இதயம் எப்படி அன்பின் குறியீடானது?

இன்று நாம் ❤️ என்ற குறியீட்டைப் பார்த்தவுடன் காதல் என்று புரிந்துகொள்கிறோம். ஒரு செய்தியில், அட்டையில், சுவரொட்டியில் இந்த இதய வடிவத்தைப் பார்த்தால் உடனே அன்பு, பாசம், காதல் என்று பொருள் விளங்கிக்கொள்கிறோம். செல்லினம் விசைப்பலகையில்கூட உணர்ச்சிக்குறிகள் சேர்க்கப்படுவதற்கு முந்தைய காலத்தில் அன்பு, காதல் எனத் தட்டச்சு செய்தாலே இதய வடிவம் தோன்றும். இப்போது இடுகை அல்லது அனுப்பு விசையைச் சில நொடிகள் அழுத்திப்பிடித்தாலே எல்லா உணர்ச்சிக்குறிகளும் தோன்றுகின்றன. எனினும் இப்போதும் அன்பு எனத் தட்டச்சு செய்ததும் மேலே இதயம் தெரியும்.

சரி, இந்த இதயம் எப்படி காதலின் அடையாளமானது?

பண்டைய காலத்தில் இதயம் என்பது வெவ்வேறு காரணங்களைக் குறித்தது. எகிப்தியர்களுக்கு அது நுண்ணறிவு. ஆஸ்டெக்குகளுக்கு அது தெய்வீக பலி. கிறிஸ்தவர்களுக்கு அது பக்தி, தியாகத்தின் அடையாளம். இந்த பயணத்தில் எப்போதோ ஒரு கட்டத்தில் இதயம் காதலின் அடையாளமாக மாறியது. அந்த கதையை இங்கே பார்க்கலாம்.

பண்டைய எகிப்து: நுண்ணறிவின் இருப்பிடம்

பண்டைய எகிப்தியர்கள் இறந்தவர்களின் உடலை பதப்படுத்தும்போது, உடலில் இருந்த உறுப்புகளை வெளியே எடுத்தனர். மூளையை பயனற்றதாகக் கருதி அகற்றிவிட்டனர். வயிறு, கல்லீரல், குடல், நுரையீரல் ஆகியவற்றை பெட்டிகளில் அல்லது ஜாடிகளில் தனியாகப் பாதுகாத்தனர். ஆனால் இதயத்தை நுண்ணறிவின் இருப்பிடமாகக் கருதினர். மறுமையில் இது அவசியம் என்று நம்பினர். அதனால் அதை உடலுக்குள்ளேயே வைத்திருந்தனர். அவர்களுக்கு இதயம் என்பது சிந்திக்கும் உறுப்பு, முடிவெடுக்கும் உறுப்பு.

மெசோஅமெரிக்கா: தெய்வீக பலி

ஆஸ்டெக்குகள் உட்பட மெசோஅமெரிக்கர்கள் வேறு வழியில் இதயத்தைப் பயன்படுத்தினர். அவர்கள் தெய்வங்களை வழிபட்டனர். தெய்வங்களைத் திருப்திப்படுத்த மனிதர்களை பலியிட்டனர். உயிருடன் இருக்கும் மனிதர்களின் மார்பைக் கிழித்து இதயத்தை வெளியே எடுத்தனர். இதை தெய்வங்களுக்கு காணிக்கையாக அளித்தனர். இப்படி செய்தால் சூரியன் தொடர்ந்து உதிக்கும், இப்பேரண்டம் இயங்கிக்கொண்டே இருக்கும் என்று நம்பினர். அவர்களுக்கு இதயம் என்பது உயிர் சக்தியின் மையம், தெய்வங்களுக்கு வழங்கும் மதிப்புமிக்க காணிக்கை.

மேற்குலகம்: பக்தியில் இருந்து காதல் வரை

மேற்குலகில் இதயம் பக்தி, தியாகம், அன்பு ஆகியவற்றின் அடையாளமாக மாறியது. இயேசு சிலுவையில் அறையப்படும்போது ரோமானிய சிப்பாயின் ஈட்டி அவரது புனிதமான இதயத்தை துளைத்தது. இந்த நிகழ்வு இதயத்தை பக்தி, தியாகத்தின் அடையாளமாக மாற்றியது. பின்னர் படிப்படியாக இதயம் காதலின் அடையாளமாக மாறியது.

பதின்மூன்றாம் நூற்றாண்டில் இப்போது உள்ள பரிச்சயமான, புகழ்பெற்ற பேரிக்காய் வடிவ இதயம் பிரபலமானது. கலைஞர்கள் காதல் காட்சிகளை சித்தரிக்கும்போது இதய வடிவத்தை பயன்படுத்த ஆரம்பித்தனர். காதல் கவிதைகளில், காதல் பாடல்களில், காதல் கடிதங்களில் இதய வடிவங்கள் தோன்றின.

இதய வடிவ புத்தகங்கள்

அதே நூற்றாண்டில்தான் இதய வடிவ அல்லது கார்டிஃபார்ம் புத்தகம் முதன்முதலில் தோன்றியது. லத்தீன் மொழியில் கோர் என்றால் இதயம், ஃபார்ம் என்றால் வடிவம். மிகவும் புகழ்பெற்ற எடுத்துக்காட்டு 1470களைச் சேர்ந்த தி ஷான்சோனியர் கார்டிஃபார்ம். இது அழகாக அலங்கரிக்கப்பட்ட கையெழுத்துப் பாடல் புத்தகம். இந்தப் புத்தகத்தில் மத சார்பற்ற பிரெஞ்சு, இத்தாலிய காதல் பாடல்கள் உள்ளன.

கார்டிஃபார்ம் புத்தகங்களின் சிறப்பம்சங்கள்

இதய வடிவ புத்தகங்கள் வெறும் அலங்காரத்திற்காக உருவாக்கப்பட்டவை அல்ல. அன்பின் அடையாளமாக, காதல் பரிசாக இவை வழங்கப்பட்டன. பெரும்பாலும் காதல் பாடல்கள், கவிதைகள், காதல் கடிதங்கள் இவற்றில் எழுதப்பட்டன. புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் இதய வடிவத்தில் வெட்டப்பட்டிருக்கும். மேலிருந்து பார்த்தால் முழு புத்தகமும் இதயம் போல தெரியும்.

இந்தப் புத்தகங்களின் அட்டைகள் பெரும்பாலும் தோல், வெல்வெட் அல்லது விலையுயர்ந்த துணிகளால் செய்யப்பட்டன. தங்க இழைகளால் சித்திரத் தையல்க​ள் உருவாக்கப்பட்டன. விலையுயர்ந்த ரத்தினங்கள் பதிக்கப்பட்டன. உள்ளே இருக்கும் பக்கங்களில் கையால் வரையப்பட்ட வண்ணமயமான உருவங்கள், பூக்கள், அலங்கார வேலைப்பாடுகள் இருந்தன. ஒவ்வொரு பக்கத்தின் விளிம்புகளிலும் நேர்த்தியான வடிவங்கள் வரையப்பட்டிருக்கும்.

எழுத்துரு வடிவங்கள்

கார்டிஃபார்ம் புத்தகங்களில் பயன்படுத்தப்பட்ட எழுத்துருக்கள் மிக நேர்த்தியானவை. கோதிக் எழுத்துருக்கள் பதின்மூன்றாம் நூற்றாண்டில் பிரபலமாக இருந்தன. இவை செங்குத்தாக, அழுத்தமாக, கூர்மையான கோடுகளுடன் எழுதப்பட்டன. ஒவ்வொரு எழுத்தும் கையால் எழுதப்பட்டது. சிவப்பு, நீலம், தங்கம் போன்ற வண்ணங்களில் முக்கியமான சொற்கள் எழுதப்பட்டன.

உரை அமைப்பு சிறப்பம்சங்கள்

இதய வடிவத்தில் உரையை அமைப்பது மிகவும் சவாலான வேலை. வழக்கமான செவ்வக பக்கத்தில் எழுதுவது எளிது. ஆனால் இதய வடிவத்தில் மேல் பகுதி குறுகலாகவும், நடுவில் அகலமாகவும், கீழே கூர்மையாகவும் இருக்கும். அதனால் ஒவ்வொரு வரியின் நீளமும் வேறுபடும்.

தி ஷான்சோனியர் கார்டிஃபார்ம்

இந்த புகழ்பெற்ற புத்தகம் தோராயமாக 11 செ.மீ. உயரமும், 9 செ.மீ. அகலமும் கொண்டது. சிறிய அளவு என்றாலும் 172 பக்கங்களைக் கொண்டது. இதில் 43 பாடல்கள் உள்ளன. சில பாடல்கள் ஒரு பக்கத்தில் முடிகின்றன. சில பல பக்கங்களில் தொடர்கின்றன. ஒவ்வொரு பாடலும் அழகான இசைக் குறியீடுகளுடன் எழுதப்பட்டுள்ளன. கோதிக் எழுத்துருவில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது. சில பக்கங்களில் மினியேச்சர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. காதலர்களின் உருவங்கள், பூக்கள், இசைக் கருவிகள் போன்றவை சித்தரிக்கப்பட்டுள்ளன. சிவப்பு, நீலம், தங்கம் போன்ற வண்ணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்தப் புத்தகம் ஒரு பணக்கார நபருக்கு பரிசாக செய்யப்பட்டிருக்கலாம். ஒருவேளை ஒரு காதல் பரிசாக இருந்திருக்கலாம். இன்று இது பிரான்சில் உள்ள தேசிய நூலகத்தில் பாதுகாக்கப்படுகிறது. உலகின் மிக அழகான கையெழுத்துப் புத்தகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

காதலின் நிரந்தர அடையாளம்

நுண்ணறிவின் இருப்பிடமாக, தெய்வீக பலியாக, பக்தியின் அடையாளமாக இருந்த இதயம், இறுதியில் காதலின் நிரந்தர குறியீடாக மாறியது. இதய வடிவ புத்தகங்கள் அந்த மாற்றத்தின் அழகான சான்றுகள். இன்றும் நாம் ❤️ என்ற குறியீட்டைப் பயன்படுத்தும்போது, நூற்றாண்டுகளாக தொடரும் அந்த காதல் மொழியைத்தான் பேசுகிறோம்.

  • மு. இசக்கிமுத்து

செல்லினம் செயலியில் உணர்ச்சிக்குறிகள் பயன்படுத்தும் வழிமுறை

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now