எழுத்துருவே சாட்சி!

ஒரு காலத்தில் ஆவணத்தின் உண்மைத்தன்மையை நிரூபிக்க கையெழுத்தும் கையொப்பமும் முக்கியமான சான்றுகளாக இருந்தன. ஆனால் இன்றைய எண்ணிம உலகில் அந்த ஆவணத்தை உருவாக்கப்பயன்பட்ட எழுத்துருவே உண்மையை உரக்கச்சொல்லும் சாட்சியாக திகழ்கிறது.

வெளிப்படையாக சரியாகத் தோன்றும் ஓர் ஆவணத்தின் உள்ளே, காலத்துக்கு பொருந்தாத ஓர் எழுத்துரு இருந்தால், அது முழு ஆவணத்தின் உண்மைத்தன்மையையும் கேள்விக்குறியாக்க  முடியும். இப்படிப்பட்ட சூழலைத்தான் போண்ட்கேட் (Fontgate) என்று அழைக்கிறார்கள். புகழ்பெற்ற வாட்டர்கேட் அரசியல் சர்ச்சைக்குப் பிறகு, நவீன கால ஊழல்களை, தவறான நடைமுறையைக் குறிக்கும் பொதுவான பின்னொட்டாக “-கேட்” என்ற சொல் நிலைபெற்றது.

போண்ட்கேட் என்பது, “இந்த ஆவணம் உண்மையில் இந்த தேதியில்தானா உருவாக்கப்பட்டது?” என்ற கேள்விக்கு, அதில் பயன்படுத்தப்பட்ட எழுத்துருவின் வரலாறு மூலம் பதில் காண்பது. இந்த துறையில் விற்பன்னராக அறியப்படுபவர் தாமஸ் பின்னி (Thomas Phinney). அவரை “எழுத்துரு துப்பறிவாளர் (Font Detective)” என்றும் அழைக்கிறார்கள். ஓர் ஆவணத்தில் எந்த எழுத்துரு பயன்படுத்தப்பட்டுள்ளது, அது எந்த காலத்தில் வெளியானது, எந்த மென்பொருள் அல்லது இயக்க முறைமை (operating system) மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம் — இவற்றை ஆராய்ந்து முடிவுகள் கூறும் திறன் அவருக்கு உள்ளது.

பின்னியைப் பொறுத்தவரை, ஓர் எழுத்துருவின் பெயர் மட்டும் அதன் அடையாளம் அல்ல; அதன் பதிப்பும் (version), வெளியீட்டு காலமும் முக்கியம். ஒரே எழுத்துரு பல ஆண்டுகளாக இருந்தாலும், அதன் மின்னணு வடிவம் காலத்திற்கேற்ப மாறும். எழுத்துகளின் சிறிய வடிவ வேறுபாடுகள், இடைவெளி மாற்றங்கள், அல்லது மென்பொருள் அமைப்புகள் — இவை எல்லாம் ஆவணத்தின் வயதை காட்டும் கூறுகள் ஆகலாம்.

அவர் தம் வாழ்வில் கையாண்ட முதல் குறிப்பிடத்தக்க வழக்காக “வஞ்சக உயிலின் வழக்கு” (The Case of the Wicked Will) அமைந்தது என்று குறிப்பிட்டுள்ளார். 1983ஆம் ஆண்டு எழுதப்பட்டதாகக் கூறப்பட்ட ஓர் ஆவணத்தை மின்னணு நுண்ணோக்கி மூலம் ஆய்வுக்கு உட்படுத்தியபோது, 300 டிபிஐ (dpi) திறன் கொண்ட ஆரம்பகால இங்க்ஜெட் அச்சுப்பொறி பயன்படுத்தப்பட்டதற்கான தெளிவான தடயங்களை அவர் கண்டுபிடித்தார். ஆனால் அந்த வகை அச்சுப்பொறிகள் 1980களின் இறுதியில்தான் அறிமுகமாகின. இந்த கால முரண்பாடு காரணமாக, அந்த ஆவணம் போலியானது என்பது நிரூபிக்கப்பட்டது. சிறிய அச்சுத்தர தொழில்நுட்ப நுணுக்கமே முழு வழக்கின் திருப்புமுனையாக மாறியது.

2004ஆம் ஆண்டு அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய கில்லியன் ஆவண விவகாரம் (Killian documents controversy) மற்றுமொரு குறிப்பிடத்தக்க வழக்கு. 1970களில் தட்டச்சுக்கருவியில் தட்டச்சு செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட குறிப்புகளில், நவீன சொல் செயலிகளில் (word processor) மட்டுமே சாத்தியமான எழுத்து அமைப்புகள் இருந்தன. எழுத்துகளின் சரியான சீரமைப்பு, எழுத்திடை வெளி (proportional spacing) போன்ற அம்சங்கள், அது பழைய இயந்திர தட்டச்சல்ல, புதிய எண்ணிம முறையில் தயாரிக்கப்பட்டது என்பதைக் காட்டின.

அதேபோல், 2016ஆம் ஆண்டு உலகை அதிரவைத்த பனாமா பேப்பர்ஸ் (Panama Papers) வெளியீட்டிலும் எழுத்துரு விவாதம் எழுந்தது. சில ஆவணங்கள் பழைய தேதியுடன் (2006-ஆம் ஆண்டு) சமர்ப்பிக்கப்பட்டிருந்தாலும், அவை கேலிப்ரி எழுத்துருவில் தயாரிக்கப்பட்டிருந்தது கேள்விகளை எழுப்பியது. கேலிப்ரி பொதுப் பயன்பாட்டிற்கு பரவலாக வந்தது 2007ஆம் ஆண்டில் விண்டோஸ் விஸ்டா (Windows Vista) வெளியீட்டுக்குப் பிறகே. அதற்கு முன் அது பரவலாக பயன்படுத்தப்படவில்லை. எனவே “ஆவணத்தின் தேதி பழையதா, அல்லது எழுத்துரு புதியதா?” என்ற முரண்பாடு விசாரணையின் மையமாகியது.

இயக்க முறைமைகள் மாறும்போது (எடுத்துக்காட்டாக Windows, macOS), ஒரே ஆவணத்தில் கூட சிறிய மாற்றங்கள் ஏற்படலாம். வரி முறிவு (line break), சொல் இடைவெளி போன்றவை மாறலாம். இத்தகைய மாற்றங்கள், ஆவணம் எந்த கணினியில் உருவாக்கப்பட்டது, பின்னர் எங்கே திருத்தப்பட்டது என்பதையும் காட்டும்.

எழுத்துரு என்பது அழகியலுக்காக என்ற கருத்து மாறி, அவை  காலவரிசை, மென்பொருள் வெளியீடு, திரையில் எழுத்துரு காட்டப்படும் விதம் (rendering) போன்ற தகவல்களை தாங்கியிருக்கும் தகவல் களஞ்சியங்களாக திகழ்கின்றன. ஓர் ஆவணத்தின் உள்ளடக்கம் மட்டுமல்ல, அதன் எழுத்து வடிவமும் உண்மையைப் பேசும். அதுவே நவீன எழுத்துரு தடயவியலின் (font forensics) மையக்கரு.

-அருட்செல்வம்.

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now