சந்திப்பை அழகாக்கும் கூகுள்

கூகுள் மீட் (Google Meet) செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான அழகுபடுத்தும் பயன்பாட்டை இணைய, திறன்பேசிப் பதிப்புகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. திடீரென காணொளி அழைப்புக்கு தயாராக இல்லாத நேரங்களில் இது உதவியாக இருக்கும்.

அக்டோபர் 8 அன்று அறிமுகமானது இந்த புதுப்பதிப்பு. இதில் 12 வகையான அழகுத் தோற்றங்களை வழங்குகிறது கூகுள். இயல்பான பாணி, அலுவலகத்துக்கு ஏற்ற தோற்றம் முதற்கொண்டு படைப்பூக்கத்துடன் பல்வேறு வகையான அழகுத் தோற்றங்கள் வரை தேர்வு செய்யலாம். கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட “Touch-up” கருவியின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக இது செயல்படுகிறது.

Google Meet

புதிய அம்சம் மெய்நிகர் அடித்தளம், உதட்டுச்சாயம் போன்றவற்றைப் பயன்படுத்த அனுமதிக்கிறது. நீங்கள் நகரும்போதோ, காபி குடிக்கும்போதோ கூட இந்த விளைவுகள் நிலையாக இருக்கும். “செயற்கை நுண்ணறிவு அமைப்பு ஒவ்வொருவரின் தனித்துவமான முக அமைப்புக்கும் ஏற்ப மாற்றியமைக்கப்படுகிறது. இது வடிகட்டி போல் தோன்றாமல் இயல்பாகவே காட்சியளிக்கும்.” என்று கூகுள் தன்னுடைய செய்திக் குறிப்பில் தெரிவத்துள்ளது.

அலுவலகம் வராமல் வீட்டில் இருந்து பணிபுரிவது பல பலன்களை அளித்தாலும், குறுகிய அறிவிப்பில் காணொளி அழைப்பு வரும்போது பலர் சங்கடப்படுவார்கள். இந்தப் புதிய கருவி அத்தகைய தருணங்களில் நேரத்தைச் சேமிக்கும்.

அழைப்பிற்கு முன்னரோ, நடக்கும்போதோ இந்த அம்சத்தை இயக்கலாம். முன்னிருப்பாக இது முடக்கப்பட்டிருக்கும். நீங்கள் தேர்ந்தெடுத்த தோற்றம் அடுத்த கூட்டத்திற்கும் சேமிக்கப்படும். எனவே முக்கியமான கூட்டங்களுக்கு முன் அமைப்புகளைச் சரிபார்ப்பது நல்லது.

இது Workspace Business Standard, Plus, Enterprise பதிப்புகள், Education Plus, கற்பித்தல் கூடுதல் சேவை, Google One செலுத்தும் சந்தாதாரர்களுக்குக் கிடைக்கிறது. அனைத்து கணக்குகளுக்கும் இரண்டு வாரங்களில் இந்த புதுப்பிப்பு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்கள்.

  • செல்லினம் குழு
சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now