புத்தகத்தின் அட்டை என்பது நீண்ட வரலாற்றுப் பயணத்தின் சான்று. இன்று நாம் ஒரு புத்தகத்தின் மதிப்பையும் அதன் ஈர்ப்பையும் பெரும்பாலும் அதன் அட்டையை வைத்தே தீர்மானிக்கிறோம். ஆனால், ஒரு காலத்தில் புத்தகங்கள் எந்தவித அட்டைகளும் இன்றி விற்கப்பட்டன என்பது வியப்பான உண்மை. மேலும் வியப்பானது என்னவென்றால் இன்று ஒரு புத்தகத்தின் மதிப்பை உயர்த்தும் அதே அட்டை, ஒருகாலத்தில் குப்பையாகக் கருதப்பட்டு தூக்கி எறியப்பட்ட ஒன்றாக இருந்தது.

அட்டை இல்லாத தொடக்கம்
16–18ம் நூற்றாண்டுகளில் புத்தகங்கள் அட்டை இன்றி வெறும் தாள்களின் தொகுப்பாகவே விற்கப்பட்டன. அச்சுப்பொறியாளர்கள் புத்தகத்தின் முதல் பக்கத்தில் ஒரு ‘வெற்றுப் பக்கத்தை’ (Bastard Title) வைத்துத் தைத்துத் தருவார்கள். இது புத்தகத்தின் பெயரைச் சுருக்கமாகக் குறிக்க உதவியது. மேலும், பிணைப்பு (Binding) செய்யும் செயல்முறையின் போது முக்கியத் தலைப்புப் பக்கம் சேதமடையாமல் இருக்கவும் இது உதவியது. வாசகர்கள் புத்தகத்தை வாங்கிச் சென்று, தங்கள் விருப்பப்படி அட்டையைப் போட்டுக் கொள்வார்கள்.
பாதுகாத்தல்
18-ஆம் நூற்றாண்டின் இறுதியில், புத்தகங்களைப் பாதுகாக்க சிறிய பெட்டி அமைப்புகள் (Slipcase) அறிமுகமாயின. இவை பெரும்பாலும் சிறப்பு பதிப்புகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டன.
பின்னர் 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அலங்காரமான புத்தகங்களைப் பாதுகாக்க காகிதத்தால் சுற்றும் (Wrapping paper) முறை பரவலாகப் பயன்படுத்தப்படத் தொடங்கியது. 1819-ல் ஜெர்மனியில் இத்தகைய உறைகள் பயன்படுத்தப்பட்டதே இதற்கான முதற்கட்ட ஆதாரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆனால் அப்போது இந்தக் காகித உறைகளுக்கு எந்த மதிப்பும் இல்லை. புத்தகத்தை வாங்கியவுடன் காகித உறைகளை கிழித்து எறிவது வழக்கமாக இருந்தது.
குப்பையிலிருந்து கலைக்கான பயணம்
19ம் நூற்றாண்டில் படிப்படியாக உருவான மேலட்டைகள் (Dust Jacket), புத்தகத்தின் வெளிப்புறக் கவசமாகச் செயல்பட்டன. இதன் ஓரங்களில் உள்ள உள்நோக்கிய மடிப்புப் பகுதிகள், புத்தகத்தின் முன், பின் அட்டைகளுக்குள் நுழைக்கப்பட்டு, மேலட்டை நழுவாமல் பிடித்துக் கொள்ள உதவின.
தொடக்கத்தில் இவை வெறும் பாதுகாப்புக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டன. அதனால், வாசகர்கள் அவற்றை பாதுகாக்காமல் தூக்கி எறிந்துவிடுவார்கள். ஆனால் காலப்போக்கில், இதே மேலட்டைகள் புத்தகத்தின் முக்கியமான அடையாளமாக மாறின.
மேலும், 20ம் நூற்றாண்டில் கலைஞர்களும், வடிவமைப்பாளர்களும் புத்தக அட்டைகளை உருவாக்கத் தொடங்கியபோது, அட்டை என்பது ஒரு கலை வடிவமாக மாறியது. ஆல்வின் லஸ்டிக் (Alvin Lustig) போன்ற வடிவமைப்பாளர்கள் எழுத்துருக்கள், எளிமையான வடிவமைப்புகள் மூலம் புத்தக அட்டைகளில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தினர்.
வியாபாரக் கருவியாக மாறிய புத்தக அட்டைகள்
முதல் உலகப் போருக்குப் பிறகு, புத்தக அட்டைகளின் நோக்கம் மாறியது. அதுவரை புத்தகத்தின் உள் பிணைப்பை மறைக்கப் பயன்பட்ட மேலட்டை, வாசகர்களை ஈர்க்கும் விளம்பரக் கருவியாக மாறியது. புத்தகத்தின் சுருக்கம் (Synopsis), ஆசிரியரின் வாழ்க்கை வரலாறு, பாராட்டுக் குறிப்புகள் போன்றவை அட்டையிலேயே அச்சிடப்படத் தொடங்கின. இதன் மூலம், அட்டை என்பது புத்தகத்தின் ‘முகம்’ மட்டுமல்ல, அதன் விற்பனையைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணியாகவும் மாறியது.
இந்த மாற்றத்தை மேலும் வலுப்படுத்தியது 1930களில் ஏற்பட்ட மலிவு பதிப்புப் புரட்சி. பென்குயின் (Penguin Books) போன்ற பதிப்பகங்கள் குறைந்த விலையில் (Paperback) புத்தகங்களை வெளியிட்டதால், வாசிப்பு பொதுமக்களின் அன்றாட செயலாக மாறியது.
புத்தக அட்டையின் உளவியல் தாக்கம்
ஒரு புத்தகத்தின் அட்டை, அதன் உள்ளடக்கத்தைப் படிக்கும் முன்பே வாசகர்களின் மனத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதன் நிறங்கள், எழுத்துருக்கள், படங்கள் வாசகர்களின் முடிவுகளைப் பாதிக்கின்றன.
புத்தக அட்டைகளின் முக்கியத்துவத்தை ஜப்பானியர்கள் மிக நுணுக்கமாகப் புரிந்துள்ளனர். அவர்கள் புத்தகத்தின் மேல் ஒரு சிறிய கச்சை போன்ற காகிதப் பட்டையை (Obi) சுற்றுகிறார்கள். இது புத்தகத்தைப் பற்றிய கூடுதல் தகவல்களைத் தாங்கி நிற்கிறது.
மேலும், ஜப்பானில் பலர் பொது இடங்களில் என்ன புத்தகம் வாசிக்கிறார்கள் என்பது மற்றவர்களுக்குத் தெரியாமல் இருக்க, புத்தகக் கடைகளில் தரப்படும் காகித உறைகளைக் கொண்டு அதை மூடி வாசிப்பது வழக்கமாக உள்ளது. இங்கே, அட்டை என்பது பாதுகாப்பு கருவி மட்டுமல்ல. அது வாசிப்பவரின் தனியுரிமையையும் காக்கும் ஒரு கலாசார கருவியாக மாறுகிறது.
காலப்போக்கில் புத்தகத்தின் உள் பிணைப்புகள் எளிமையாகவும், அதன் மேலட்டைகள் நேர்த்தியாகவும் மாறின. ஒருகாலத்தில் குப்பையாகக் கருதப்பட்ட காகித உறைகள், இன்று ஒரு புத்தகத்தின் அடையாளமாகவும் அதன் மதிப்பை நிர்ணயிக்கும் முக்கியமான அம்சமாகவும் மாறியுள்ளன.
ஒரு புத்தகத்தை நாம் திறப்பதற்கு முன்பே, அதன் அட்டை நமக்குள் ஓர் உலகத்தை உருவாக்குகிறது. அந்த உலகமே, நாம் அந்த புத்தகத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டுமா வேண்டாமா என்பதை அமைதியாக தீர்மானித்து விடுகிறது.
மு. இசக்கிமுத்து
