இன்று பெப்ரவரி 24 — தமிழ் தட்டச்சுப்பொறியை உருவாக்கிய ஆர். முத்தையா பிறந்த நாள். 1886ஆம் ஆண்டு இன்றைய நாளில், யாழ்ப்பாணத்திலுள்ள சுண்டிக்குளியில் பிறந்த இவர், தமிழ் மொழியின் வரலாற்றில் தவிர்க்க முடியாத இடம் பெற்றவர்.

முத்தையாவின் தந்தை, தமிழ் அறிஞர் ஆறுமுக நாவலரின் சீடர்களுள் ஒருவர். ஏழு வயதிலேயே தந்தையை இழந்த முத்தையா, தாயின் அரவணைப்பில் வளர்ந்து கல்லூரிப் படிப்பை முடித்தார். கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கிய இவர், இளமையிலேயே தமிழ் மொழியின் மீது ஆழமான பற்றுக்கொண்டிருந்தார்.
1907இல் மலாயா சென்றார் முத்தையா. சிங்கப்பூரில் பணி. அங்கு பணிபுரிந்த காலத்தில் ஆங்கிலத்தில் தட்டச்சுப்பொறிகள் பயன்படுத்தப்படுவதைக் கண்டார். தமிழில் அப்படி ஒரு கருவியே இல்லை என்ற குறை அவரை வாட்டியது. ஆழமாகச் சிந்திக்கத் தூண்டியது. அந்தக் குறையை நிறைவு செய்யவேண்டும் என்ற உறுதியான எண்ணத்துடன் ஆண்டுக்கணக்கில் உழைத்தார்.
பல தோல்விகளையும் சவால்களையும் கடந்து, தமிழ் எழுத்துகளுக்கு ஏற்ற விசைப்பலகையை உருவாக்கி தட்டச்சுப்பொறியை வெளியிட்டார். இது தமிழர்களின் வாழ்வில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. அலுவலகங்களிலும் அச்சகங்களிலும் தமிழில் எழுதுவது எளிதானது. கொழும்பு, சென்னை நகரங்களில் தட்டச்சுகளை இறக்குமதி செய்து விற்பனை செய்தார். சிறந்த சமூக சேவையாளராகவும் விளங்கினார்.
தமிழ் மொழிக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த முத்தையாவின் பணியை தமிழ் உலகம் என்றும் மறக்காது. தொழில்நுட்பத்தை மொழி வளர்ச்சிக்குப் பயன்படுத்திய இவரின் உழைப்பே, தமிழ் தட்டச்சுப்பொறியின் தந்தை என்ற பட்டத்திற்கு இவரை உரிமையாளராக்கியது.
