தமிழரின் பெருமையைப் பறைசாற்றும் விதமாக பொருநை அருங்காட்சியகம் தொடங்கப்பட்டுள்ளது. இது, திருநெல்வேலியின் புதிய அடையாளமாக உருவெடுத்துள்ளது. ரெட்டியார்பட்டியில் 13 ஏக்கர் பரப்பில் 67 கோடி செலவில் உருவாக்கபட்டுள்ளது இந்த அருங்காட்சியகம், டிசம்பர் 21, 2025-லிருந்து செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

பொருநை ஆற்றங்கரையில் வாழ்ந்த தமிழ் மக்களின் வாழ்க்கை முறை, பண்பாடு, தொழில்நுட்ப முன்னேற்றம், சுற்றுச்சூழல் ஆகியவை இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு காட்சியும் வியக்கவைக்கும்படியான நேர்த்தி. இங்கு வந்து பார்வையிட்டு வரும் மக்கள் நம் முன்னோர்களின் கண்டுபிடிப்புகளுக்காகப் பெருமை பட்டுக்கொள்கிறார்கள்.
ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள், ஆபரணங்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பழம்பொருள்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
கற்கருவிகள், சங்கால் ஆன பொருள்கள் தயாரித்தல் போன்ற தொழில்நுட்ப முறைகளும் விளக்கப்படுகின்றன. நீர் மேலாண்மை, வணிக போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளையும் பொது மக்கள் உணர்வுப்பூர்வமாக அனுபவிக்கும் வகையில் வடிவமைத்துள்ளனர்.
இரும்பின் தொன்மையைச் சொல்லுவது சிவகளை. 5300 ஆண்டுகளுக்கு முன் இரும்பை உலையிலிட்டு உருக்கியது தமிழ் நிலம். அந்தப் பெருமையோடு இரும்பை உருக்கும் செயல்முறை மாதிரி காணொளி மூலம் காட்டப்படுகிறது. அதன் தொடுதிரையைத் தொட்டு விளையாடி ஒரு கருவியை எப்படிச் செய்யலாம் என்று நாமே கற்றுக்கொள்ளலாம்.
இரும்பை உருக்குவதிலிருந்து அதை கருவிக்கான உலோகமாக மாற்ற இன்னும் என்னென்ன உலோகங்கள் எந்த அளவில் சேர்க்கப்படுகின்றன என்பது வரையிலான தெளிவு அங்கே கிடைக்கிறது.
ஆதிச்ச நல்லூரில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள்களின் கண்காட்சிக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
பாண்டியர்களின் துறைமுகமான கொற்கையில் கிடைத்த அரிய பொருள்கள் இன்னொரு பகுதியில் காட்சிக்கு உள்ளன. கொற்கையில் கடல் வழி வணிகம் செழித்து இருந்தது. அயல்நாட்டுடன் தமிழர்கள் மேற்கொண்ட ஏற்றுமதி இறக்குமதி வணிகத்தின் சிறப்பை பொருநை அருங்காட்சியகம் சிறப்பாக எடுத்துக் காட்டியுள்ளது.
பொருநை அருங்காட்சியகத்தில் வெறும் அகழாய்வுப் பொருள்கள் மட்டும் காட்சிப்படுத்தவில்லை. நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஐந்திணைகள் பற்றி ஐங்கோணப்பரிமாணத்தில் (5D) காட்சிப்படுத்தி உள்ளனர். இதற்குக் கட்டணம் இந்திய ரூபாய் 25. இதைவிட அதிகமாக இருகோணங்களைக் கூட்டி மாதிரிப் படகு (7D stimulatior boat) ஒன்றை உருவாக்கியுள்ளனர். மக்கள் அதில் அமர்ந்து குதூகலத்துடன் அசைந்து ஆடுகிறார்கள்.
சிந்துவெளிக்கும் தமிழகத்திற்குமான தொடர்பை வெளிப்படுத்தும் குறியீடுகள், காட்சிகள், ஒப்பீட்டுடன் விளக்கப்பட்டுள்ளன. தமிழ் இலக்கியக் காட்சிகளும் தொல்பொருள் கண்டுபிடிப்புகளோடு ஒத்துப்போவதை விளக்கியுள்ளனர்.
தாமிர பரணியில் கண்டுபிடிக்கப்பட்ட கட்டட தொகுதிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு கட்டடத்திலும் முற்றம், தாழ்வாரம், தரைத்தளம், முதல் தளம் போன்றவை உள்ளன.
பொருநை அருங்காட்சியகத்தில் உள்ளூர் கைவினைப் பொருள்களின் விற்பனையகம் உள்ளது. பயணிகளுக்கு மின் வாகன வசதி, இளைப்பாற இருக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மரங்கள், அழகுச் செடிகள் என குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்களுடன் அருங்காட்சியகம் உள்ளது.
கிறிஸ்துமஸ் புத்தாண்டு விடுமுறை என்பதால் ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் பார்வையிட வரும் மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதை செய்திகள் தெரிவிக்கின்றன.. நுழைவுக் கட்டணம் உண்டு. பெரியவர்களுக்கு 20 ரூபாய், சிறுவர்களுக்கு 5 ரூபாய். வெளிநாட்டு பார்வையாளர் எனில் முறையே 50, 25 ரூபாய் கட்டணம்.
வார விடுமுறை நாள் செவ்வாய்க்கிழமை. தேசிய விடுமுறை நாள்களில் இயங்காது. இதர நாள்களில் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பொருறை அருங்காட்சியகம் பற்றிய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பு
