பிழையின்றி நல்ல தமிழில் எழுத வேண்டும் என்று எல்லாத் தமிழார்வலர்களுக்கும் ஓர் அவா இருக்கும். ஆனால் பிழைகளைச் சுட்டிக் காட்டுவதில் பலர் தயக்கம் காட்டுவார்கள். அந்தத் தயக்கத்தைப் போக்கி அனைவரும் இணைந்து தமிழை வளர்க்க, பிழைகளைச் சுட்டிக் காட்ட ஊக்கப்படுத்தும் போட்டியே இந்தத் “தமிழ்வேட்டை”. இதன் மூலம் பிழையோடு தமிழை எழுதியவர், இனிமேல் தவிர்க்க முனைவார்கள். பார்வையாளர்களுக்கு இது கற்றுக்கொள்ளும் வாய்ப்பாகவும் இருக்கும். நல்ல தமிழில் எழுத, சமூகமாக ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

இப்போட்டியைத் தமிழ் அநிதம் என்கிற அறக்கட்டளையும் வாணி பிழை திருத்தி என்கிற இணையத்தளமும் இணைந்து நடத்துகிறார்கள். இதில் யார் வேண்டுமானலும் கலந்து கொள்ளலாம். #Tamilvetttai என்கிற குறிச்சொல்லிட்டு அவரவர் தங்கள் சமூகத் தளங்களில் எங்கு வேண்டுமானாலும் சுட்டிக் காட்டலாம்.
எந்த வகை ஊடகமோ அமைப்போ தவறவிடும் பிழைகளைச் சுட்டிக் காட்டலாம். நாம் தினமும் வாசிக்கும் செய்தித்தாள்கள், செய்தித்தளங்கள், பார்க்கும் தொலைக்காட்சிகள், காணொளிகள், அமைப்புகளின் செய்தி அறிக்கைகள், சுவரொட்டிகள், அறிவிப்புப் பலகைகள் என்று தமிழில் எழுதப்பட்டுள்ள இடங்களிலும் எழுத்துப்பிழையை அடையாளம் காணலாம். தனிநபர் தங்கள் பதிவுகளில் செய்யும் பிழைகள் இதில் கணக்கில் வராது.
போட்டிக் காலமான ஐப்பசி மாதத்தில் அதாவது அக்டோபர் 18 முதல் நவம்பர் 16 வரை ஏற்பட்ட பிழைகளாக இருக்கவேண்டும்.
கடந்த ஆண்டு சுமார் நான்காயிரத்து ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட பிழைகள் சுட்டிக் காட்டப்பட்டன. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மின்னஞ்சல் வழியில் போட்டியில் 36 போட்டியாளர்கள் பங்கெடுத்தனர். பல ஊடகவியலாளர்கள் இதில் சுட்டிக் காட்டப்படும் பிழைகளைத் தங்கள் குழுவினரிடம் பகிர்ந்து எதிர்காலத்தில் தவிர்க்க முனைப்பு காட்டினர். தொழில்நுட்பத்தில் இது போலப் பிழை சுட்டிக் காட்டும் போட்டிகள் நிகழ்வது இயல்பு. அதை மொழி வளர்ச்சிக்குப் பயன்படுத்தும் வகையில் இப்போட்டி உருவாக்கப்பட்டுள்ளது. இது வெறும் போட்டியாக மட்டுமில்லாமல் ஒரு கற்றல் இயக்கமாக மாற்றுவதே இதன் நோக்கம்.
எந்த நாட்டிலிருந்தும் கலந்து கொள்ளலாம் ஆனால் பரிசுப் பணம் இந்திய மதிப்பில் மட்டுமே வழங்கப்படும்.
- செல்லினம் குழு
