பதாகையிலிருந்து அச்சுக்கு

மனித நாகரிகத்தின் தொடக்கத்தில் கல்வெட்டுகளாகவும், ஓலைச்சுவடிகளாகவும் இருந்த எழுத்து வடிவம், காகிதத்திற்கு வந்தபோது ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. ஒவ்வொரு மனிதனின் கையெழுத்தும் ஒரு தனித்துவமான கைரேகையைப் போலப் போற்றப்பட்டது. ஆனால், நாம் எழுதுகோல்களைக் கீழே வைத்துவிட்டு விசைப்பலகைகளையும், திறன்பேசிகளையும் கையில் எடுத்துவிட்டோம். இந்த மாற்றம் எளிமையானதாகத் தோன்றினாலும், இதன் பின்னால் பல நுட்பமான கலையுடன் இணைந்த தொழில்நுட்பப் போராட்டங்கள் ஒளிந்துள்ளன.

கையெழுத்தின் வீழ்ச்சியும் தொழில்நுட்பத்தின் எழுச்சியும்

ஒரு காலத்தில் ஒருவரின் ஆளுமையை அவரது கையெழுத்தைக் கொண்டே அறிய முடிந்தது. மை பேனாக்களின் அந்த ‘ஈரப்பதம்’ ஒருபோதும் விசைப்பலகைகளில் கிடைக்காது என்றே நம்பப்பட்டது. இருப்பினும், கணினி உலகுக்கு மாறியபோது ஏற்பட்ட மிகப்பெரிய சவால் என்னவென்றால், மனித உணர்வுகளைக் கொண்ட அந்த அழகான வளைவுகளைத் திரையில் படவணுக்களாக (Pixels) மாற்றுவதுதான். இன்று நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு எண்ணிம எழுத்துருவும், கையால் எழுதப்பட்ட ஆயிரக்கணக்கான மாதிரிகளில் இருந்து செதுக்கப்பட்டவையே.

வரலாற்றுப் பின்னணி: தூரிகை முதல் தொழில்நுட்பம் வரை

இந்திய அச்சுக்கலையின் வரலாறு என்பது எழுத்துக்களின் மாற்றம் மட்டுமல்ல; அது உழைப்பு, வணிகம், பண்பாட்டின் பரிணாமம் என்றே கூறலாம். தொழில்நுட்ப எழுத்துருக்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, இந்தியாவின் தெருக்கள் ஒரு மாபெரும் எழுத்து விளையாட்டு மைதானமாகவே இருந்தன.

வீதிவழி அச்சுக்கலை (Vernacular Signs)

 ஒரு காலத்தில் தகரத் தகடுகள், பலகைகள், திரைப்பட விளம்பரங்கள், கனகர வாகனங்களின் பக்கவாட்டுகளில் கைகளால் வரையப்பட்ட எழுத்துகளே நகரங்களின் அடையாளமாக இருந்தன. வணிகர்களுக்குத் தேவையான தயார்நிலை (Readymade) எழுத்துருக்கள் இல்லாததால், ஓவியர்களே தங்களுக்குத் தெரிந்த பாணியில் தமிழ், தேவநாகரி, உருது முதலிய மொழிகளில் புதிய வடிவங்களை உருவாக்கினர். வேகமும் தெளிவுமே அதன் முதன்மை நோக்கமாக இருந்தன. 1990-களில் இந்தியா வந்த எழுத்தாளர் வி.எஸ். நைப்பால், “சிறிய கடைகளில் கூட பல வண்ணங்களில், மிகவும் நுணுக்கமான கலைத்திறனுடன் கூடிய பெயர்ப்பலகைகள் இருக்கிறது” என வியந்து பாராட்டியுள்ளார்.

தொழில்நுட்பத் தேவையும் மாற்றமும்

19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் அச்சு இயந்திரங்கள் அதிகளவில் பயன்பாட்டுக்கு வந்தபோது, கைகளால் வரையப்பட்ட எழுத்துகளின் நெகிழ்வுத்தன்மை, இயந்திரங்களின் சட்டகத்திற்குள் அடங்கும் வகையில் சுருக்கப்பட்டது. 15, 16-ஆம் நூற்றாண்டுகளில் போர்ச்சுகல் மாலுமிகள் புதிய நிலங்களைக் கண்டறிந்த போது இருந்த அதே துடிப்பு, இந்திய ஓவியர்களின் தூரிகைகளிலும் இருந்தது. ஆனால், 20-ஆம் நூற்றாண்டின் இறுதியில் நெகிழி அச்சு (Vinyl Printing) மலிவானபோது, இந்த எழுத்துரு ஓவியக் கலை மெல்ல மறையத் தொடங்கியது.

நவீனமும் நாட்டின் அடையாளமும்

1947-க்குப் பிறகு, சத்யஜித் ரே போன்ற கலைஞர்கள் நவீனத்தையும், மாநில மொழிகளின் உணர்வையும் இணைத்தனர். அவரது எழுத்துருக்கள் மேலை நாட்டு பாணியைப் பின்பற்றாமல், இந்திய மொழிகளுக்கே உரியத் தனித்துவத்தைக் கொண்டிருந்தன. ‘ரே ரோமன்’ போன்ற எழுத்துருக்களை உருவாக்கிய சத்யஜித் ரே, இந்திய மொழிகளை தொழில்நுட்ப யுகத்திற்குத் தயார் செய்த ஆர்.கே. ஜோஷி போன்ற ஆளுமைகளே இன்றைய நவீன வடஇந்திய எழுத்துருக்களுக்கு அடித்தளம் அமைத்தனர்.

பாதுகாப்பு முயற்சிகள்: வடஇந்தியா முதல் தென்னிந்தியா வரை

இந்த அரிய எழுத்துரு கலையைப் பாதுகாக்கும் முயற்சிகள் இந்தியா முழுவதும் நடந்து வருகின்றன. டெல்லியை மையமாகக் கொண்ட ‘அக்‌ஷராயா’ (Aksharaya) போன்ற அமைப்புகள், அழிந்து வரும் இந்திய மொழிகளின் கையெழுத்துக் கலைகளை ஆவணப்படுத்தி, அவற்றை நவீன எழுத்துருக்களாக மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளன.

தமிழ்நாட்டின் டைப் டிஃபன் எழுத்துலா

தமிழகத்தில் அச்சுக்கலை, எழுத்துருக்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த எழுத்துரு வடிவமைப்பாளர் முத்து நெடுமாறன் முன்னெடுத்த ‘டைப் டிஃபன்’ (Type Tiffin) முயற்சி, அச்சுக்கலை ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

சென்னையில் கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் 23ஆம் நடைபெற்ற இந்த ‘எழுத்துலா’ என்பது வெறும் நடைப்பயணமாக அமையாமல், நம் தெருக்களில் புதைந்து கிடந்த எழுத்துருக்களை மீட்டெடுக்கும் ஒரு பயணமாக அமைந்தது. அச்சிடப்பட்ட பெயர்ப்பலகைகள் வருவதற்கு முன்பு, கலைஞர்கள் தங்கள் கைவண்ணத்தால் உருவாக்கிய தனித்துவமான எழுத்து வடிவங்களை எழுத்துலா குழுவினர் ஆவணப்படுத்தினர்.

வடசென்னையின் எம்.சி. சாலையின் பழமையான வீதிகளில் ஒன்றுகூடிய ஆர்வலர்கள், அங்கிருந்த சுவர்களிலும், கடைகளின் பெயர்ப்பலகைகளிலும், பழைய வாகனங்களிலும் கைகளால் எழுதப்பட்டிருந்த நுட்பமான எழுத்துருக்களைத் தேடிச் சென்றனர். எழுத்துக்களுக்கு இடையே உள்ள இடைவெளி, புள்ளிகள், கொக்கிகள் கையாளப்பட்ட விதம், குறிப்பாகச் சாய்வாக எழுதப்பட்ட எழுத்துக்களில் இட நெருக்கடியைக் கலைஞர்கள் எவ்வளவு நேர்த்தியாகக் கையாண்டிருக்கிறார்கள் என்பன போன்ற தொழில்நுட்ப நுணுக்கங்களை இந்த எழுத்துலாவின் போது அவர்கள் விரிவாக ஆய்வு செய்தனர்.

TypeTiffin

மொழியின் தொனிக்கு ஏற்ப எழுத்துருக்கள் எவ்வாறு மாறுகின்றன என்பதையும், கைகளால் வரையப்பட்ட அந்த அழகியலை எப்படி நவீன தொழில்நுட்ப எழுத்துருக்களாக (Digital Fonts) மாற்றலாம் என்பதையும் இந்த நிகழ்வு புரியவைத்தது. லண்டன், நியூயார்க் போன்ற நகரங்களில் புகழ்பெற்ற இந்த எழுத்துலா கலாசாரம், சென்னையிலும் வெற்றிகரமாகத் தடம் பதித்துள்ளது. இது வெறும் ஆய்வு மட்டுமல்ல, நம் ஊரின் தெருக்களில் உழைத்த பெயரறியாக் கலைஞர்களுக்குச் செய்யப்பட்ட ஓர் அங்கீகாரமாகவும் அமைந்தது.

கையெழுத்துக் கலை என்பது முடிந்துபோன ஓர் அத்தியாயம் அல்ல. அது நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் ‘எழுத்துருக்களாக’ மறுபிறவி எடுத்துள்ளது. ‘எழுத்துலா’ போன்ற முயற்சிகள் நம்மிடம் இருக்கும் விழுமியங்களை மீட்டெடுத்து, அவற்றை தொழில்நுட்ப யுகத்தில் நிலைபெறச் செய்கின்றன.

  • மு. இசக்கிமுத்து
Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now