கல்வெட்டியல் பட்டயப் படிப்பு

சென்னை தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வளாகத்தில், ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் தமிழாராய்ச்சி பட்டயப் படிப்பிற்கான 2026ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.

தமிழ் மொழி, வரலாறு, பண்பாட்டு ஆய்வுகளை ஒருங்கிணைக்கும் பல்வேறு கல்வித் திட்டங்களையும் ஆய்வுத் திட்டங்களையும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் நீண்ட காலமாக முன்னெடுத்து வருகிறது. கல்வெட்டியல், தொல்லியல் உள்ளிட்ட ஆய்வுத் துறைகளில் மாணவர்களை பயிற்றுவிக்கும் முக்கியப் பணியையும் அந்த நிறுவனம் செய்து வருகிறது.

தமிழாராய்ச்சி பட்டயப் படிப்பிற்கான பாடத்திட்டம், கல்வெட்டுகளில் காணப்படும் எழுத்துருக்கள், மொழி அமைப்பு, காலகட்டங்கள், வரலாற்றுச் சான்றுகளை புரிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வகுப்புகளில் கல்வெட்டியல், தொல்லியல் வழியாகத் தமிழக வரலாறு, மொழி, பண்பாடு, கலை, இலக்கியம் குறித்து கற்பிக்கப்படும். மேலும், கல்வெட்டுப் படியெடுத்தல், ஆவணப்படுத்தலுக்கான பயிற்சியும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படிப்பு ஓர் ஆண்டு கால அளவுடையது. பணியில் இருப்பவர்கள், இத்துறை ஆர்வலர்கள் எளிதில் பங்கேற்கும் வகையில், ஞாயிற்றுக்கிழமைதோறும் வகுப்புகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டயப் படிப்பில் சேர 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது போதுமானதாகும். விண்ணப்பதாரர்கள் 20 வயதுக்கு மேல் இருக்க வேண்டும் என்றும், உச்ச வயது வரம்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டயப் படிப்பிற்கான கட்டணம் ரூ.4,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பத்தை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். முகப்புப் பக்கத்தில் பச்சை நிறப்பட்டையில் நகர்ந்துகொண்டிருக்கும் பட்டயப்படிப்பு குறித்த அறிவிப்பைத் தொட்டால் விண்ணப்பத்தைத் தரவிறக்கம் செய்யமுடியும். மேலும், சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வளாகத்திற்குச் சென்று நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம்.

இணையத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்பவர்கள், முழுமையாக பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் கட்டணம் செலுத்திய ரசீதையும் இணைத்து, அஞ்சல் வழியாக நிறுவனத்திற்கு அனுப்பலாம். விண்ணப்பங்களை ஜனவரி 20 ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரி​விக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டியல் தொடர்பான வகுப்புகள் அனைத்தும் தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வளாகத்திலேயே நடைபெறும். கூடுதல் தகவல்களுக்கு 95000 12272 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழின் வரலாற்றுச் சான்றுகள், ஆய்வு மரபுகளை அறிந்து கொள்ள விரும்புவோருக்கு, ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் இந்த பட்டயப் படிப்பு ஒரு முக்கியமான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

  • இசக்கிமுத்து.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now