நீண்ட நேர மின்தடைகள் உலகம் முழுக்கவே நிகழ்ந்து வருகின்றன. சில இடங்களில் பல மணி நேரம், சில சமயம் ஒரு நாளுக்கும் மேலாக மின்சாரம் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் தகவல் தொடர்பு, திறன்பேசி, வழிகாட்டுதல் போன்ற இன்றியமையாத தேவைகள் பாதிக்கப்பட்டன. இந்த மாதிரியான நேரங்களில் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது எப்படி என்பதை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

ஒரு நெருக்கடிகால தொழில்நுட்பத் தொகுப்பின் மையமாக இருப்பது திறன்பேசி மின்னேற்றும் வசதி. அதிகக் கொள்ளளவு கொண்ட மின்னேற்ற சேமிப்பு கருவி (Power bank), மின்சாரம் திரும்ப வரும் வரை திறன்பேசியை பல முறை மின்னேற்றம் செய்ய உதவும். குறைந்த தரமான கருவிகளை விட, நம்பகமான தயாரிப்புகளைத் தேர்வு செய்வது நீண்ட கால பயன்பாட்டிற்கு உதவும்.
மின்தடை அடிக்கடி நீண்ட நேரம் நீடித்தால், சூரிய ஒளி மூலம் மின்னேற்றம் செய்யும் கருவிகள் கூடுதல் உதவியாக இருக்கும். அவை மெதுவாக செயல்பட்டாலும், நெருக்கடி நேரத்தில் உதவிகரமாக இருக்கும். அதேபோல், வாகனங்களில் உள்ள மின்னேற்ற வசதியும் ஒரு நம்பகமான மாற்று வழியாக பயன்படுகிறது.
மின்சாரம் இல்லாத சூழலில், காலநிலை மாற்றங்களும் ஒரு சவாலாக அமைகின்றன. மழை, அதிக குளிர் அல்லது வெப்பம் ஆகியவை கைபேசிகளின் செயல்பாட்டை பாதிக்கலாம். இதைத் தவிர்க்க, நீர் புகாத பாதுகாப்புப் பைகள் அல்லது எளிய மூடுபைகள் கூட உதவுகின்றன. கருவிகளை நேரடி வெப்பத்திலிருந்து விலக்கி வைத்திருப்பதும் முக்கியமானது.
மின்தடை ஏற்பட்டால், இணைய சேவையும் சில நேரங்களில் பாதிக்கப்படலாம். இதை கருத்தில் கொண்டு, அடையாள ஆவணங்கள், காப்பீடு விவரங்கள், இடர்காலத் தொடர்பு எண்கள் போன்றவற்றை அச்சு பிரதியாக வைத்திருப்பது உதவிகரமாக இருக்கும். மேலும், நீங்கள் வசிக்கும் பகுதியின் வரைபடங்கள், முக்கியப் பாதைகளை கைபேசியில் முன்கூட்டியே சேமித்து வைத்தால், தகவல் தொடர்பு இல்லாத நேரத்திலும் வழிகாட்டும் வசதி எளிதாகிறது.
தொழில்நுட்ப கருவிகளுடன் சேர்த்து, அடிப்படை பாதுகாப்பு கருவிகளும் அவசியம். திறன்பேசியின் விளக்கு வசதி உதவினாலும், தனியான மின்கலன் விளக்கை வைத்துக்கொள்வது மிகவும் சிறந்தது. சிறிய முதலுதவி பெட்டி, குடிநீர் வடிகட்டி, அவசர வெப்பக் கம்பளி போன்றவை மின்தடை காலங்களில் நம்பிக்கையளிக்கும் துணையாக இருக்கும்.
இன்றைய கைப்பேசிகளில், மின்தடை நேரங்களில் பயன்படும் பல வசதிகள் உள்ளன. மின்சாரம் சேமிக்கும் முறை, அவசர மருத்துவ தகவல் திரை, தொடர்பு இல்லாத நேரத்தில் உதவி கோரும் வசதிகள் போன்றவை அவற்றில் அடங்கும். இவற்றை முன்கூட்டியே அமைத்து வைத்தால், அவசர காலங்களில் நேரத்தை மிச்சப்படுத்த முடியும்.
ஒரு நெருக்கடிகாலத் தொகுப்பு பயனுள்ளதாக இருக்க, அது எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும். மின்னேற்ற சேமிப்பு கருவிகளை அவ்வபோது மின்னேற்றம் செய்து வைத்தல், பழைய மின்கலன்களை மாற்றுதல் போன்ற எளிய பழக்கங்கள் உதவும். வாழும் பகுதியின் காலநிலை மற்றும் சூழலுக்கு ஏற்ப தேவையான பொருள்களைத் தேர்வு செய்வதும் முக்கியம்.
மின்வெட்டின்போது ஏற்படும் அனுபவங்கள், மின்சாரம் இல்லாத நேரத்திற்கான அடிப்படை தொழில்நுட்ப தொகுப்பு அவசியம் என்பதை நினைவூட்டுகின்றன.
- மு. இசக்கிமுத்து
