உணர்ச்சிகளைச் செதுக்கும் அரிய நிறுத்தற்குறிகள்

எழுத்து என்பது ஒலிகளின் வரிவடிவம் மட்டுமல்ல, அது ஒரு கருத்தைப் பேசும் மனிதனின் மனவோட்டத்தைப் எடுத்தியம்பும் கண்ணாடியும் கூட. நாம் ஒருவரிடம் நேரில் பேசும்போது நமது முகபாவனை, குரல் ஏற்றத்தாழ்வு மூலம் உணர்வுகளை எளிதாகக் கடத்திவிடுகிறோம். ஆனால், எழுத்தில் அந்த நுணுக்கமான தொனியை எப்படிக் கொண்டு வருவது? இதற்காகவே 1960-களில் சில எழுத்தாளர்களும் வடிவமைப்பாளர்களும் பொதுவான நிறுத்தற்குறிகளுக்கு அப்பாற்பட்ட சில ‘அரிய நிறுத்தற்குறிகளை’ (Rare Punctuation Marks) முன்மொழிந்தனர்.

punctuation

ஒரு புதிய மொழியியல் புரட்சி

1966-ஆம் ஆண்டு, புகழ்பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் ஹெர்வ் பாசின் தனது ‘பறவையின் இறகுகளைப் அகற்றுவோம் (Plumons l’Oiseau) என்ற நூலில், மொழியின் உணர்ச்சித் தேவைகளுக்காக ஆறு புதிய நிறுத்தற்குறிகளை அறிமுகப்படுத்தினார். இவை நடைமுறையில் இன்று அதிகம் பயன்படுத்தப்படாவிட்டாலும், மொழியியல் ஆய்வுகளில் களிநயமான முயற்சியாகக் கருதப்படுகின்றன. ஒரு வாக்கியத்தை வாசகர் எந்த உணர்ச்சியுடன் வாசிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க இவை வடிவமைக்கப்பட்டன.

ஹெர்வ் பாசின் முன்மொழிந்த முக்கியமான குறிகள்

அன்பு குறி (Love Point): இரண்டு கேள்விக்குறிகள் ஒன்றையொன்று நோக்கி அமர்ந்து ஒரு சிறிய இதய வடிவத்தைத் தருவதே அன்பு குறி. ஒருவருக்கு அன்பான செய்தியை அனுப்பும்போது அல்லது ஒருவரின் மீதான அதீத காதலை வெளிப்படுத்த இதைப் பயன்படுத்தலாம் என முன்மொழிந்தார்.

உறுதிப் புள்ளி (Certitude Point): ஒரு வாக்கியத்தின் முடிவில் இடப்படும் முற்றுப்புள்ளிக்கு மேல் ஒரு சிறிய செங்குத்துக் கோடு இட்டது போல இது இருக்கும். “நான் சொல்வது 100% உறுதி, இதில் விவாதத்திற்கு இடமில்லை” எனும் ஆணித்தரமான உண்மையை குறிக்க இதைப் பயன்படுத்த முன்மொழிந்தார்.

நிச்சயமற்ற குறி (Doubt Point): சர்டிட்யூட் புள்ளிக்கு நேர் எதிரானது இது. ஒரு தகவலைச் சொல்லும்போதே அதில் உங்களுக்கே சிறு சந்தேகம் இருந்தால், அந்த வாக்கியத்தின் இறுதியில் இதைப் பயன்படுத்த முன்மொழிந்தார். இது ஒரு ஜிக்ஜாக் கோடு போன்ற வடிவம் கொண்டது.

அதிகாரக் குறி (Authority Point): ஒரு சிறிய ‘வில்’ (Arch) போன்ற வடிவம் கொண்டது இது. ஒரு கருத்தை அதிகாரப்பூர்வமாகவோ அல்லது ஒரு அறிவுரையாகவோ சொல்ல இதைப் பயன்படுத்தலாம் என ஹெர்வ் பாசின் முன்மொழிந்தார்.

இவர் முன்மொழிந்தது த​விர்த்து பல முக்கிய அரிய குறிகள் வரலாற்றில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இவை யுனிகோடில் கூட இடம்பெற்றுள்ளன.

வியப்புக் கேள்விக்குறி (Interrobang – ‽):

இது 1962-இல் அமெரிக்க விளம்பரத் துறை நிபுணர் மார்ட்டின் ஸ்பெக்டர் என்பவரால் உருவாக்கப்பட்டது. ஒரு கேள்வியையும் அதே சமயம் ஒரு வியப்பையும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்த இது உதவுகிறது. (எடுத்துக்காட்டு – “நீ இன்னும் இங்கேதான் இருக்கிறாயா‽”).

இதனை விண்டோஸ் கணினியில் பயன்படுத்த 203D என தட்டச்சு செய்யவும், உடனே Alt + X அழுத்தவும். பின் வியப்புக் கேள்விக்குறி தோன்றும். மேக் கணினியில் பயன்படுத்த (Control, Command, Space ஆகிய மூன்று விசைகளையும் ஒரே நேரத்தில் அழுத்தவும்), பின் தோன்றும் தேடுதல் பட்டையில் குறியின் பெயரை குறிப்பிட்டு பயன்படுத்தலாம்.

கிண்டல் குறி (Irony Mark – ⸮): இது 1580-களில் ஹென்றி டென்ஹாம் என்பவரால் முன்மொழியப்பட்டது. வினாவாக இருந்தாலும் பதில் எதிர்பார்க்காத வாக்கியங்களை குறிக்க தலைகீழான கேள்விக்குறி பயன்படுத்தப்பட்டது. பின்னாளில், இது கிண்டல் செய்வது போன்ற பொருளில் பயன்படுத்தப்பட்டது. இதனை விண்டோஸ் கணினியில் பயன்படுத்த 2E2E என தட்டச்சு செய்யவும், பின் Alt + X அழுத்தவும். பின்னர் கிண்டல் குறி தோன்றும்.

இதில் பெரும்பாலான நிறுத்தற்குறிகள் இன்று புழக்கத்தில் இல்லாவிட்டாலும், இவை மொழியின் ஆழமான உணர்ச்சித் தேவையைச் சுட்டிக்காட்டுகின்றன. “எப்படிச் சொல்கிறோம்” என்பது “என்ன சொல்கிறோம்” என்பதைவிட முக்கியமானது என்பதை இந்தச் சின்னஞ்சிறு அடையாளங்கள் நமக்கு நிரூபிக்கின்றன.

  • மு. இசக்கிமுத்து
Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now