கொற்கை எழுத்துரு வெளியீடு

சென்னை, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் டிசம்பர் 19ஆம் நாள் மாலை கொற்கை எழுத்துரு வெளியீடு கண்டது. அச்சுத்துறை, காட்சி ஊடகத்துறை இரண்டிலும் பயன்படுத்தும் வகையிலான இந்த யூனிகோடு எழுத்துரு பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டது.

ஒண்மை அறக்கட்டளை நிதியுதவிடன் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தால் தொடங்கப்பட்டது தமிழ் எழுத்துருக் கூடம். இந்த அமைப்பு தமிழ் எழுத்துருத் துறையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. தமிழ் அச்சுத்துறை, காட்சி ஊடகத்துறையில் பயன்படுத்தத்தக்க நவீன எழுத்துருக்களை உருவாக்குவது. பயிற்சிப் பட்டறைகள் நடத்தி இத்துறையில் நிறைய தமிழ் எழுத்துருவியலாளர்கள் உருவாக வாய்ப்புகளை ஏற்படுத்துவது. கருத்தரங்குகள் நடத்தி எழுத்துரு பற்றிய விழிப்புணர்வு உண்டாக்குவது. இதுகாறும் பயன்படுத்தப்பட்ட எழுத்துருக்கள் பற்றிய தகவல்களை ஆவணப்படுத்துவது. இப்படிப் பல்வேறு திட்டங்களை முன்வைத்துச் செயல்படுகின்றனர்.

முரசு அஞ்சல், செல்லினம் செயலிகளின் நிறுவனர், வடிவமைப்பாளர் முத்து நெடுமாறனை வழிகாட்டியாகக் கொண்டுள்ளது இந்த அமைப்பு. இதுவரை இரண்டு பயிற்சிப் பட்டறைகள், கருத்தரங்கங்களை ஏற்பாடு செய்து நடத்தியுள்ளனர். பன்னாட்டு எழுத்துருத்துறை வல்லுநர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். இந்தியா முழவதிலும் இருந்து தமிழ் ஆர்வலர்கள், எழுத்துரு ஆர்வலர்கள் இவற்றில் கலந்துகொண்டு வரவேற்பளித்தனர்.

பழைய தமிழ் எழுத்துருக்களை நவீன பயன்பாட்டுக்கு மீட்டுருவாக்குவதும் இவ்வமைப்பின் செயல்பாடுகளில் ஒன்று. அதன்படி பல மாத கால ஆய்வுக்குப் பிறகு உருவாகியுள்ள எழுத்துருதான் கொற்கை.

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் இயக்குநர் சுந்தர் கணேசன், இந்த எழுத்துருக்கூடம் உருவானதைப் பற்றி விரிவான அறிமுகத்தை வெளியீட்டு நிகழ்ச்சியில் வழங்கினார். நூலகத்தின் புதிய கட்டடப் பணிகள் நடந்து வருவது பற்றியும் அதற்கான நிதி திரட்டல் பணிகள் பற்றியும் பகிர்ந்துகொண்டார். தமிழ் அறிவு வளாகம் என்கிற பெயருடன் உருவாகும் இந்த மாபெரும் முயற்சிக்குப் பொதுமக்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பாக நிதி வழங்கும்படி கோரிக்கையும் வைத்தார்.

தமிழ் அறிவு வளாகம் – வரலாற்றில் ஒரு சதுர அடி என்கிற இந்தத் திட்டத்தில் பொதுமக்கள் 5000 ரூபாய் இந்தியப் பணத்தை அளிப்பதன் வழியாக இக்கட்டடத்தின் ஒரு சதுர அடிக்கான செலவை ஏற்கலாம். அவரவர் விருப்பப்படி எத்தனை சதுர அடிக்கு வேண்டுமானாலும் நிதியளிக்கலாம். இதற்காக ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் வெர்னலிஸ் கேபிடல் நிறுவன இயக்குநர் பால சந்திரா, ஒரு கோடி வழங்க உறுதியளித்து அடுத்த வாரமே அதை வழங்கியதை நினைவுகூர்ந்து நன்றியும் தெரிவித்தார் சுந்தர்.

அவரை அடுத்து, தமிழ் எழுத்துரு உருவாக்கத்தில் தரம் பதித்தல் என்ற தலைப்பில் எழுத்துருவியலாளர் முத்து நெடுமாறன் உரையாற்றினார். கொற்கை எழுத்துருவை வெளியிட்டுப் பேசிய வெர்னலிஸ் கேபிடல் நிறுவன இயக்குநர் பால சந்திரா, தமிழ் அறிவு வளாகப் பணிக்குத் தம் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

சிந்துவெளி ஆய்வு மையத்தின் மதிப்புறு ஆலோசகர் பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றுகையில் இந்த எழுத்துருவுக்கு வைக்கப்பட்டுள்ள பெயரின் சிறப்புகளைக் குறிப்பிட்டார். கொற்கை வாழ் மக்களை, கொற்கையர் எனக் குறிப்பிடும் அளவுக்குப் புகழ்வீச்சு கொண்ட நகரம் கொற்கை. தொல்லியல் ஆய்வுகள் அவ்விடத்தின் மேன்மைகளை இன்றைய உலகுக்கு எடுத்துரைக்கின்றன என்றார். கொற்கை எழுத்துரு உருவாக்கத்தில் இணைந்துள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகக் குழுவினர், ஒண்மை அறக்கட்டளை நிர்வாகிகள், வழிகாட்டியாகச் செயல்படும் முத்து நெடுமாறன் ஆகியோரிடம் உள்ள கூட்டாற்றல் (Synergy) பற்றி மெச்சினார். ஒத்த கருத்துடையோர் இணைந்து பணியாற்றுகையில் கிடைக்கும் ஆற்றல் தமிழுக்குப் பெருமை சேர்ப்பதாகப் பேசினார்.

தமிழ் எழுத்துருக் கூடத்தின் திட்ட மேலாளர் ரஞ்சித் ரூஸோ, கொற்கை எழுத்துருவின் சிறப்புகளைப் பட்டியலிட்டு விளக்கினார். இதற்காக மேற்கொண்ட ஆய்வுகள், திருத்தித் திருத்திச் செப்பனிட்டது, திருத்தங்களுக்காகவே முத்து நெடுமாறன் உருவாக்கிய மென்பொருள் எனப் பல தகவல்களை வழங்கி நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரை வியப்பிலாழ்த்தினார்.

ஒண்மை அறக்கட்டளையின் நிறுவனர் விக்னேஷ சுந்தரேசன், ஆவணப்படுத்துதலில் நவீன கணினி அறிவியல் துறையில் உள்ள வாய்ப்புகளை அறிமுகப்படுத்தி உரையாற்றினார். பிளாக் செயின், ஹாஷ் (block chain, hash) போன்ற நவீன தரவுச் சேமிப்பு முறைகளை கொடி போன்ற சங்கிலி, அதில் தொங்கும் தரவு என மிகவும் எளிமைப்படுத்தி அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் விளக்கினார். இறுதியாக ஒண்மை அறக்கட்டளையின் கலை இயக்குநர் கிருஷ்ணபிரியா நன்றியுரையாற்றினார். தங்களின் செயல்திட்டங்களைப் பற்றிச் சிறு அறிமுகம் கொடுத்துவிட்டு இந்நிகழ்ச்சிகான ஒவ்வொருவரின் பங்களிப்பையும் தனித்தனியே குறிப்பிட்டு நன்றி தெரிவித்தார்.

தமிழிலும் தமிழ் எழுத்துருவிலும் ஆர்வம் உள்ள ஏராளமான விருந்தினர்கள் வருகை தந்து நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர். பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தத்தக்க வகையில் இந்த எழுத்துரு இணையதளத்தில் தற்போது கிடைக்கிறது. பயன்படுத்திப் பார்த்து நிறைகுறைகளை தமிழ் எழுத்துருக் கூடத்துக்குத் தெரிவிக்கலாம்.

கொற்கை எழுத்துருவை தரவிறக்கம் செய்யும் இணைப்பு.

கொற்கை அகழாய்வு பற்றிய தகவல்கள்.

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now