தமிழ் மின்மரபுடைமைத் திட்டம். சிங்கப்பூர் தமிழர் கலைக்களஞ்சியம். சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் தமிழ் சமூகம் சார்ந்த இவ்விரு பெரும் திட்டங்கள் குறித்த விளக்க உரையும் கலந்துரையாடலும் ஞாயிற்றுக்கிழமை, 26 அக்டோபர் 2025-ஆம் நாள் கோலாலம்பூரில் நடைபெற்றது.
சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் தலைமைச் செயல் அதிகாரியான அருண் மகிழ்நன் தமிழ் மரபு மின்மரபுடைமைத் திட்டத்தின் பொறுப்பாளராகவும், சிங்கப்பூர்த் தமிழர் கலைக் களஞ்சியத்தின் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார்.
சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தின் தமிழ்ச் சேவைகள் பிரிவு தலைவரான, அழகிய பாண்டியன் சிங்கப்பூர்த் தமிழர் கலைக் களஞ்சியம் திட்டத்தின் துணை ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார்.
இவர்களைப் பற்றிய அறிமுகத்தை செல்லியல் இணைய ஊடக ஆசிரியர் இரா.முத்தரசன் வழங்கினார். பின்னர் இந்நிகழ்ச்சியைத் தமிழ் தொழில்நுட்பர், முரசு அஞ்சல், செல்லினம் நிறுவனர் முத்து நெடுமாறன் நெறியாளுநராக இருந்து வழிநடத்தினார். பல ஆண்டுகளுக்கு முன்பு கணினித் தமிழ் மாநாடு ஒன்றில் அருண் மகிழ்நனுடன் இணைந்து வேலை பார்த்ததை நினைவுகூர்ந்தார் முத்து நெடுமாறன். “தமிழ் என்பதால் இரண்டாம் நிலையில் வைத்து எண்ணாமல் உலகத் தரத்துடன் இந்த மாநாட்டை நடத்தவேண்டும்.” என்று அருண் மகிழ்நன் சொன்னதைக் குறிப்பிட்டு எப்போதும் அதே தரத்துடன் பணியாற்ற வலியுறுத்தும் அருண் மகிழ்நன், இத்திட்டங்கள் குறித்த தன்னுடைய அனுபவங்களையும், கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். அவரையடுத்து அழகிய பாண்டியனும் தன்னுடைய அனுபவத்தையும் இத்திட்டப் பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டன என்பதையும் எடுத்துரைத்தார்.
தமிழ் மின்மரபுடைமைத் திட்டம் (Tamil Digital Heritage Project-TDHP) என்பது 2013ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் 50வது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், 1965 முதல் 2015 வரை வெளியிடப்பட்ட சிங்கப்பூர் தமிழ் இலக்கியப் படைப்புகளை மின்னணுமயமாக்குவதற்காக அக்கறையுள்ள சிங்கப்பூரியர்களின் சிறிய குழுவொன்றால் உருவாக்கப்பட்டது. இது சிங்கப்பூரின் சுதந்திரத்தின் பொன்விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதி.
தமிழ் மின்மரபுடைமைத் திட்டக் குழுவின் தலைமையில் தேசிய நூலக வாரியத்துடன் (NLB) இணைந்து நடத்தப்பட்ட இந்த திட்டத்திற்கு தேசிய மரபு வாரியம், தேசிய கலைகள் மன்றம், தேசிய புத்தக மேம்பாட்டு குழுமம் உள்ளிட்ட அமைப்புகள் ஆதரவளித்தன. சுமார் 350 நூல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதில் 80 முக்கியமான தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்களின் படைப்புகள் இடம்பெற்றன. நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் உள்ளிட்ட பலவகையான படைப்புகள் இவற்றில் உண்டு.
இந்த திட்டத்தில் ஏறக்குறைய 250 தன்னார்வலர்கள் பங்கேற்றனர். அவர்களில் பெரும்பாலோர் தமிழ் ஆசிரியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்தின் மின்னணுமயக் காப்பகம் 2015 ஆகஸ்ட் 22 அன்று அப்போதைய துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்தினத்தால் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து, சிங்கப்பூர் தமிழ் நாடகம், இசை, நடனம் ஆகியவற்றின் மின்னணுமயக் காப்பகங்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடங்கப்பட்டன. நடனக் காப்பகம் 2019 நவம்பரில் திறந்துவைக்கப்பட்டது.
இதைப்போலவே மற்றொரு பெரிய திட்டமான சிங்கப்பூர் தமிழர் கலைக்களஞ்சியம் (EST) சிங்கப்பூரின் 60ஆம் ஆண்டு தேசிய தினத்தை முன்னிட்டு (SG60), தேசிய நூலக வாரியத்தின் 30வது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்துடன் வெளியிடப்பட்டது.
இக்கலைக்களஞ்சியம், சிங்கப்பூரில் தமிழ் சமூகத்தின் 200 ஆண்டுகால வாழ்க்கை, பங்களிப்புகள், மரபுகளை ஆவணப்படுத்தும் முதல் இருமொழி இணைய வளமாகும். இது 2025 ஆகஸ்ட் 2 அன்று சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்தினத்தால் தொடங்கி வைக்கப்பட்டது. சிங்கப்பூர்த் தமிழ் பண்பாட்டு மையமும் (CSTC), தேசிய நூலக வாரியமும் (NLB) இணைந்து உருவாக்கிய இந்த கலைக்களஞ்சியம் ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் கிடைக்கிறது, இது கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் அணுகக்கூடியதாக பயன்படுத்தத் தக்கதாக உள்ளது.
இஃது, வரலாற்று நிகழ்வுகள், கலைகள், சமூக அமைப்புகள், குறிப்பிடத்தக்க ஆளுமைகளை உள்ளடக்கிய 350க்கும் மேற்பட்ட பதிவுகளைக் கொண்டுள்ளது. இந்த திட்டம் மூன்று ஆண்டுகளில் 400க்கும் மேற்பட்ட தனிநபர்கள், 100 அமைப்புகளின் பங்களிப்பின் வழியாக உருவானது.
இவ்விரு திட்டங்கள் பற்றிய உரைக்குப் பிறகு இது பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது. கலந்துரையாடலுக்கு, மஇகா தேசியத் துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் சிறப்பு வருகை புரிந்தார்.
கோலாலம்பூர், மஇகா தலைமையகத்திலுள்ள நேதாஜி மண்டபத்தில் மாலை 6.00 மணி முதல் தேநீர் விருந்துபசரிப்புடன் நடந்த இந்நிகழ்ச்சியில் மொழியியல் வல்லுநர்களும், ஆர்வலர்களும் பங்கேற்றனர்.
- இசக்கிமுத்து.
சிங்கப்பூர் தமிழர் கலைக்களஞ்சியம்
தமிழ் மரபு மின்னணுமயத் திட்டம்
படங்கள்: நன்றி ராமேஸ்வரி ராஜா.








