எழுத்துருக்கள் தகவலை மட்டும் வெளிப்படுத்துவன அல்ல; ஒரு காலத்தின் அழகியல் எண்ணங்களையும் சிந்தனை முறையையும் அமைதியாக பதிவு செய்யும் கருவிகளாகவும் அவை செயல்படுகின்றன. நம்மை அறியாமலேயே அன்றாட வாழ்வில் வழிகாட்டும் சாலை குறியீடுகள் முதல், கைப்பேசி திரைகள், இணையதளங்கள், அரசு அறிவிப்புகள், நிறுவன அடையாளங்கள் வரை எங்கும் காணப்படும் எளிமையான எழுத்துருவாக ஹெல்வெடிகா இன்று உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

எழுத்துருக்களில் “செரிப்” எனப்படுவது எழுத்துகளின் முடிவில் காணப்படும் சிறிய அலங்கார கோடுகள். இவ்வகை அலங்காரங்களைத் தவிர்த்து, வெறும் நேர்க்கோடுகளால் உருவாக்கப்படும் பாணியே “சான்ஸ் செரிப்”. எளிமையும் நேர்த்தியும் இணைந்த இந்த பாணி, நவீன வடிவமைப்பு உலகில் முக்கியமான இடத்தைப் பெற்றது. திரையில் வாசிக்கும் போது கிடைக்கும் தெளிவு, தேவையற்ற அலங்காரங்கள் இல்லாத அமைப்பு தரும் சீரான உணர்வு ஆகிய காரணங்களால், நிறுவனங்களின் அடையாளமுத்திரைகள், இணையதளம், விளம்பரம் போன்ற காட்சி ஊடகங்களில் சான்ஸ் செரிப் எழுத்துருக்கள் விரைவாக ஆதிக்கம் செலுத்தத் தொடங்கின. அந்த வரிசையில் மிக முக்கியமான பெயராக ஹெல்வெடிகா நிலைபெற்றது.
1957ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில், மாக்ஸ் மீடிங்கர் மற்றும் ஹாஸ் டைப் பௌண்டரியின் மேலாளர் எடுவார்டு ஹோஃப்மான் ஆகியோரால் இந்த எழுத்துரு உருவாக்கப்பட்டது. தொடக்கத்தில் இதற்கு “நொயி ஹாஸ் கிரோடெஸ்க்” எனப் பெயரிடப்பட்டது. பின்னர், உலகளாவிய பயன்பாட்டை மனதில் கொண்டு, சுவிட்சர்லாந்தின் லத்தீன் பெயரான “ஹெல்வெடியா” என்பதிலிருந்து “ஹெல்வெடிகா” என்ற பெயர் வழங்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் உருவான சுவிஸ் பாணி வடிவமைப்பு, தேவையற்ற அலங்காரங்களை விலக்கி, தகவலை நேரடியாகவும் தெளிவாகவும் வழங்க வேண்டும் என்ற கோட்பாட்டை முன்வைத்தது. ஹெல்வெடிகா அந்த அணுகுமுறையின் தெளிவான பிரதிபலிப்பாக வடிவமைக்கப்பட்டது.
“செய்தியே பேச வேண்டும்; எழுத்துரு பின்னணியில் இருக்க வேண்டும்” என்ற சுவிஸ் வடிவமைப்பு தத்துவத்தை ஹெல்வெடிகா இயல்பாக ஏற்றுக்கொண்டது. எழுத்துகளின் அகலம், இடைவெளி, எடை, கோடு அமைப்பு ஆகியவை துல்லியமான சமநிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், எந்த அளவிலும், எந்த ஊடகத்திலும் வாசிப்புத் தெளிவை அது தக்கவைத்துக்கொள்கிறது. எழுத்துரு தன்னை முன்னிலைப்படுத்தாமல், அதில் உள்ள செய்தியை முதன்மைப்படுத்தும் தன்மையே அதன் மிகப் பெரிய பலமாகும். இதன் காரணமாக, பொதுத் தகவல் பலகைகள், நிர்வாக அமைப்புகள், மருத்துவத் துறை, வணிக உலகம் போன்ற பல துறைகளில் ஹெல்வெடிகா பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.
காலப்போக்கில், எண்ணிம ஊடகங்களின் வளர்ச்சியுடன் சேர்ந்து, இந்த மரபான எழுத்துருவும் புதுப்பிக்கப்பட வேண்டிய தேவையை எதிர்கொண்டது. அதன் தொடர்ச்சியாக, ஹெல்வெடிகா நவ், ஹெல்வெடிகா நவ் வேரியபுள் என்ற புதிய வடிவங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. வேரியபுள் எழுத்துரு தொழில்நுட்பத்தின் மூலம், மெல்லிய, தடித்த, அகலமான, குறுகிய போன்ற பல்வேறு எழுத்து வடிவங்கள் அனைத்தும் ஒரே எழுத்துரு கோப்பிற்குள் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் எழுத்தின் தடிமனையும் அகலத்தையும் தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ள முடிகிறது.
ஹெல்வெடிகா நோயா வேரியபுள் ஒரே கோப்பில் பல லட்சம் சாத்தியமான எழுத்து வடிவங்களை உருவாக்கும் திறன் கொண்டது. சிறிய கைப்பேசி திரைகள் முதல் பெரிய எண்ணிமக்காட்சிப் பலகைகள் வரை, ஒரே எழுத்துருவைச் சரிசெய்து பயன்படுத்த முடிவதால், பல்வேறு கருவிகளில் எழுத்துகள் ஒரே மாதிரியான தெளிவுடன் காணப்படுகின்றன. இதன் மூலம் வடிவமைப்பாளர்களுக்கு அதிக கட்டுப்பாடும் அதே நேரத்தில், நிறுவனங்கள் தங்களின் அடையாளத்தை மாற்றமின்றி தொடர்ந்து பயன்படுத்தவும் முடிகிறது.
அறுபது ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டிருந்தாலும், ஹெல்வெடிகா இன்று வரை தனது இருப்பைத் தக்கவைத்துகொண்டுள்ளது. “நடுநிலைத்தன்மை”, “வாசிப்புத் தெளிவு”, “உலகளாவிய பயன்பாடு” ஆகிய அடிப்படை பண்புகளை ஒருபோதும் கைவிடாததே இதன் நீடித்த முக்கியத்துவத்திற்குக் காரணமாகும். தொடக்கத்தில் ஒரு வினோத முயற்சியாகக் கருதப்பட்ட அலங்காரமற்ற எழுத்துருக்கள், இன்று உலகின் காட்சி மொழியாக மாறியுள்ளன.
எதையும் சொல்ல விரும்பாமல் உருவான ஹெல்வெடிகா, இறுதியில் எல்லாவற்றையும் சொல்லும் எழுத்துருவாக வளர்ந்துள்ளது.
- அருட்செல்வம்
