ஆய்வுக்கு உதவும் புதுச் செயலி

கூகுள் இலுமினேட் (Google Illuminate) என்பது ஆய்வுக் கட்டுரைகளை எளிமையான ஒலிவடிவ உரையாடல்களாக மாற்றும் செயற்கை நுண்ணறிவு கருவியாகும். சிக்கலான தொழில்நுட்ப ஆவணங்களை வாசிப்பதற்கு நேரமில்லாதவர்களுக்கும், கேட்டு புரிந்துகொள்ள விரும்புவோருக்கும் இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

Google Illuminate

கூகுளின் NotebookLM கருவியைப் போலவே இலுமினேட்டும் செயற்கை நுண்ணறிவு மொழி மாதிரியை பயன்படுத்தி வலைபரப்பு (podcast) பாணியிலான ஒலி உரையாடல்களை உருவாக்குகிறது. ஓர் ஆய்வுக் கட்டுரையின் இணைப்பை கொடுத்தவுடன், இரண்டு செயற்கை குரல்கள் அந்தக் கட்டுரையின் முக்கியமான கருத்துகளை எளிமையாக விளக்குகின்றன. இது ஒரு வல்லுநர் மற்றொரு வல்லுநரிடம் கேள்விகள் கேட்டு விளக்கங்கள் பெறுவது போன்ற அனுபவத்தை தருகிறது.

இலுமினேட்டைப் பயன்படுத்த, கூகுள் இலுமினேட் வலைத்தளத்திற்குச் சென்று உங்கள் ஜிமெயில் கணக்கு மூலம் உள்நுழையவும். உள்ளே நுழைந்தபின், நீங்கள் படிக்க விரும்பும் ஆய்வுக் கட்டுரையின் URL இணைப்பை கொடுக்கலாம் அல்லது உங்களுக்கு விருப்பமான தலைப்புகளை தேடலாம். ஐந்து நிமிட கால ஆடியோ உரையாடல் சுமார் முப்பது விநாடிகளில் தயாராகிவிடும்.

இக்கருவியின் சிறப்பு அம்சம், ஆடியோவுடன் முழுமையாக அடையாளமிடப்பட்ட எழுத்து வடிவத்தையும் வழங்குவதாகும். எந்த வரியையும் தொட்டால் உடனடியாக அந்த இடத்திற்கு ஒலிகோப்பில் தாவலாம். Casual, Formal, Guided, Free Form என நான்கு வெவ்வேறு உரையாடல் பாணிகளையும் தேர்ந்தெடுக்கலாம்.

NotebookLM ஐ விட இலுமினேட் மிகவும் எளிமையானது. NotebookLM மனவரைபடங்கள், குறிப்பு அட்டைகள், வினாடிவினாக்கள் போன்ற பல கூடுதல் கருவிகளை வழங்குகிறது. ஆனால் இலுமினேட் வெறும் ஒலி உருவாக்கத்தில் மட்டும் கவனம் செலுத்துவதால், அந்த ஒரு செயல்பாட்டை மிகச் சிறப்பாக செய்கிறது.

தற்போது இலுமினேட் பெரும்பாலும் கணினி அறிவியல் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளுக்கு உகந்ததாக உள்ளது. Alice’s Adventures in Wonderland, Pride and Prejudice போன்ற பிரபலமான நூல்களின் ஆடியோ சுருக்கங்களையும் கேட்கலாம். Explore பகுதியில் ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட பல வலைபரப்புகளை உலாவலாம்.

இது கூகுள் லேப்ஸின் சோதனைத் திட்டம் என்பதால், எதிர்காலத்தில் தொடரும் என்பதற்கு உத்தரவாதமில்லை. ஆனால் தற்போது மாணவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் இது மிகவும் பயனுள்ள கருவியாக மாறியுள்ளது. சிக்கலான தொழில்நுட்ப ஆவணங்களை எளிதில் புரிந்துகொள்ள விரும்புவோர் இலுமினேட்டை முயற்சி செய்யலாம்.

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now