டி(T) எனும் ஒற்றை ஆங்கில எழுத்தில் ஒரு நாட்டின் தற்சார்பு கனவும், ஒரு குடும்பத்தின் நூற்றாண்டு கால அறமும் உறைந்து கிடக்கின்றன. மும்பையின் ஒரு சிறிய நெசவு ஆலையில் தொடங்கி, இன்று உலகெங்கும் நீல நிறக் கொடியாய் உயர்ந்து நிற்கும் இந்த முத்திரை, வெறும் வணிக அடையாளமல்ல; உலக அரங்கில் இந்தியாவின் அடையாளமும்கூட.

1868-ஆம் ஆண்டு, மும்பையில் ஜாம்ஷெட்ஜி டாடா ஒரு வர்த்தக நிறுவனம் மூலம் தனது பயணத்தைத் தொடங்கினார். ‘டாடா’ என்ற சொல்லுக்குப் பார்சி மொழியில் “தந்தை” என்று பொருள். அன்று அவர் விதைத்த விதை, இன்று இந்தியாவின் முதல் எஃகு ஆலை, முதல் நீர்மின் நிலையம் எனப் படர்ந்து விரிந்து நிற்கிறது.
டாடா எழுத்துருவின் பரிணாமம்
டாடா குழுமத்தின் முதல் முத்திரை 1910-ஆம் ஆண்டில் வடிவமைக்கப்பட்டது. இருப்பினும், 1945-இல் ‘டெல்கோ’ (இன்றைய டாடா மோட்டார்ஸ்) தொடங்கப்பட்ட பிறகுதான், இந்த முத்திரை வாகனங்கள், இயந்திரங்கள் மூலம் பொதுமக்களிடையே பெரும் அடையாளமாகப் பரவத் தொடங்கியது. அந்த முத்திரையில் டி (T) எழுத்து சிவப்பு நிறத்தில் இருந்தது. இதனைச் சுற்றி இலைகளால் ஆன நீள்வட்ட வடிவ மாலை இருந்தது. அக்காலகட்டத்தில் இருந்த ஆங்கிலேய அரசவைச் சின்னங்களின் தாக்கத்தால், நிறுவனத்தின் வலிமை, அதிகாரத்தைக் காட்ட இந்த அலங்கார அச்சு வடிவம் பயன்படுத்தப்பட்டது.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, கனரகத் தொழில்களில் டாடா காலடி வைத்தபோது, முத்திரையில் இருந்த அலங்கார மாலைகள் நீக்கப்பட்டன. டி எழுத்து மிகவும் தடிமனான எழுத்துரு வடிவத்துக்கு மாறியது. இது டாடாவின் இரும்பு, எஃகு நிறுவனங்களின் ‘உறுதி’யைப் பறைசாற்றியது.
1990-களின் இறுதியில் டாடா குழுமம் உலகளாவிய அளவில் விரிவடைந்தபோது ஒரு பெரிய சிக்கல் இருந்தது. டாடா குழுமத்தின் கீழ் கிட்டத்தட்ட நூறு நிறுவனங்கள் இருந்தன. ஒவ்வொன்றும் தனித்தனியான முத்திரைகளை வைத்திருந்தன. இந்த சிதறலை ஒன்றிணைக்க வேண்டும் என்ற தேவை இருந்தது.
1998-ல் டாடா நிறுவனத்தின் முத்திரைக்கு நவீன மறுசீரமைப்பு செய்யப்பட்டது. லண்டனைச் சேர்ந்த வொல்ப் ஒலின்ஸ் (Wolff Olins) நிறுவனம் டாடாவின் நவீன முகத்தை செதுக்கியது. இதில் பழைய சிவப்பு நிறம் நீக்கப்பட்டு, ‘டாடா நீலம்’ (Pantone 286C) அறிமுகமானது. கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்குள் டாடா குழுமத்தின் அனைத்து நிறுவனங்களின் கடைக்கோடி தயாரிப்புகளிலும் புதிய முத்திரை கொண்டு சேர்க்கப்பட்டது.
எல்லைகளைத் தாண்டுதல்
இதில் உள்ள டி (T) சின்னம் எந்த அச்சக எழுத்துரு நூலிலிருந்தும் எடுக்கப்படவில்லை. அது முழுக்க முழுக்க வொல்ப் ஒலின்ஸ் வடிவமைத்த தனித்துவ வடிவம். இரண்டு தடிமனான கோடுகள் 90 பாகை கோணத்தில் திரும்புகின்றன. இரண்டும் இணையும்போது டி (T)யின் செங்குத்து பகுதியையும் கிடைமட்ட பகுதியையும் உருவாக்குகின்றன. முத்திரையில் உள்ள டி (T) எழுத்தின் மேல் பகுதி, அதைச் சுற்றியுள்ள நீள்வட்டச் சட்டகத்தைத் தாண்டி வெளியே நீட்டி நிற்கும். இது “எல்லைகளைத் தாண்டி வளரும்” டாடாவின் உலகளாவிய கனவைச் சுட்டிக்காட்டுவதாக கூறப்படுகிறது. டாடா அதிகாரபூர்வமாக இந்த சின்னத்தை “அறிவின் ஊற்று” என்று விளக்குகிறது.
திறந்த மனப்பான்மை
முத்திரையின் கீழே இருக்கும் டாடா (TATA) என்ற சொல்லின் எழுத்துரு நியோ-குரோட்டெஸ்க் ஹெல்வெடிகா (Neo-Grotesque Helvetica) எழுத்துருவின் பாணியில் இருக்கிறது. ஆனால் ஒரு முக்கியமான மாற்றம் இருக்கிறது. இரண்டு ஏ (A) எழுத்துகளிலும் நடுவில் இருக்கும் கிடைமட்ட கோடு நீக்கப்பட்டிருக்கிறது.
ஹெல்வெடிகா என்பது 1957-ல் உருவான உலகின் மிகப் பிரபலமான சான்ஸ்-செரிஃப் எழுத்துரு. லுஃப்தான்சா, பனசோனிக் உட்பட உலகின் பல பெரிய நிறுவனங்கள் ஹெல்வெடிகா எழுத்துருவை பயன்படுத்துகின்றன. அதன் எளிமையும் தெளிவும் அதை இவ்வளவு புகழ்பெற வைத்தது.
ஆனால் டாடா அதை அப்படியே பயன்படுத்தவில்லை. ஏ (A) எழுத்தின் நடுவில் இருக்கும் கோடு, வடிவமைப்பு மொழியில் குறுக்குக்கோடு (crossbar) என்று அழைக்கப்படுகிறது. அந்த கோட்டை நீக்கியதால் ஏ (A) எழுத்தில் ஒரு திறந்த வெளி உருவாகிறது. அது முத்திரைக்கு ஒரு தனி அடையாளம் கொடுக்கிறது. இது புதிய சிந்தனைகளை வரவேற்கும் “திறந்த மனத்தை” குறிப்பதாக கூறப்படுகிறது. ஒரு சிறிய கோட்டை நீக்கியதன் மூலம், ஒரு சாதாரண சொல்லை உலகத்தரம் வாய்ந்த குறியீடாக மாற்றினர். இதன் தடிமனான பாணி நிறுவனத்தின் வலிமையையும் தன்னம்பிக்கையையும் காட்டுகிறது.
மகிழுந்து முதல் உப்பு பொட்டலம் வரை எதிலும் இந்த முத்திரை நெகிழ்வுத்தன்மையுடன் இருக்கிறது. மகிழுந்தில் பொருத்தும்போது இதே முத்திரை மூன்று பரிமாண வெள்ளி நிற உலோக வடிவமாக தோன்றுகிறது. காகிதத்தில் தட்டையாக, மகிழுந்தில் முப்பரிமாண உலோகமாக இருக்கிறது. இந்த நெகிழ்வுத்தன்மையே நல்ல வடிவமைப்பின் அடையாளம் என வடிவமைப்பாளர்கள் கருதுகிறார்கள்.
நீலம் — நம்பிக்கையின் ஆழம்
டாடா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ நிறம் ‘டாடா நீலம்’. நீல நிறம் என்பது அமைதி, நம்பகத்தன்மை, விசுவாசத்தைக் குறிக்கும். கடலைப் போன்ற ஆழமும், வானத்தைப் போன்ற பரந்த மனப்பான்மையும் கொண்ட டாடாவின் கொள்கைகளை இந்த நிறம் பிரதிபலிப்பதாக வடிவமைப்பாளர்கள் கருதுகிறார்கள். வெள்ளை நிறப் பின்னணியில் இந்த நீலம் அமரும்போது, அது தூய்மையை குறிப்பதாகவும் கூறுகிறார்கள்.
- இசக்கிமுத்து
