்றலாம் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன.

இது நடந்தால், நிறுவனங்களுக்கு பெருமளவில் இலாபமளிக்கும். திறன்பேசிகளுடன் வழங்கப்படாமல், தனியாக சந்தையில் விற்பனை செய்யப்பட்டால், தரமான யுஎஸ்பி கம்பிகளின் விலை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

யுஎஸ்பி கம்பி இல்லாததால் திறன்பேசிகளின் விலை குறைவது போன்ற பிம்பமும் உருவாகும். ஆனால் அதற்கு இருமடங்கு விலையை நிறுவனங்கள், தனியாக சந்தையில் விற்பனை செய்வதன்​மூலம் பெற்றுவிடும் வாய்ப்புள்ளது.

ஒருவேளை இனி அனைத்து திறன்பேசிகளும் யுஎஸ்பி கம்பி இல்லாமல் வெளிவந்தால் பயனர்கள் கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றலாம்.

1. பழைய கம்பிகளை பயன்படுத்துதல்: நீங்கள் ஏற்கனவே யுஎஸ்பி-சி கம்பிகளை வைத்திருந்தால், அவற்றை தொடர்ந்து பயன்படுத்தலாம். பெரும்பாலான யுஎஸ்பி-சி கம்பிகள் எல்லா கருவிகளுடனும் பொருந்தும்.

2. அனைத்துக்கும் பொருந்தும் கம்பிகள்: நல்ல தரமான, பல வித ​மின்னேற்ற வேகம் கொண்ட திறன்பேசிகளை ஆதரிக்கும் அனைத்துக்கும் பொருத்தமான யுஎஸ்பி-சி கம்பிகள் கிடைக்கின்றன. ஒரு முறை இதை வாங்கினால் நீண்ட காலம் பயன்படுத்தலாம்.

3. மூன்றாம் தரப்பு தயாரிப்புகள்: அங்கர், பெல்கின், யூகிரீன் போன்ற நம்பகமான தயாரிப்புகள் குறைந்த விலையில் தரமான கம்பிகளை வழங்குகின்றன.

4. அதிவேக மின்னேற்றம் தேவையா என சரிபார்க்கவும்: உங்கள் திறன்பேசி 65W, 100W போன்ற அதிவேக மின்னேற்றத்தை ஆதரித்தால், அதற்கேற்ற கம்பியை வாங்குவது முக்கியம். சாதாரண கம்பிகள் மெதுவாக மட்டுமே சார்ஜ் செய்யும்.

இந்த மாற்றங்கள் தேவையா என்பது உங்களின் பார்வையைப் பொறுத்தது. சிலருக்கு திறன்பேசியுடன் யுஎஸ்பி கம்பி தேவையில்லை என்று தோன்றலாம். ஏற்கனவே பல கம்பிகள் வீட்டில் இருப்பவர்களுக்கு இது பெரிய பிரச்சனையல்ல. அதே நேரத்தில் முதன்முதலாக திறன்பேசி வாங்குபவர்களுக்கும், தரமான கம்பிகள் இல்லாதவர்களுக்கும் இது அத்தியாவசிய தேவையாகவும் இருக்கலாம்.

நுகர்வோர் உரிமை ஆர்வலர்கள் இதை விமர்சிக்கின்றனர். விலையுயர்ந்த திறன்பேசி வாங்கும்போது அடிப்படை துணைக்கருவிகள் இல்லாமல் வழங்குவது நியாயமற்றது என்கின்றனர். குறிப்பாக இந்தியா போன்ற வளரும் நாடுகளில், அனைவரிடமும் கூடுதல் கம்பிகள் இருக்காது என்பதை சுட்டிக்காட்டுகின்றனர்.

மறுபுறம், தொழில்நுட்ப ஆர்வலர்கள் இது நல்ல நகர்வு என்கின்றனர். தேவையற்ற கழிவுகளை குறைப்பது நல்லது, பயனர்கள் தங்கள் தேவைக்கேற்ற தரமான கம்பிகளை தேர்வு செய்யலாம் என்கின்றனர்.

  • மு. இசக்கிமுத்து

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now