ஆண்டிராய்டு இயங்குதளத்தின் திரைப்பதிவு அம்சத்தில் கூகுள் பெரிய மாற்றங்களைக் கொண்டுவர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆண்டிராய்டு 11 இயங்குதளத்தில் 2020-ல்தான் முதன்முதலாக திரைப்பதிவு அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு முன்புவரை பயனர்கள் மூன்றாம் தரப்பு செயலிகளையே பயன்படுத்தினர்.
இந்த மூன்றாம் தரப்பு திரைப்பதிவு செயலிகள் பல வரம்புகளைக் கொண்டிருந்தன. எடுத்துக்காட்டாக, ஆண்டிராய்டு 10-ல் இயங்குதளத்தில் குறிப்பிட்ட API-ஐ சேர்க்கும் வரை, இவற்றால் செயலிகளின் உள் ஒலியைப் பதிவு செய்ய முடியவில்லை. மேலும் முக்கியமாக, இந்த செயலிகள் பாதுகாப்பு அச்சுறுத்தலை உருவாக்கின. தரவுகளைத் திருடும் வாய்ப்புகள்கூட அதிகமாக இருந்தன.
இந்த நிலையில்தான் ஆண்டிராய்டு தனது திரைப்பதிவுக் கருவி அம்சத்தை வழங்கியது. ஆண்டிராய்டு 15 இயங்குதளம் வெளியானபோது அதிக மேம்பாடுகள் செய்யப்பட்டன. திரைப் பதிவின் நீளத்தைக் காட்டும் நிலைப்பட்டை அம்சம் சேர்க்கப்பட்டது.
இந்த ஆண்டு ஆண்டிராய்டு 16 பதிப்பில் பெரிய மேம்பாடுகள் ஏதும் வரவில்லை. ஆனால் வெளிப்புற திரைகளைப் (external displays) பதிவுசெய்யும் வசதி சேர்க்கப்பட்டது. இது குறிப்பாக ஆண்டிராய்டின் புதிய கணினி பயன்பாட்டிற்கான தயாரிப்பாகும். இந்த பயன்பாடு திறன்பேசியுடன், கணினியை இணைக்க உதவுகிறது.
இந்தவேளையில்தான் திரைப்பதிவு அம்சத்தை முழுவதும் மீட்டுருவாக்கம் செய்யும் பணியில் கூகுள் ஈடுபட்டிருக்கிறது. அதில் பயனர்களின் பயன்பாட்டை எளிமைப்படுத்தும் வகையிலான அம்சங்கள் வரவுள்ளன. இந்த தகவல்கள் ஆண்டிராய்டு அத்தாரிட்டி தளத்தில் வெளியாகியுள்ளன.
திரைப்பதிவு செய்யும்போது புதிய கருவிப்பட்டை ஒன்று தோன்றும்வகையில் கூகுள் உருவாக்கிவருகிறது. இந்த புதிய கருவிப்பட்டை “செல்ஃபி கேமராவைக் காட்டு” என்ற புதிய விருப்பத்தை கொண்டிருக்கிறது. இது உங்கள் திரையைப் பதிவுசெய்யும்போது, முன்பக்க கேமராவிலிருந்து காணொளியையும் பதிவுசெய்ய அனுமதிக்கும். விளக்க காணொளிகள் போன்றவைற்றை உருவாக்குபவர்களுக்கு இந்த அம்சம் பயனுள்ள ஒன்றாக இருக்கும்.
அதோடு ஒரு குறிப்பிட்ட செயலியைப் பதிவுசெய்தல், தொடுதல்களைக் காட்டுதல், ஒலியைப் பதிவுசெய்தல் போன்ற அம்சங்கள் ஏற்கெனவே இருப்பதை போலவே அமைந்துள்ளன.
தற்போது, திரைப்பதிவை முடிக்கும்போது, காணொளி சேமிக்கப்பட்டுவிட்டதாக அறிவிப்பை திறன்பேசி அனுப்புகிறது. இந்த அறிவிப்பைத் தட்டினால், காணொளி மூன்றாம் தரப்பு செயலி மூலம் திறக்கும். ஏனெனில் ஆண்டிராய்டில் திரைப்பதிவுகளைப் பார்ப்பதற்கான சொந்த UI இல்லை.
ஆனால் புதிய மாற்றத்தில், திரைப்பதிவை முடித்ததும் நான்கு பொத்தான்கள் காண்பிக்கப்படும். மீண்டும் எடு (retake), அழி(delete), பகிர் (share), திருத்து (edit) என்ற பொத்தான்கள் மூலம் எளிதாக காணொளிகளை மாற்றியமைக்கலாம்.
இந்த அம்சங்களை அடுத்த ஆண்டு ஆண்டிராய்டு வெளியீட்டில் எதிர்பார்க்கலாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
- மு. இசக்கிமுத்து
ஆண்டிராய்டு அத்தாரிட்டி கட்டுரை
