தட்டச்சு எழுத்துருக்கள்

ஒரு காலத்தில், ஒவ்வோர் எழுத்தும் தட்டச்சு இயந்திரத்தின் சத்தத்தோடு சேர்ந்து உருவாகின. மை பதிந்த தடங்கள், சற்றே சாய்ந்த எழுத்துகள், ஒரே மாதிரி இல்லாத இடைவெளிகள், இந்தக் குறைகள் களைந்த எழுத்துருக்கள் கணினி காலத்தில் புகழ்பெற்றன.

காலத்தின் ஓட்டத்தில் வடிவமைப்பு உலகம் மிகத் தெளிவான நேர்த்தியான எழுத்துருக்களை இயல்பாகத் தேர்ந்தெடுத்தது. வாசிப்புத் தெளிவும், பயன்பாட்டு வசதியும்
முதன்மை தேவையாக இருந்தன. எனினும் தற்காலத்தில் பழைய தட்டச்சு போன்ற எழுத்துருக்களை சில இடங்களில் மட்டும் வடிவமைப்பில் பயன்படுத்தும்போது பழங்காலத்தின் உணர்வுகளைக் கொண்டுவருகின்றன. ​

தட்டச்சு எழுத்துருக்கள் என்றவுடன் பலருக்கும் ஒரே மாதிரியான தோற்றம்தான் நினைவுக்கு வரும். ஆனால் உண்மையில், இவ்வகை எழுத்துருக்கள் இன்று பல்வேறு தோற்றங்களிலும், பல்வேறு உணர்வுகளிலும் கிடைக்கின்றன. ஒரே அடிப்படையில் உருவானாலும், ஒவ்வோர் எழுத்துருவும் வெவ்வேறு கதையைச் சொல்கின்றன என்பதே இவற்றின் சிறப்பு.

சில தட்டச்சு எழுத்துருக்கள் பழங்காலக் கடிதங்களை உடனடியாக நினைவூட்டுகின்றன. எழுத்துகள் சற்றே ஒற்றுமையில்லாமல், சிறிய குறைபாடுகளுடன் இருப்பதால், இவை கையால் தட்டச்சு செய்தது போன்ற உணர்வை தருகின்றன. மிகச் சரியான வடிவம் இல்லாததே இவற்றின் தனித்துவமான அழகு. நினைவுகள், தனிப்பட்ட அனுபவங்கள், உணர்ச்சிப் பூர்வமான உள்ளடக்கம் போன்றவற்றுக்கு இத்தகைய எழுத்துருக்களை வடிவமைப்பாளர்கள் நாடுகிறார்கள்.

சில எழுத்துருக்கள் உண்மையான தட்டச்சு இயந்திரத்தில் நீண்ட காலம் பயன்படுத்தப்பட்டது போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கும். மை பூசிய எழுத்துகள், சற்று தேய்ந்த எழுத்துகள், கரடுமுரடான அமைப்பு ஆகியவை இதில் தெளிவாகத் தெரியும். சுவர் ஒட்டிகள், அறிவிப்புகள், வலுவான செய்தியை சொல்ல வேண்டிய வடிவமைப்புகளில் இந்த வகை எழுத்துருக்கள் ஓர் இயல்பான வலிமையை வழங்குகின்றன.

பழைய ஆய்வுக் கட்டுரைகள், அறிக்கைகள், அதிகாரபூர்வ ஆவணங்கள் ஆகியவற்றின் தோற்றத்தை நினைவூட்டும் தட்டச்சு எழுத்துருக்களும் உள்ளன. ஒரே அகல எழுத்துகள், ஒழுங்கான வரிசைகள், வாசிப்புத் தெளிவை முன்னிலைப்படுத்தும் அமைப்பு ஆகியவை இவற்றின் முக்கியத் தன்மைகள். பழைய தன்மையும், இன்றைய பயன்பாட்டு தேவைகளும் ஒரே நேரத்தில் இணையும் வகையில் இவை இருக்கின்றன.

சில தட்டச்சு எழுத்துருக்கள் மிகவும் பழைய இயந்திரத்தில் அடித்த எழுத்துகளை நினைவுபடுத்தும். மை அதிகமாக பதிந்த இடங்கள், இரட்டை அடிகள், சிறிய தவறுகள் கூட இருக்கும். வரலாற்று நிகழ்வுகள், போராட்டம், வேதனையான பழைய சம்பவம் போன்றவற்றை நினைவுபடுத்த இந்த வகை எழுத்துருவை வடிவமைப்பாளர்கள் கையாள்கிறார்கள்.

முடிவாக, தட்டச்சு எழுத்துருக்கள் ஓர் எழுத்து வடிவம் மட்டும் அல்ல. அவை ஒரு காலத்தின் சாட்சி, ஓர் அனுபவத்தின் நினைவு. இவற்றை வெளிக்கொணர வெளிப்பார்வைக்கு சீரற்றும் ஆனால் உள்ளே கடடமைப்பில் சீர்மையுடன் இக்கால தட்டச்சு வடிவ எழுத்துருக்கள் உருவாக்கப்படுகின்றன. சீரான லத்தின் எழுத்துருக்களைப் பயன்படுத்திச் சலித்துப்போன வடிவமைப்பாளர்கள் சிலர் சீரற்றதை நாடுகிறார்கள். தமிழ் எழுத்துரு உலகம் இந்தப் பாதையில் இணைய இன்னும் சில காலம் ஆகும்.

  • மு. இசக்கிமுத்து
Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now