கூகுள் நிறுவனம் தனது குயிக் ஷேர் (Quick Share) செயலியில் புதிய புதுப்பிப்பை வெளியிட்டுள்ளது. இது ஆண்டிராய்டு, ஐபோன் கருவிகளுக்கிடையே கோப்புகளை எளிதாகப் பகிர உதவும். ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்டிராப் (AirDrop) வசதியுடன் இணைந்து செயல்படும் இந்த வசதி, இரு தளங்களுக்கிடையேயான தடைகளை நீக்குகிறது.

இந்தப் புதுப்பிப்பில் சிறப்பு என்னவெனில், ஆண்டிராய்டு பயனர்கள் ஐபோனுக்கு கோப்புகளை அனுப்புவதைப் போல ஐபோன் பயனர்களும் ஆண்டிராய்டு காருவிகளுக்கு கோப்புகளை அனுப்ப முடியும். இருவழிப் பகிர்வு வசதி தற்போது பிக்ஸல் 10 தொடர் கருவிகளில் கிடைக்கிறது. விரைவில் பிற ஆண்டிராய்டு சாதனங்களுக்கும் விரிவாக்கப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது.
பயன்படுத்தும் முறை மிக எளிது. ஐபோன் பயனர்கள் வழக்கம்போல ஏர்டிராப் பயன்படுத்தினால் போதும், பிக்ஸல் 10 கருவி அவர்களின் பட்டியலில் தோன்றும். ஆண்டிராய்டு பயனர்கள் குயிக் ஷேரில் “அனைவரும் 10 நிமிடங்களுக்கு” எனும் விருப்பத்தைத் தேர்வு செய்ய வேண்டும். அல்லது “பெறு” பொத்தானைத் தட்டி தற்காலிகமாக கருவியைக் காணக்கூடியதாக மாற்றலாம்.
இனி வாட்சாப், டெலிகிராம் போன்ற செயலிகள் வழியாக மட்டுமே படங்களை அனுப்ப வேண்டிய அவசியமில்லை. நேரடியாக ஏர்டிராப் வழியாக உயர்தர படங்கள், கோப்புகளைப் பெறலாம். இது ஆப்பிள், கூகுள் என இரு வகையான கருவிகளும் வைத்துள்ள நண்பர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மிகப் பயனுள்ளதாக இருக்கும்.
பாதுகாப்பு விஷயத்தில் கூகுள் சிறப்புக் கவனம் செலுத்தியுள்ளது. நேரடி பியர்-டு-பியர் இணைப்பு முறையில் செயல்படுவதால், எந்த சர்வர் வழியாகவும் கோப்புகள் செல்வதில்லை. எந்தத் தகவலும் பதிவு செய்யப்படுவதில்லை என கூகுள் உறுதியளித்துள்ளது. பாதுகாப்பு வல்லுநர்கள் இதைச் சோதனை செய்து உறுதிப்படுத்தியுள்ளனர்.
எதிர்காலத்தில் ஆப்பிள் ஒத்துழைத்தால், “தொடர்புகள் மட்டும்” பயன்முறையையும் ஆதரிக்க திட்டமிட்டுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. இது தளங்களுக்கு அப்பாற்பட்ட கோப்புப் பகிர்வுக்கு ஒரு புதிய அத்தியாயமாகும்.
