மெட்டாவின் இன்ஸ்டாகிராம், ரீல்ஸ் காணொளிகளுக்கான செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் குரல் மொழிபெயர்ப்பு, உதட்டசைவு வசதி இருக்கிறது. இதில் ஐந்து புதிய இந்திய மொழிகளை இணைத்துள்ளது மெட்டா. மும்பையில் நடைபெற்ற ஹவுஸ் ஆஃப் இன்ஸ்டாகிராம் நிகழ்வில் அறிவிக்கப்பட்ட இந்த புதிய வசதியில் வங்காளம், கன்னடம், மராத்தி, தமிழ், தெலுங்கு மொழிகள் இணைக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே இந்தி, ஆங்கிலம், ஸ்பானிஷ், போர்ச்சுகீஸ் உள்ளிட்ட மொழிகள் இதில் இருந்து வருகின்றன.

ஐபிஎஸ்ஓஎஸ் ஆய்வின்படி, குறும்பட வடிவ காணொளிகளைப் பார்க்கும் 92 விழுக்காடு பேர் இன்ஸ்டாகிராம் ரீல்ஸை முதன்மை தளமாகக் கருதுகின்றனர். இந்திய மொழிகளின் விரிவாக்கம், மெட்டாவுக்கு இந்திய சந்தையின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
இது எவ்வாறு செயல்படுகிறது? ரீல்ஸை பதிவேற்றும்போது அல்லது திருத்தும்போது, படைப்பாளிகள் மெட்டா செயற்கை நுண்ணறிவு மொழிபெயர்ப்பை இயக்கலாம். இது தானாகவே பேசப்படும் குரலை ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மொழிபெயர்க்கிறது. இதன் சிறப்பு என்னவெனில், படைப்பாளியின் குரலை எந்திரத் தொனி போன்ற குரலாக மாற்றாமல், அசல் குரலின் ஒலி, தொனியை தக்கவைத்துக் கொள்கிறது.
கூடுதலாக, விருப்பமான உதட்டசைவு அம்சமும் உள்ளது. இது இயக்கப்படும்போது, மெட்டா செயற்கை நுண்ணறிவால் மொழிபெயர்க்கப்பட்ட ஒலியை படைப்பாளியின் உதடு, வாய் அசைவுகளுடன் பொருத்துகிறது. இது படைப்பாளி இயல்பாகவே புதிய மொழியில் பேசுவது போன்ற தோற்றத்தை அளிக்கிறது.
எடிட்ஸ் எனப்படும் காணொளி திருத்தும் கருவியிலும் இன்ஸ்டாகிராம் புதிய இந்திய எழுத்துருக்களை இணைத்துள்ளது. படைப்பாளிகள் இப்போது தேவநாகரி, வங்காள-அஸ்ஸாமீஸ் எழுத்துருக்களைப் பயன்படுத்தி ரீல்ஸில் உரை, வசனங்களைச் சேர்க்கலாம். இந்தி, மராத்தி, வங்காளம், அஸ்ஸாமீஸ் போன்ற மொழிகள் இனி ஒலியுடன் சேர்ந்து காட்சி ரீதியாகவும் சிறப்பாக வெளிப்படுத்தப்படும். இந்த புதுப்பிப்பு ஆண்டிராய்டு கருவிகளிளும் வெளியிடப்படும்.
