சாட்ஜிபிடி ஒலி உரையாடல்!

ஓபன்ஏஐ அண்மையில் வெளியிட்டுள்ள குரல் பயன்முறை மேம்பாடு, சாட்ஜிபிடியைப் பயன்படுத்தும் முறையை சற்றே மாற்றியமைக்க வல்லது. இதுவரை குரல் வசதியைப் பயன்படுத்த நீல நிற கோளம் கொண்ட தனியான திரைக்குள் செல்ல வேண்டியிருந்தது. இப்போது அந்த வசதி நேரடியாக உரையாடலுக்குள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய வசதியின்படி, பேசும் தருணத்திலேயே நேரடி எழுத்துப்பதிப்பு தோன்றும், அதே நேரத்தில் சாட்ஜிபிடியின் குரல் பதிலும் தொடரும். பேசுவதிலிருந்து தட்டச்சிற்கும், தட்டச்சிலிருந்து மீண்டும் குரலுக்குமான மாற்றம் மிகவும் இயல்பாக நடக்கிறது. இந்த ஒருங்கிணைப்பு குரல் பயன்முறையை பல மடங்கு எளிதாக்கி விட்டது.

முன்பு குரல் உரையாடலுக்காக தனி அறை போன்ற இடைமுகம் இருந்தது. அங்கு பழைய செய்திகள் தெரியாது, தட்டச்சு செய்யவும் முடியாது. புதிய மேம்பாட்டுக்குப் பிறகு, நாம் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் உடனுக்குடன் எழுத்தாக மாறி உரையாடலில் தோன்றுகிறது. வானிலை, வரைபடம், தகவல்கள் எல்லாம் நிகழ்நேரத்தில் அதே உரையாடலுக்குள் வருகின்றன.

முந்தைய மிதக்கும் நீலக்கோள் இடைமுகத்தைப் பயன்படுத்த விரும்புவோர் அமைப்புகள் பகுதியில் ‘தனித் திரை பயன்முறை’ என்பதை இயக்கிக்கொள்ளலாம். ஆனால் புதிய ஒருங்கிணைந்த அனுபவம் மிகச் சிறப்பாகவும் இயல்பான ஓட்டத்துடனும் செயல்படுவதால், மீண்டும் பழைய முறைக்குச் செல்ல வேண்டும் என்ற தேவை குறைந்துவிடும்.

எடுத்துக்காட்டாக, “இப்போது வானிலை எவ்வாறு உள்ளது?” என்று கேட்டால், சாட்ஜிபிடி பதிலைச் சொல்வதோடு அடுத்த ஏழு நாள்களுக்கான தகவலையும் அட்டவணையில் காட்டும். இடம் தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தால், சரியான இடத்தைச் சொன்னவுடன் புதுப்பித்து நினைவில் வைக்கும். வரைபடங்களும் காட்டும், ஆனால் அவை நிலையான படங்கள் – கூகுள் வரைபடம் போல பெரிதாக்கிப் பார்க்க முடியாது.

கைப்பேசியில் தட்டச்சு செய்ய சிரமப்படும் பயனர்கள் பேசிக்கொண்டே தகவல்களைப் பெறுவதற்கு இந்த குரல் பயன்முறையை அதிகமாகத் தேர்வுசெய்கிறார்கள். குரல் மூலம் கேள்வி கேட்டு உடனடியாக பதில் பெறுவது இயல்பான அனுபவமாக மாறியுள்ளது.

  • அருட்செல்வம்
Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now