உலகின் மிகச்சிறந்த நிறுவன அடையாளங்கள் பட்டியலில் ஆப்பிள் தொடர்ந்து பன்னிரண்டாவது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. மற்ற நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைச் சுற்றி பரபரப்பை உருவாக்கும் வேளையில், நம்பகத்தன்மையும் வடிவமைப்பும் இன்னும் முக்கியம் என்று ஆப்பிள் நிரூபித்துள்ளது.

இன்டர்பிராண்ட் (Interbrand) நிறுவனம் வெளியிட்டுள்ள சிறந்த உலகளாவிய நிறுவனங்கள் 2025 (Best Global Brands 2025) அறிக்கையில் ஆப்பிளின் நிறுவன அடையாள மதிப்பு $470.9 பில்லியன். இரண்டாம் இடத்தில் உள்ள மைக்ரோசாஃப்டை விட $80 பில்லியன் அதிகம். முதல் 100 நிறுவன அடையாளங்களின் மொத்த மதிப்பு 4.4% உயர்ந்து $3.6 டிரில்லியன் ஆகியுள்ளது.
ஆப்பிளின் மதிப்பு வெறும் ஐபோன், மேக் போன்ற தயாரிப்புகளில் மட்டும் இல்லை. அதன் உண்மையான வலிமை இறுக்கமாக இணைக்கப்பட்ட ஆப்பிள் சூழல்மண்டலத்தில் (Ecosystem) தான். இன்டர்பிராண்ட் ஆப்பிளை “மேகங்களுக்கு மேலான அடையாளம் கொண்ட நிறுவனம்” (Brand Above the Clouds) என்று விவரிக்கிறது. சந்தை ஏற்ற இறக்கங்களைப் பற்றிக் கவலைப்படாமல் அனைத்துக்கும் மேலே செயல்படும் நிறுவனம். பொதுவான வழிமுறைகளைப் பின்பற்றாமல் தன்னை தானே தீர்மானித்துக்கொள்ளும் அரிதான நிறுவனம் என்பதாக இதற்குப் பொருள்கொள்ளலாம்.
செயற்கை நுண்ணறிவு முகவர்கள் (AI Agents) மக்களுக்காக ஆராய்ச்சி செய்து வாங்கும் “ஏஜென்டிக் காமர்ஸ்” வழக்கம் தற்போது தொடங்கியுள்ளது. விளம்பரங்கள் அல்ல, வழிமுறைகள்தான் இனி முடிவுகளை வழிநடத்தும். “உங்கள் நிறுவன அடையாளம் இன்றியமையாததாக இல்லையென்றால், அது தூக்கி எறியப்படும்” என்று அறிக்கை எச்சரிக்கிறது.
போட்டியாளர்கள் வேகத்தையும் செயற்கை நுண்ணறிவையும் துரத்தும்போது, ஆப்பிள் கட்டுப்பாடு, தனியுரிமை, நிலைத்தன்மை மூலம் நம்பிக்கையை கட்டியெழுப்புகிறது. மக்கள் வெறும் தயாரிப்புகளை வாங்குவதில்லை – அந்த நிறுவனத்தின் அடையாளம் எதை முன்வைக்கிறதோ அதையும் வாங்குகிறார்கள்.
என்விடியாவின் (NVIDIA) மதிப்பு 116% உயர்ந்துள்ள நிலையில், ஆப்பிளின் சிறிய வீழ்ச்சி தோல்வி அல்ல – முதிர்ச்சி. புதுமையின் மூலம் அல்ல, நீடித்த நிலைத்தன்மை மூலம் வழிநடத்துகிறது. செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய போக்குகள் தலைப்புச் செய்திகளை கைப்பற்றும்போது கூட ஆப்பிள் முதலிடத்தில் இருப்பதற்கு இதுவே காரணம். இவ்வாறு அந்த அறிக்கை விளக்கமளித்து முதலிடத்தை ஆப்பிள் நிறுவன அடையாளத்துக்கு வழங்கியுள்ளது.
- செல்லினம் குழு
