பழங்கால தமிழகத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தும் வகையில் எகிப்தில் தமிழி கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் எகிப்துடன் கொண்டிருந்த தொடர்பை நிரூபிக்கும் வகையில் ஒரு கண்டுபிடிப்பு நடந்துள்ளது. எகிப்தின் புகழ்பெற்ற மன்னர்களின் பள்ளத்தாக்கில் தமிழ் பிராமி, பிராகிருதம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட கிட்டத்தட்ட 30 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கி.பி. முதல் நூற்றாண்டு தொடங்கி மூன்றாம் நூற்றாண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்தவை இவை. பழங்கால தமிழகம், இந்தியாவின் பிற பகுதிகள், ரோமானியப் பேரரசு ஆகியவற்றுக்கு இடையே இருந்த வணிக தொடர்புகளுக்கு இந்தக் கண்டுபிடிப்பு புதிய வழியைக் காட்டுகிறது.
யார் கண்டுபிடித்தார்கள்?
2024, 2025 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த கல்வெட்டுகளைக் கண்டறிந்துள்ளனர். பாரிஸில் உள்ள பிரெஞ்சு ஆசிய ஆய்வு பள்ளியின் பேராசிரியர் சார்லட் ஷ்மிட், சுவிட்சர்லாந்தில் உள்ள லொசான் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் இங்கோ ஸ்ட்ராச் ஆகியோர்தான் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள். தீபன் நெக்ரோபோலிஸ் பகுதியில் உள்ள ஆறு கல்லறைகளில் இந்த கல்வெட்டுகளை அவர்கள் ஆவணப்படுத்தியுள்ளனர்.
சென்னையில் வெளியான தமிழரின் சிறப்பு
இது குறித்த ஆய்வறிக்கை சென்னையில் நடைபெற்ற சர்வதேச தமிழ் கல்வெட்டியல் மாநாட்டில் (20026, பிப்ரவரி 11-14) வெளியிடப்பட்டது. ‘மன்னர்களின் பள்ளத்தாக்கில் இருந்து இந்தியா வரை: எகிப்தில் இந்திய கல்வெட்டுகள்’(From the Valley of the Kings to India: Indian Inscriptions in Egypt) என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்திய துணைக்கண்டத்தின் வடமேற்கு, மேற்கு, தெற்குப் பகுதிகளில் இருந்து சென்றவர்கள் எகிப்தில் கல்வெட்டை பதித்துள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் தெற்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என ஆய்வறிக்கை கூறுகிறது.
எப்படி எழுதப்பட்டன?
இந்தியாவிலிருந்து சென்ற பார்வையாளர்கள் தங்கள் பெயர்களை சுவர்களிலும் அறைகளிலும் செதுக்கியுள்ளனர். எகிப்து மன்னர்களின் கல்லறைகளில் தங்கள் இருப்பைக் குறிக்கும் வகையில் இவற்றை எழுதினர். கிரேக்க மொழியில் ஏற்கனவே எழதப்பட்ட கல்வெட்டுகளுடன் தமிழி எழுத்துகள் கண்டறியப்பட்டுள்ளன. தமிழி எழுத்துகள் பரவலாக தமிழ் பிராமி என்றழைக்கப்படுகின்றன.
சிகை கொற்றன்
சிகை கொற்றன் என்ற பெயர் கல்வெட்டுகளில் மீண்டும் மீண்டும் தோன்றுகிறது. ஐந்து கல்லறைகளில் எட்டு முறை இந்தப் பெயர் செதுக்கப்பட்டுள்ளது. நுழைவாயில்களுக்கு அருகிலும், உட்சுவர்களில் உயரத்திலும், மற்ற கிறுக்கல் குறியீடுகளுக்கு இடையிலும் இந்தப் பெயர் காணப்படுகிறது. ஒரு கல்லறையின் நுழைவாயிலில் சுமார் நான்கு மீட்டர் உயரத்தில் இது தோன்றுகிறது.
சிகை கொற்றன் என்ற பெயர் பல கருத்துகளை வெளிப்படுத்துகிறது. இதன் முதல் பகுதி சமஸ்கிருத சிகா என்ற சொல்லுடன் தொடர்பு கொண்டிருக்கலாம் என கருதப்படுகிறது. சிகா என்பதன் பொருள் குடுமி அல்லது கிரீடம். சில தமிழ் ஆய்வாளர்கள் சிக்கு என்ற வேர்ச்சொல்லில் இருந்து சிகை வந்ததாகவும் கருதுகின்றனர். இரண்டாவது பகுதியான கொற்றன் தமிழ்ச் சொல் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. கொற்றம் என்ற மூலச்சொல்லில் இருந்து இது பெறப்பட்டது. இது வெற்றி, கொல்லுதல் என பொருள்படுகிறது. பண்டைய தமிழர்களின் போர் தெய்வமான கொற்றவையையும், அரசன் என்ற பொருள் கொண்ட கொற்றவன் என்ற சொல்லையும் எடுத்தியம்புவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இது மட்டுமல்லாது எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட மற்ற கல்வெட்டுகளிலும் கொற்றன் என்ற பெயர் தோன்றுகிறது. 1995-ல் செங்கடல் துறைமுக நகரமான பெரெனிஸில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஓட்டில் கொற்றபுமான் என்று எழுதப்பட்டிருந்தது. சங்க இலக்கியங்களிலும் இந்தப் பெயர் வருகிறது. புறநானூற்றில் புகழப்படும் சேர அரசன் பித்தாங்கொற்றன் சில நேரங்களில் நேரடியாக கொற்றன் என்று அழைக்கப்படுகிறார். பழைய சேர தலைநகரான புகலூரில் இருந்து கிடைத்த கல்வெட்டுகளில் இதற்கு இணையான சான்றுகள் உள்ளன. கி.பி. இரண்டாம் அல்லது மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை இவை.
மற்ற தமிழ் பெயர்கள்
வேறு இரு நபர்களும் இந்த கல்லறைகளில் தமிழி எழுத்துகளில் தங்கள் பெயர்களை விட்டுச் சென்றுள்ளனர். ஒரு கல்வெட்டு கோபான் வரத கண்டன் (கோபான் வந்து பார்த்தான்) என்ற தகவலை கூறுகிறது. இதேபோல சாதன், கிரன் என்ற தமிழ் பெயர்களும் கண்டறியப்பட்டுள்ளன.
“நான் முதலில் இந்த கல்வெட்டுகளை அடையாளம் கண்டபோது என்னால் நம்ப முடியவில்லை. ஏனெனில் பல ஆண்டுகளாக ஏராளமானோர் இந்த கல்லறைகளுக்கு வந்திருக்கிறார்கள். ஆனால் யாரும் இந்திய கல்வெட்டுகளை அடையாளம் காணவில்லை” என்று ஆய்வாளர் ஸ்ட்ராச் கூறியுள்ளார்.
இது ஏன் முக்கியம்?
இது பற்றிக் கூறிய தமிழ்நாடு மாநில தொல்லியல் துறையின் கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆலோசகர் கே. ராஜன், “மலபார் கடற்கரையில் இருந்த பழங்கால தமிழகத்திற்கும் ரோமானியப் பேரரசுக்கும் இடையிலான வணிக தொடர்புகளுக்கு வெளிச்சம் காட்டுவதால் இந்த கண்டுபிடிப்புகள் மிக முக்கியம். முன்னதாக எகிப்தில் செங்கடல் துறைமுக நகரமான பெரெனிஸில் பல்வேறு கல்வெட்டுகள் கண்டறியப்பட்டு, பல ஆண்டுகளாக அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்பட்டன. இப்போது கவனம் நைல் நதி பள்ளத்தாக்கிற்கு நகர்ந்துள்ளது.” என்றார்.
தமிழின் பெருமை
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் உலகெங்கும் பயணம் செய்தனர். வணிகம் செய்தனர். தங்கள் இருப்பை பதிவு செய்தனர். எகிப்தின் மன்னர்களின் பள்ளத்தாக்கில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த தமிழ் கல்வெட்டுகள், பழங்கால தமிழ் நாகரிகத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்துகின்றன. தமிழர்களின் பரந்த வணிக தொடர்புகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வருகின்றன. தமிழின் பெருமையை நிலைநாட்டும் ஓர் அரிய கண்டுபிடிப்பு இது.
- மு. இசக்கிமுத்து
