புதிய மலையாள எழுத்துருக்கள்

மரபார்ந்த மலையாள எழுத்துருவை தொழில்நுட்ப சூழலில் விரிவுபடுத்தும் நோக்கில், ரச்சனா எழுத்துரு நிறுவனம் (RIT), கச்சடதப அறக்கட்டளை, சயான அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய எழுத்துரு வடிவமைப்பு போட்டியின் மூலம், ஆறு புதிய மலையாள எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த முயற்சிக்கான எழுத்துரு போட்டி 2024 மே மாதத்தில் அறிவிக்கப்பட்டது. இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து வந்த விண்ணப்பங்களில் இருந்து பத்து வடிவமைப்புகள் தொடக்க கட்டமாகத் தேர்வு செய்யப்பட்டன.

2024 ஆகஸ்ட் மாதத்தில் இரண்டு நாள் நேரடி பயிற்சி முகாம் நடத்தப்பட்டு, எழுத்துரு வடிவமைப்பு, மொழித் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் ஆலோசனைகளை வழங்கினர். அக்டோபர் மாதத்தில் இடைநிலை மதிப்பீடு நடைபெற்றதுடன், டிசம்பர் 2024ல் இறுதிக் கட்ட எழுத்துரு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. வடிவமைப்புத் தரம், வாசிப்புத் தெளிவு, பயன்பாட்டு வசதி ஆகிய அளவுகோள்களின் அடிப்படையில் நடுவர் குழு மதிப்பீடு செய்தது. போட்டியின் முடிவுகள் 2025 மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்டன. 6 சிறந்த எழுத்துருக்கள் தேர்வு செய்யப்பட்டன.

இந்த ஆறு எழுத்துருக்கள் தற்போது பொதுப் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளன. திறந்த உரிமை(Open Font License) அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளதால், கல்வி நிறுவனங்கள், பதிப்பகங்கள், ஊடக அமைப்புகள், தனிநபர்கள் உள்ளிட்ட அனைவரும் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் இலவசமாக இவற்றைப் பயன்படுத்த முடியும்.

எழுத்துருக்களை எவ்வாறு பயன்படுத்தலாம்?

ரச்சனா எழுத்துரு நிறுவனத்தின் (RIT) இணையதளத்தில் இருந்து தேவையான எழுத்துருக்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

விண்டோஸ் கணினிகளில், எழுத்துரு கோப்பை இருமுறை தொட்டு “நிறுவு” என்பதைத் தேர்வு செய்தால், அந்த எழுத்துரு உடனடியாக நிறுவப்படும். மேக்ஓஸ் பயன்படுத்துபவர்கள் பான்ட்புக் (Font Book) மூலம் எழுத்துருக்களை நிறுவலாம். ஆண்டிராய்டு, ஐஓஎஸ் இயங்குதள திறன்பேசிகளில் உள்ள செயலிகளில் எழுத்துருக்களைத் தனிப்பயனாக்கும் (custom font) வசதி இருந்தால், இந்த எழுத்துருக்களை இணைத்து பயன்படுத்தலாம்.

மொத்தத்தில், இந்த புதிய மலையாள எழுத்துருக்கள் கல்வி, பதிப்பு, ஊடகம், எண்ணிம உள்ளடக்க உருவாக்கம் போன்ற துறைகளில் மலையாள மொழியின் பயன்பாட்டை விரிவுபடுத்தும் ஒரு திறந்த வளமாக அமைந்துள்ளன.

  • மு. இசக்கிமுத்து

எழுத்துருக்களை பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பு

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now