எளிமையாக வாசிக்கலாம்

கூகுள் தனது வாசிப்பு அனுபவத்தை எளிமையாக்கும் வாசிப்பு முறை (Reading Mode) அம்சத்தில் புதிய மேம்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஓர் இணையதளத்தின் முக்கியமான உள்ளடக்கத்தை மட்டும் விரைவாக வாசிக்க விரும்புவோருக்கு, கூகுள் குரோம் உலாவியின் வாசிப்பு முறை ஒரு பயனுள்ள கருவியாக உள்ளது. இந்த முறையை இயக்கும்போது, தேவையற்ற விளம்பரங்கள், காட்சிப் பகுதிகள் நீக்கப்பட்டு, கட்டுரையின் மைய உரை மட்டும் காட்டப்படுகிறது. இதனால் வாசிப்பு எளிதாகவும், கண்களுக்கு நிம்மதியாகவும் அமைகிறது.

ஆனால் ஆண்டிராய்டு திறன்பேசிகளில் குரோம் பயன்படுத்தும் போது, இந்த வாசிப்பு முறை விருப்பம் சில நேரங்களில் தானாகவே தோன்றாதது பயனர்களுக்கு சிரமமாக இருந்தது.

இந்த குறையை சரிசெய்யும் வகையில், கூகுள் தற்போது வாசிப்பு முறைக்கு புதிய மேம்பாடுகளை கொண்டு வந்துள்ளது. இந்த மாற்றங்கள், ஆண்டிராய்டுக்கான குரோம் உலாவியின் சமீபத்திய 143-வது பதிப்பில் கிடைக்கத் தொடங்கியுள்ளன.

புதிய மேம்பாட்டின் மூலம், குரோம் உலாவியின் உள்ளடக்க (மெனு) விருப்பத்தில், வாசிப்பு முறை தெளிவாக காணப்படும். அதில் எழுத்துரு வகை, எழுத்து அளவு, பின்னணி நிறம் போன்றவற்றை பயனர் விருப்பத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளலாம். முக்கியமாக, ஒருமுறை செய்த இந்த மாற்றங்கள், பிற இணையப் பக்கங்களிலும் தானாகவே செயல்படும் என்பதே இந்த மேம்பாட்டின் சிறப்பு. இதனால் ஒவ்வொரு முறையும் மீண்டும் அமைப்புகளை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.

அன்றாடம் இணையத்தில் கட்டுரைகள், செய்திகள், ஆய்வுக் குறிப்புகள் போன்றவற்றை வாசிப்பவர்களுக்கு, வாசிப்பு முறை மிகவும் பயனுள்ளதாக அமையும். பலர் அறியாமல் பயன்படுத்தாமல் இருக்கும் இந்த வசதி, வாசிப்பு அனுபவத்தை கணிசமாக மேம்படுத்துகிறது.

இந்த வாசிப்பு முறை கைபேசிகளில் மட்டுமல்லாமல், கணினி மற்றும் மடிக்கணினிகளிலும் பயன்படுத்த முடியும். மேலும், கட்டுரைகளை உரையாக வாசித்து கேட்கும் வசதியும் இதில் உள்ளது.

ஆனால் இப்போது அனைத்து பயனர்களுக்கும் இந்த வசதி கிடைக்கவில்லை. படிப்படியாக அனைவருக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறியதாக தோன்றினாலும், வாசிப்பு முறைக்கான இந்த புதிய மேம்பாடு, இணைய வாசிப்பை விரும்புவோருக்கு குறிப்பிடத்தக்க மாற்றத்தை அளிக்கும். இதுவரை பயன்படுத்தாதவர்கள், இந்த வசதியை ஒருமுறை முயற்சி செய்து பார்க்கலாம்.

  • மு. இசக்கிமுத்து
Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now