கொற்கை எழுத்துருவின் சிறப்புகள்

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகமும், ஒண்மை அறக்கட்டளையும் இணைந்து கொற்கை எழுத்துருவை வெளியிட்டுள்ளனர். தமிழ் எழுத்துருக் கூடத்தின் திட்ட மேலேளார் ரஞ்சித் ரூஸோ, கொற்கை எழுத்துரு உருவான விதத்தையும் அதன் சிறப்புகளையும் வெளியீட்டு நிகழ்வில் விளக்கியிருந்தார். கொற்கை எழுத்துருவின் சிறப்புகளைச் செல்லினம் வாசகர்களுக்காக இங்கே பதிப்பிக்கிறோம்.

ஆறு மாதங்களுக்கும் மேல் ஆய்வு நடத்தப்பட்டு தமிழ் எழுத்துரு தொடர்பான தேவைகள், சிக்கல்கள் கண்டறியப்பட்டன. இதற்காக ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் சேகரிப்பில் இருந்து பழைய நூல்கள், இதழ்கள் ஆகியவற்றை அலசி ஆராய்ந்து அவற்றிலிருந்து கிட்டத்தட்ட 80 எழுத்துருக்கள் தொகுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. இதற்கு முன்னர் பழைய எழுத்துருவைப் புதுப்பிக்கும் முயற்சிகள் என்னென்ன அவற்றின் நிறை குறைகள் என்ன என்றும் கலந்துரையாடல் நடந்தது.

தமிழில் கட்டெழுத்துருவுக்கான (body text) தேவை இருப்பதை அடையாளம் கண்டனர். ஏற்கெனவே தமிழ் எழுத்துகள் சற்றே சாய்ந்த வடிவில் இருப்பதால் சற்றே சாய்ந்திருக்கும் ஒன்றை நவீன வடிவுக்கு மாற்றுவது என முடிவெடுத்தனர். தமிழின் அசல் வடிவம் பாதுகாக்கபடவேண்டும் என்பதில் உறுதியோடிருந்தனர். முக்கியமாக பதிப்பகத்தார் ஆர்வத்துடன் பயன்படுத்தும் விதத்தில் அவர்கள் தேவைகளைக் கருத்தில் கொண்டு உருவாக்க எண்ணினர்.

தற்போதிருக்கும் அச்சு எழுத்துருக்களில் லத்தீன் எழுத்துகள் இல்லாதது பெரிய சிக்கலாக இருக்கிறது. உலகின் பல்வேறு நாடுகளில் தமிழர்கள் வாழ்கின்றனர். அவர்கள் மேற்கோளாக அந்த நாட்டு மொழியைத் தமிழின் இடையில் எழுதினால் தமிழ் எழுத்துருவில் அந்த எழுத்துகள் இல்லாது வேறொரு எழுத்துருவைச் சேர்த்து பதிப்பிக்கும்போது வடிவ அமைதி குலைகிறது. ஆங்கில எழுத்துகள் இன்றி கட்டம் கட்டமாக அந்தச் சொல் தெரிவது பெரிய குறை. தமிழ்ச் சொற்களின் நீளம் அதிகமாக இருப்பதால் பக்க வடிவமைப்பில் இடது ஓர வடிவமைப்பில் வைத்தால் மட்டுமே கண்களுக்கு இதமாக இருக்கும். பக்கத்தின் இடது மூலையில் இருந்து வலது மூலை வரை இருக்கும்படி வடிவமைத்தால் நடுவில் நிறைய இடைவெளியுடன் பார்க்க அழகாக இல்லை. எல்லா கிரந்த எழுத்துகளும் கொடுக்கப்படுவதில்லை. இப்படிப் பல்வேறு சிக்கல்கள் அடையாளம் காணப்பட்டன.

இவற்றைக் கவனத்தில் கொண்டு புதிய எழுத்துரு உருவானது. இதற்காக 1960 முதல் 1995 வரை பயன்பாட்டில் இருந்த அச்சு நூல்களில், இதழ்களில் பயன்படுத்தப்பட்ட ஓர் எழுத்துருவைத் தேர்ந்தெடுத்தனர். அதிகச் சாய்வு இன்றி இந்த எழுத்துகள் இருப்பது இதன் சிறப்பம்சம். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக அனைவரும் பார்த்துப் பரிச்சயமான எழுத்துரு. பழைய லை, யு, ணா, லா போன்ற வரலாற்று எழுத்து வடிவங்களும் இதில் இருந்தன. தடிமன், மெல்லிய வடிவம் இரண்டும் இணைந்து படிக்க ஏற்றதாக இருந்தது.

வேலையைத் தொடங்கினர். தமிழில் மொத்தம் 247 எழுத்துகள். ஆனால் உரு (glyphs) என்று கணக்கிட்டால் 855 வடிவங்களை வரைய வேண்டும். ஐந்து (Light, Regular, Medium, Bold, Black) எடைகளைக் கொண்டதாக உருவாக்கத் திட்டமிட்டனர். நாற்பதாண்டுகால எழுத்துருத் துறை அனுபவம் கொண்ட செல்லினம், முரசு அஞ்சல் செயலிகளின் நிறுவனர், வடிவமைப்பாளர், முத்து நெடுமாறன் இத்திட்டத்தின் வழிகாட்டியாகச் செயல்பட்டார். ரஞ்சித், பிரபஞ்சா, அபிராமி ஆகியோர் இப்பணிகளை மேற்கொண்டனர்.

ஐந்து எடைகளில் 855 உருக்கள், லத்தின் எழுத்துகள், தமிழ் சிறப்பெழுத்துகள், எண்கள் எல்லாம் உருப்பெறத் தொடங்கின. தீ, சி, கீ போன்ற எழுத்துகளில் கொக்கி இரண்டு விதங்களில் இருக்கும். வேண்டியதைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தலாம். அதே போல த, ந போன்ற வால் இருக்கும் எழுத்துகள் அருகில் உள்ள எழுத்தைப் பொறுத்து வாலின் அளவு தானாகவே சுருங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. பூ, யூ போன்ற எழுத்துகளில் உள்ள சுழிகளும் அவ்விதமே அளவு கூடிக் குறையும் வகையிலானவை.

கெளரி என்பதில் உள்ள ஔகார ‘ள’ எழுத்தும் வழக்கமான ‘ள’ எழுத்தும் ஒரே வடிவத்திலேயே உள்ளன. இதை வேறுபடுத்திக் காட்டும்வண்ணம் ​ை என்கிற ஐகாரக் குறியீட்டையும் ள எழுத்தையும் இணைத்து புதிய வடிவத்தைப் பயன்படுத்தியுள்ளனர். அதைப் போலவே தமிழ் எண்களில் க, உ போன்ற எழுத்துகளை அப்படியே தமிழ் எண்களுக்கும் பயன்படுத்தாது சற்றே வடிவமாற்றம் செய்துள்ளனர். எடுத்துக்காட்டாக க எழுத்தின் மூக்கைவிட எண் 1க்கு இருக்கும் க மூக்கு குறுகியதாக இருக்கும். ரூபாய் குறியீட்டின் ரூ உருவும் ரூ எழுத்தின் உருவும் வெவ்வேறு வடிவங்களில் உள்ளன.

பதிப்பாளர்கள் நாட்காட்டி தயாரிக்கும்போது பல்வேறுவிதமான குறியீடுகளைப் பயன்படுத்துகின்றனர். நாள், மாதம், ஆண்டு, லாபம் என ஒவ்வொன்றின் எழுத்துக் குறியீட்டையும் இந்த கொற்கை எழுத்துருவில் சேர்த்துள்ளனர். இவை ஒரே அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒன்று அகலமாகவும் ஒன்று குறுகியதாகவும் இல்லாமல் இருப்பதால், வடிவ அமைதி குலையாது கண்களுக்கு இதமாக ஒன்றுபோலவே காட்சியளிக்கும்.

இவ்வளவு வேலைகள் இருந்தும் அதை ஆரம்பத்தில் உணராமல் புயல் வேகத்தில் வரைந்து முடித்து முத்து நெடுமாறனுக்கு அனுப்பியதைப் பற்றிக் குறிப்பிட்டார் ரஞ்சித். முதலில் ஏழு எழுத்துகளை வரைந்து அதில் முத்து நெடுமாறன் திருத்தம் சொன்னதும் ஒரு சில மாதங்களிலேயே அனைத்தையும் வரைந்து அனுப்பிவிட்டனர். அதில் உள்ள பிழைகளை ஒவ்வொன்றாகச் சுட்டிக்காட்டி விளக்கினார் முத்து நெடுமாறன். ஒவ்வொரு முறையும் இணைய வழியாகவும் நேரில் வந்தும் சொல்லிக் கொடுத்ததோடு எழுத்துருவின் தரத்தைச் சரிபார்க்க ஒரு மென்பொருளையும் உருவாக்கிக் கொடுத்தார். அவருடைய ஹைபிஸ்கஸ் மென்பொருளும் இந்த எழுத்துரு உருவாக்கத்தில் மிகவும் உதவியாக இருந்தது.

தற்போது உருவாக்கியுள்ள கொற்கை எழுத்துருவிலும் பரவலாகப் பயன்படுத்தப்படும் இளங்கோ/வள்ளுவன் எழுத்துருவிலும் ஒரு பக்கத்தை வடிவமைத்து வேறுபாடுகளைக் காட்டினார் ரஞ்சித். கொற்கை எழுத்துருவில் ஒவ்வொரு வரியிலும் சொற்களுக்கிடையே இருந்த இடைவெளி சீராக இருந்தது. அதிக சொற்களும் இருந்தன. கொற்கை எழுத்துருவைப் பயன்படுத்தினால் ஒரு பக்கத்தில் கூடுதலாக ஐந்தாறு வரிகள் சேர்க்கலாம். பார்க்கவும் அழகாகப் போதிய இடைவெளியுடன் இருந்தது. பார்வையாளர்கள் இந்த வித்தியாசத்தைக் கண்டு கரவொலி எழுப்பி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இந்த எழுத்துருவைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தி நிறை குறைகளைத் தெரிவிக்குமாறும் ரஞ்சித் கேட்டுக்கொண்டார். விண்டோஸ் 2008, 2014 வேர்ட் செயலியில் சிலது மாறுபட்டிருக்கலாம். நவீன செயலிகள் சரியாக வேலை செய்கிறது என்றும் தெரிவித்தார். (குறிப்பு: பழைய வேர்ட் மற்றும் அடோப் CS6 செயலிகளில் பயன்படுத்தும்வண்ணம் எழுத்துரு மாற்றப்பட்டு மீண்டும் பதிவேற்றப்பட்டுள்ளது) நிறைவாகத் தனக்கும் தங்கள் அணியைச் சேர்ந்த பிரபஞ்சா, அபிராமிக்கும் இந்த எழுத்துரு உருவாக்கத்தில் உதவி செய்த முத்து நெடுமாறன், சுந்தர் கணேசன் ஆகியோருக்கும், இதற்கு நிதி நல்கி உதவிய ஒண்மை அறக்கட்டளையைச் சேர்ந்து விக்னேஷ் சுந்தரேசன், நரேந்திரன், கிருஷ்ணப்பிரியா ஆகியோருக்கும் நன்றி கூறி உரையை நிறைவுசெய்தார்.

ரஞ்சித் ரூஸோவின் விளக்க்காட்சிக் காணொளி

கொற்கை எழுத்துரு தரவிரக்கம் செய்யும் இணைப்பு

கொற்கை வெளியீடு விழா பற்றிச் செல்லினத்தில் வந்த செய்தி

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now