புகழ்பெற்ற விளையாட்டு நிறுவனங்களின் அடையாளங்களைப் பார்த்தால், பெரும்பாலானவை ஒரு சொல்லையும் ஒரு எளிய குறியீடும் மட்டுமே கொண்டவையாக இருக்கும். வலுவான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் விளையாட்டு எழுத்துருவின் முக்கியமான வேலை. அதனால் எழுத்தும் அதன் வடிவமும் மிக முக்கியம். இவை ஒரு நிறுவனத்தை மக்கள் மத்தியில் நிலைநிறுத்துகின்றன. நிறுவன முத்திரைகள், விளையாட்டு உடைகள், சுவரொட்டிகள் என பல இடங்களுக்கு ஏற்ற சிறந்த, கவனம் கவரும் விளையாட்டு எழுத்துருக்களின் தொகுப்பை இங்கு பார்க்கலாம்.

Tourney எழுத்துரு
இந்த எழுத்துரு பல தடிமன் அளவுகளில் கிடைக்கிறது. அணி உடைகளுக்கான எழுத்துருவாக இதனை பயன்படுத்த முடியும். இந்த எழுத்துருவை வேண்டிய அளவுகளில் மாற்றிக்கொள்ளலாம்.
ITC Avant Garde Gothic
இந்த வகை எழுத்துரு சுவிட்சர்லாந்தில் தோன்றியது. பல ஆண்டுகளாக பல புகழ்பெற்ற நிறுவன முத்திரைகளில் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிரபல தனியார் நிறுவனமான அடிடாஸ் நிறுவனத்தின் அடையாள முத்திரையின் அடிப்படை இந்த எழுத்துருதான். அடையாள முத்திரை வடிவமைப்பு நிபுணர்களுக்கு இது ஓர் உன்னதமான எழுத்துரு. இதை நீட்டலாம், சாய்க்கலாம், முடிவில்லாமல் சரிசெய்யலாம். இதன் மூலம் எழுத்துகள் ஒளிர்கின்றன, தனித்துவமாக அடையாளம் காணக்கூடியவையாக மாறுகின்றன.
Futura
எதிர்காலம் என்ற பொருளை தரும் இந்த எழுத்துரு எல்லாத் துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக விண்வெளி பயணங்கள் மூலம் வரலாற்றில் இடம்பிடித்திருக்கிறது. விளையாட்டு உலகில் இது நைக் நிறுவனத்தின் புகழ்பெற்ற ‘அலைவு’ அடையாள முத்திரைக்குப் பெயர் போனது. இதன் எழுத்துகள் பெரிய அளவிலான விருப்பங்களுக்கு ஏற்றபடி வெற்றிகரமாக மாற்றப்படுகின்றன. ஆனால் இது தடிமனான, சுருக்கமான எழுத்துரு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
VT Redzone Classic
இது ஓர் அலங்கார எழுத்துரு. இவை ஒரு விளையாட்டு எழுத்துருவுக்குத் தேவையான உற்சாகம், ஆற்றல் மிக்க உணர்வை அமைக்க உதவுகின்றன. இந்த எழுத்துரு குறிப்பாக சாய்வு வடிவில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. விளையாட்டுகளின் போது பயன்படுத்தும் குறியீடுகளுக்கும், விளையாட்டு நிகழ்வுகளின் விளம்பரங்களுக்கும் இது வேகமாக செயல்படுவது போன்ற உணர்வை கொடுக்கிறது.
University
இதன் பெயர் தரும் பொருளைப்போலவே விளையாட்டுத்துறை எழுத்துருவின் பல்கலைக்கழகமாகவே இருக்கிறது. தடித்த, நேரடியான எழுத்துகள் இதை விளையாட்டு உடை வடிவமைப்புக்கு ஏற்ற எழுத்துருவாக ஆக்குகின்றன. விளையாட்டு நிகழ்வுகளுக்கான சுவரொட்டிகளிலும் இது சிறப்பாக இருக்கும். ஆனால் விளையாட்டு துறையை கடந்து பிற துறைகளில் இது பயன்படுத்தப்படுவதில்லை.
Campus MN
இந்த எழுத்துரு தொழில்முறை விளையாட்டுகளைவிட பள்ளி விளையாட்டுகளை நினைவூட்டுகிறது. இதன் உன்னதமான வெளிப்புற கோடுகள் முக்கியமானவையாக பார்க்கப்படுகின்றன. எழுத்துகளின் மையப்பகுதி வெளிப்படையாக இருப்பதால் பின்னணி வடிவமைப்பில் கவனம் குவிகிறது.
- மு. இசக்கிமுத்து
