பெரும் எதிர்பார்ப்புகளுக்கு நடுவில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் விண்டோஸ் 11 25எச்2 புதிய பதிப்பை வெளியிட்டிருக்கிறது. இது வெறும் மென்பொருள் புதுப்பிப்பு மட்டுமல்ல, மாறிவரும் கணினி உலகிற்கு ஏற்ப, செயற்கை நுண்ணறிவு, பயனர் அனுபவம் ஆகியவற்றில் முக்கியமாக கவனம் செலுத்தியிருக்கிறது.

இந்த புதிய இயங்குதளம், அன்றாடம் பயன்படுத்தக்கூடிய விண்டோஸ் அனுபவத்தில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது என்பதைப் பார்ப்போம்.
முதலாவதாக, ஏற்கனவே 24எச்2 பதிப்பைப் பயன்படுத்துபவர்களுக்கு எளிமையான பதிவிறக்க வழிமுறையை அறிமுகப்படுத்தியிருக்கிறது மைக்ரோசாஃப்ட். இது விரைவாக புதிய பதிப்பை பதிவிறக்க உதவிபுரிகிறது. இந்த முறை குறிப்பாக இணைய வேகம் குறைவாக உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
“ஹேய் கோபைலட்” (Hey Copilot) எனும் குரல் செயல்படுத்தல் அம்சம் இந்த புதுப்பிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. இனிமேல் “ஹேய் கோபைலட்” என்று சொன்னாலே செயற்கை நுண்ணறிவு உதவியாளர் செயல்படத் தொடங்கும். கோபைலட் உதவியாளர் செயல்பட தொடங்கியதும், ஒரு மணி ஓசை கேட்கும். திரையின் கீழ்ப்பகுதியில் ஒலிவாங்கியுடன் சிறிய பக்கம் தோன்றும்.
இப்போது கோபைலட்டிடம் பேசத் தொடங்கலாம், கேள்விகள் கேட்கலாம். “ஹேய் கோபைலட்” என்று சொல்லி உரையாடலைத் தொடங்குவதைப் போலவே, “குட்பை” என்று சொல்லி உரையாடலை முடிக்கவும் முடியும். சில விநாடிகள் செயல்பாடு இல்லாமல் இருந்தால், கோபைலட் தானாகவே அணைந்துவிடும். அப்போதும் மணி ஓசை கேட்டு, உரையாடல் முடிந்துவிட்டது என்பதை அறிவிக்கும்.
கைகளைப் பயன்படுத்தாமல் குரல் மூலமாகவே பல வேலைகளைச் செய்ய இந்த அம்சம் உதவும். சமையல் செய்யும்போது, எழுதும் போது, வண்டியோட்டும் போது அல்லது பிற வேலைகளில் ஈடுபட்டிருக்கும்போது இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அதோடு புதிய 64-பிட் இலகுவான கட்டளைவரி (command line) தொகுப்பாளரை இயல்புநிலையாக்கியிருப்பது(default) அடுத்த முக்கியமான மாற்றம். இது குறிப்பாக மென்பொருள் உருவாக்குபவர்கள், தொழில்நுட்பப் பயனர்களுக்கானது. இலகுவான இந்தத் தொகுப்பாளர் வேகமாகவும் திறமையாகவும் செயல்படுகிறது. கட்டளை வரியில் வேலை செய்பவர்களுக்கு இது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக அமையும்.
இந்த புதுப்பிப்பைப் பெறுவதற்கான எளிய வழிமுறையையும் மைக்ரோசாஃப்ட் வழங்கியுள்ளது. அமைப்புகள் பட்டியலுக்குச் சென்று, விண்டோஸ் புதுப்பிப்பு பகுதியைத் தேர்ந்தெடுத்து, புதுப்பிப்புகளைச் சரிபார்க்கவும் என்ற பொத்தானை அழுத்தினால் போதும். உங்கள் கருவி தயாராக இருந்தால், விண்டோஸ் 11 பதிப்பு 25எச்2ஐ பதிவிறக்கம் செய்து நிறுவும் விருப்பம் உடனடியாகத் தெரியும்.
- மு. இசக்கிமுத்து
