கடந்த சில ஆண்டுகளாக உலகளாவிய வடிவமைப்பு சூழலில் எளிமை என்பது முதன்மைப் போக்காக இருந்து வந்தது. விளம்பரங்கள், வலைத்தளங்கள், நிறுவன அடையாளங்கள் என அனைத்திலும் ஒரே மாதிரியான, அலங்காரமற்ற எழுத்துருக்கள் ஆதிக்கம் செலுத்தின. இந்த தன்மை பயன்பாட்டு வசதியையும் தெளிவையும் வழங்கினாலும், சில பார்வையாளர்களுக்கு சலிப்பையும் உணர்ச்சி வறட்சியையும் ஏற்படுத்தத் தொடங்கியது.

இந்தச் சூழலில்தான் 2026 ஆம் ஆண்டில் எழுத்துரு வடிவமைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் உருவாகியுள்ளது. இன்றைய வடிவமைப்பாளர்கள் வெறும் வாசிப்புத் தெளிவை மட்டும் நோக்கமாகக் கொள்ளாமல், பார்வையாளர்களின் உணர்வுகளைத் தூண்டும், கதைகளைச் சொல்லும், தனித்துவத்தை வெளிப்படுத்தும் எழுத்துருக்களை மீண்டும் முன்னிலைப்படுத்த ஆரம்பித்துள்ளனர். இதன் விளைவாக, எழுத்துருக்கள் பின்னணிக் கூறுகளாக இல்லாமல், வடிவமைப்பின் மையக் கதாபாத்திரங்களாக மாறி வருகின்றன.
கதை சொல்லும் எழுத்துகள்
திரைப்படங்களின் போஸ்டர்களையும், தொடர்களின் தலைப்புகளிலும், எழுத்துகளே ஒரு கதையைச் சொல்கின்றன. வண்ணங்களின் தன்மை, அளவுகளில் மாறுபாடு என ஈர்க்கும் வகையிலான அமைப்பு இருக்கிறது. இதை வெறும் அலங்காரமாக கருதாமல், கதையின் உணர்வை வெளிப்படுத்தும் கருவியாக எழுத்துரு வடிவமைப்பாளர்கள் பயன்படுத்துகிறார்கள்.
பழைய எழுத்துருக்களுக்கு புதிய உயிர்
சில எழுத்துரு வடிவமைப்பாளர்கள் அறுபது, எழுபது ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய எழுத்துருக்களை எடுத்து, அவற்றை இன்றைய தேவைக்கு ஏற்றபடி சற்று மாற்றி உபயோகப்படுத்துகிறார்கள். ஒரு பழைய வீட்டை இடித்துவிடாமல், அதை சீரமைத்து புதிய வண்ணம் அடிப்பது போல. இதில் பழமையின் கம்பீரமும், நவீனத்தின் தெளிவும் ஒன்றாக வருகிறது. முரசு அஞ்சல் செயலியிலும் இவ்வகை எழுத்துருக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
செரிஃப் எழுத்துகள்
கொஞ்சம் பழைய புத்தகங்களில் எழுத்துகளை கவனித்தால், ஒவ்வோர் எழுத்தின் மேலேயும் கீழேயும் சிறிய அலங்காரக் கோடுகள் இருக்கும். செரிஃப் எனப்படும் இந்த மாதிரி எழுத்துகள் மீண்டும் பிரபலமாகி வருகின்றன. செயற்கை நுண்ணறிவு உருவாக்கும் மிக மெருகூட்டப்பட்ட, எந்திரத்தனமான வடிவமைப்புகளைப் பார்த்து அலுத்துப்போன மக்களுக்கு செரிஃப் எழுத்துகள் மனிதர்களின் அரவணைப்பையும், கையால் செய்த வேலையின் அழகையும் கொண்டு வருகின்றன எனச் சிலர் கருதுகின்றனர்.
கரடுமுரடாக்கும் எழுத்துருக்கள்
தொழில்நுட்பம் எல்லாவற்றையும் மிக மென்மையாக, பளபளப்பாக்கிவிடுகிறது. ஆனால் இப்போது வடிவமைப்பாளர்கள் வேண்டுமென்றே சற்று கரடுமுரடான எழுத்துருக்களைப் பயன்படுத்துகிறார்கள். கணினியில் செய்யாமல் கையால் எழுதியது போன்ற உணர்வுவை வழங்கும் வகையில் இந்த வகை எழுத்துருக்கள் உருவாகின்றன.
திரையின் அளவுக்கேற்ப மாறும் எழுத்துகள்
அளவு மாறும் எழுத்துருக்களும் உள்ளன. இதை ஓர் உதாரணத்தில் புரிந்துகொள்வோம். நீங்கள் ஒரு வலைத்தளத்தை திறன்பேசியில் பார்க்கிறீர்கள். அதில் எழுத்துகள் சற்று மெல்லியதாக இருக்கும். அதே வலைத்தளத்தை கணினியில் பார்க்கும்போது எழுத்துகள் தடிமனாக மாறிவிடும். அல்லது டேப்லெட்டில் பார்க்கும்போது நடுத்தர அளவில் இருக்கும். இதையெல்லாம் செய்ய முன்பு பல எழுத்துரு கோப்புகளை தனித்தனியாக வைத்திருக்க வேண்டும். ஆனால் இப்போது ஒரே கோப்பில் இருந்து, திரையின் அளவுக்கேற்ப எழுத்துகள் தானாக மாறிக்கொள்கின்றன. கூகுள் போன்ற பல நிறுவனங்கள் இந்த வசதியை ஏற்கெனவே பயன்படுத்தி வருகின்றன.
நடனமாடும் எழுத்துகள்
இன்ஸ்டாகிராம், முகநூல் போன்ற சமூக ஊடகங்கள் எழுத்துகளுக்கு புதிய வடிவங்களை கொடுத்துள்ளன. அசையும் எழுத்துகள் என்ற புதிய வடிவத்தில் எழுத்துகள் நகர்கின்றன, மாறுகின்றன, நடனமாடுகின்றன. ஸ்பாட்டிபை வருடத் தொகுப்பு போன்றவை இதைப் பயன்படுத்தி பெரிய வெற்றியை பெற்றுள்ளன. அசையும் எழுத்துகள் உடனடியாக கவனத்தைக் கவருகின்றன, செய்தியை வலுவாகச் கூறுகின்றன, மக்களை நீண்ட நேரம் பார்க்க வைக்கின்றன.
- மு. இசக்கிமுத்து
