டியோலிங்கோ – கூகுள் – போட்டி

மொழிக் கற்றல் துறையில் டியோலிங்கோ செயலி நீண்ட காலமாக முன்னணியில் இருந்து வருகிறது. ஆனால் அதற்கு போட்டியாக கூகுள் தனது மொழிபெயர்ப்பு செயலியில் புதிய பயிற்சி முறையை (Practice Mode) அறிமுகப்படுத்தியிருக்கிறது. அதில் இலவசமாக தரமான மொழிக் கற்றல் வசதியையும் வழங்குகிறது.

பயன்படுத்தும் முறைகளும் எளிதாகத்தான் இருக்கின்றன. செயலியைத் திறந்ததும் எந்த மொழியைப் பயிற்சி செய்ய விரும்புகிறீர்கள் என்று கேட்கிறது. கடையில் உதவி கேட்பது, தெருவில் அறிமுகமானவரை வாழ்த்துவது போன்ற பல பயனுள்ள சூழ்நிலைகளுக்கான பயிற்சிகள் உடனடியாகக் கிடைக்கின்றன.

டியோலிங்கோவைப் போலவே இதுவும் விளையாட்டு முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, ஆனால் அதைவிடவும் மிகவும் எளிமையாகவே இருக்கிறது. இலக்குகள், அன்றாடச் செயல்பாடுகள், பயிற்சி செய்த சொற்கள் என ​மூன்று பக்கங்கள் காண்பிக்கப்படுகின்றன. டியோலிங்கோவில் தொடர்ச்சியான அறிவிப்புகள் பயனர்களுக்கு அனுப்பப்படும். ஆனால் கூகுள் கற்றல் முறையில் அது போன்ற எந்த ஓர் அறிவிப்பும் அனுப்பப்படுவதில்லை.

செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் பாடங்களை கற்பிக்கிறது கூகுள். ஒவ்வொரு சூழ்நிலையிலும் கேட்கும் திறன் அல்லது பேசும் திறனில் கவனம் செலுத்த விரும்புகிறீர்களா என்று தேர்வு செய்யும் வசதி உள்ளது. உடனடியாக அதற்கேற்றாற்போல் செயற்கை நுண்ணறிவு பாடத்தை மாற்றுகிறது.

கேட்கும் திறனுக்கான பாடத்தில், ஒலிப்பதிவை இயக்கி, கேட்ட சொற்களை பட்டியலிலிருந்து தேர்வு செய்ய வேண்டும். பின்னர் “எளிதாக்கு” அல்லது “கடினமாக்கு” என்ற பொத்தான்களைப் பயன்படுத்தி கேள்விகளின் தன்மையை மாற்றியமைக்க முடியும்.

பேசும் திறனுக்கான பாடத்தில், செயற்கை நுண்ணறிவுடனான உரையாடல் ​மூலம் கற்க முடியும். ஆரம்பநிலையில் உள்ளவர்களுக்கு குறிப்புகளை இயக்கிக்கொள்ளும் வசதியும் உள்ளது. பயனர்கள் விரும்பியதை உரையாடலில் கூறலாம், பதில்கள் பயனரின் பேச்சுக்கு ஏற்ப வடிவமைக்கப்படுகின்றன.

ஒரு குறி​ப்பிட்ட சூழலில் நீங்கள் பயிற்சி எடுத்துக்கொள்ள விரும்பினால் “உங்கள் சொந்த பயிற்சி சூழலை உருவாக்குங்கள்” என்ற அம்சத்தை பயன்படுத்தலாம். உதாரணமாக, கோலாலம்பூரிலிருந்து, பெனாகிற்கு செல்லப் போகிறவர்கள், “ரயில் நிலையத்தைக் கண்டுபிடிக்க உதவி கேட்பது” அல்லது “சரியான டிக்கெட் வாங்க உதவி கேட்பது” போன்ற சூழல்களை உருவாக்கிக் கொள்ளலாம். இது போன்று உங்களுக்கு தேவையான சூழலை உருவாக்கிக்கொள்ளலாம்.

டியோலிங்கோவில் ஒவ்வொரு மொழிக்கும் தெளிவான பாதை வகுக்கப்பட்டுள்ளது, கூகுள் மொழிபெயர்ப்பு செயலியில் அத்தகைய கட்டமைப்புகள் இன்னும் கொண்டுவரப்படவில்லை. தற்போது ஆங்கிலத்திலிருந்து பிரெஞ்சு, ஸ்பானிஷ் மொழிகள் மட்டுமே இதில் கிடைக்கின்றன.

இரண்டு செயலிகளும் வெவ்வேறு காரணங்களுக்காக பயன்படுபவை. பல மொழி கற்பவர்கள் இரண்டையும் சேர்த்துப் பயன்படுத்துவதே சிறந்த முறையாக கருதுகின்றனர். இலவசமாக, விளம்பரங்கள் இல்லாமல், செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் மொழி கற்பதற்கான இந்த புதிய வழி மொழிக் கற்றல் துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்

  • மு. இசக்கிமுத்து

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now