கூகுள் படங்கள் செயலியில், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான புதிய வசதி ஒன்று அறிமுகமாகி வருகிறது. “மீ மீம்” (Me Meme) என அழைக்கப்படும் இந்த வசதி மூலம், பயனர்கள் தங்களது சொந்த புகைப்படங்களைப் பயன்படுத்தி, பரவலாக அறியப்பட்ட நகைப்பழிகை (மீம் – Meme) வடிவங்களை உருவாக்க முடியும்.

இந்த வசதி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன், ஒருவரின் புகைப்படத்தை நகைப்பழிகைப் படமாக விரைவாக மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பகிர்வதற்கேற்ற வகையில், எளிய முறையில் நகைப்பழிகைப் படங்கள் உருவாக்குவதுதான் இதன் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வசதியை பயன்படுத்தும் நடைமுறை மிகவும் எளிமையானது. கூகுள் படங்கள் செயலியைத் திறந்து, உருவாக்கு (Create) என்ற விருப்பத்தைத் தேர்வு செய்ய வேண்டும். அதன்பின் “மீ மீம்” வசதியைத் தேர்ந்தெடுத்து, கிடைக்கும் வடிவங்களில் ஒன்றை தேர்வு செய்யலாம். பயனர் விரும்பினால், முன் நிர்ணயிக்கப்பட்ட வடிவத்திற்கு பதிலாக, தங்களுக்கேற்ற குறிப்பு படத்தையும் சேர்க்க முடியும். பின்னர் தங்களது புகைப்படத்தைத் தேர்ந்தெடுத்து, உருவாக்கு பொத்தானை அழுத்தினால், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நகைப்பழிகைப் படம் உருவாக்கப்படும்.
சிறந்த படங்களைப் பெற, முகம் தெளிவாகக் காணப்படும் நேர்காண் தற்படங்களை பயன்படுத்துமாறு கூகுள் பரிந்துரைக்கிறது. உருவாக்கப்பட்ட படத்தை சேமிக்கவும், வேறு வடிவத்தில் மீண்டும் உருவாக்கவும், மூல புகைப்படத்துடன் ஒப்பிடவும் அல்லது நேரடியாக பகிரவும் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், இந்த வசதி இன்னும் பரிசோதனை கட்டத்திலேயே இருப்பதாகவும், பயனர்கள் அதனை கருத்தில் கொண்டு பயன்படுத்த வேண்டும் என்றும் கூகுள் தெரிவித்துள்ளது.

இந்த வசதி வரவிருப்பதைப் பற்றிய தகவல், கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே வெளிவந்திருந்தது. எதிர்காலத்தில் எத்தனை நகைப்பழிகை வடிவங்கள் சேர்க்கப்படும், பயனர்கள் தங்களுக்கென புதிய வடிவங்களை பதிவேற்ற முடியுமா, இந்த வசதி எப்போது உலகம் முழுவதும் அனைவருக்கும் கிடைக்கும் என்பது போன்ற விவரங்கள் குறித்து கூகுள் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அதோடு இந்த வசதி தற்போது அமெரிக்காவில் உள்ள பயனர்களுக்கு மட்டுமே முதற்கட்டமாக வழங்கப்பட்டு வருகிறது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தனிப்பட்ட புகைப்படங்களை நகைப்பழிகை வடிவில் மாற்றும் இந்த வசதி, கூகுள் படங்கள் செயலியில் உள்ளடக்கம் உருவாக்கும் அனுபவத்தை மேலும் விரிவுபடுத்தும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
- மு. இசக்கிமுத்து
