மரணத்தில் யாரும் எதுவும் எடுத்துச் செல்வதில்லை என்றாலும், போஆ (Boa Sr) தன்னுடன் எடுத்துச் சென்றது, அறுபத்தையாயிரம் ஆண்டுகள் பழைமையான ஒரு மொழியை. இயற்கையுடன் மனிதன் நிகழ்த்திய தொன்மையான உரையாடல் ஒன்றின் கடைசி ஒலியை.

தொல் அந்தமானிய மொழிக் குடும்பத்தின் மொழிகளுள் ஒன்றான அக போ அல்லது போ (Aka Bo / Bo) மனித குல வரலாற்றில் இருந்து அண்மையில் அழிந்து போன மிகத் தொன்மையான இந்திய மொழிகளுள் ஒன்று. அதன் இறுதி உச்சரிப்பை நிகழ்த்தியவர்தான் போஆ (Boa Sr).
2020 ஆண்டில் அதே மொழிக் குடும்பத்தில் இருந்து அக காரி (Aka Cari) என்னும் தொன்மையான மொழி மறைந்தது. வீரமும், கருணையும், மொழியைக் காப்பதற்கான மும்முரமும் ஒருங்கே பெற்ற அரசகுல வாரிசான லிச்சோ (Licho) அதைத் தன்னுடன் கொண்டு போனார்.
இதே போல போறோ (Boro Jr) உடன் அக கோராவும், நாஓ (Nao Jr) உடன் கொயினே மொழியும் மாய்ந்தன.
மொழிப் பன்மையின் பெருமிதம் கொண்ட இந்தியாவில் சுமார் எழுநூறுக்கும் மேற்பட்ட மொழிகள் இன்று புழக்கத்தில் இருக்கின்றன. ஆனால் அவற்றுள் பலவற்றுக்குத் தலைமுறைத் தொடர்ச்சி இல்லை. ஒருவர் மட்டுமே பேசும் மொழிகள் முதல் ஓராயிரம் பேர் மட்டுமே பேசும் மொழிகள் வரை சுமார் இருநூறு மொழிகள் இன்று அழியும் பேராபத்தில் இருக்கின்றன.
தொல் அந்தமானிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்த மொழிகள் இதில் முதலிடம் பெறுகின்றன. ஓன்கே (Onge), ஜெரு (Jeru), சென்டினலீஸ் (Sentinelese) போன்ற பல.
அதற்கடுத்த இடத்தில் இருப்பவை, ஒரிசா, ஆந்திரா,ஜார்க்கண்ட் பகுதியில் இருக்கும் மொழிகள். முண்டாரி (Mundari), பிர்ஹோர் (Birhor), ஜுவாங் (Juang), போண்டா (Bonda), கோரம் (பரேங்கி) (Gorum (Parengi)), ஆகியவை அவற்றுள் முக்கியமானவை.
தமிழ்நாடு, கர்நாடகா பகுதியைச் சேர்ந்த தோடா (Toda), கோட்டா (Kota), இருளா (Irula), துளு (Tulu), கொடகு (Kodagu) போன்ற மொழிகளும் காப்பாற்ற வேண்டிய நிலையில் இருப்பவையே.
இவை தவிர இந்தியாவின் மத்திய, வட மேற்கு, வட கிழக்குப் பகுதியைச் சார்ந்த நிஹாலி (Nihali), டோட்டோ (Toto), கொய்ரெங் (Koireng), அய்மோல் (Aimol), கோண்டி (Gondi), கோக்பொரோக் (Kokborok), குருக் (Kurukh), கர்பி (Karbi) ஆகிய மொழிகளும் அபாயத்தை எதிர்நோக்கி இருக்கின்றன.
இவை எல்லாம் பெரும்பாலும் பழங்குடியின மக்கள் பேசும் மொழிகள். இயற்கையுடன் தொடர்பாட, மனிதன் கண்டறிந்த ஒலிக்குறிப்புகள். குறிப்பிட்ட பகுதிகளில் இருக்கின்ற அரிய வகைத் தாவரங்கள், விலங்குகளின் பெயர்கள் அந்தந்த ஆதி மொழியின் ஒலிக்குறிப்புகளிலேயே இருக்கின்றன. அம்மொழிகள் அழிகையில் அம்மண்ணின் சூழலியல் அறிவும் அழிகின்றது.
இயற்கையுடன் இணைந்த பழம் மொழிகளில் இருக்கின்ற அரிதான ஒலிக் கட்டமைப்புகள், தொன்மையான இலக்கண வடிவங்கள், தனித்துவமான முன்னொட்டுக்கள் மனித பரிணாம வளர்ச்சி சார்ந்த ஆய்வுகளுக்குப் பெருமளவில் உதவி செய்கின்றன.
அவற்றுள் பெரும்பாலனவற்றுக்கு எழுத்து வடிவம் இல்லை. அதனால் அவற்றை ஆவணப்படுத்துவதும் சேமிப்பதும் சவாலாக இருப்பதாக மொழியியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
நகரமயமாக்கல் காரணமாக பழங்குடியினர் இடம் பெயர்வது இம்மொழிகளின் அழிவுக்கு முக்கியக் காரணியாகப் பார்க்கப்படுகின்றது.
இயற்கையை மீறிய மனித கண்டுபிடிப்புகள் வளர வளர உலகப் பொது மொழியாக ஆங்கிலமும் இதர பெரிய மொழிகளும் ஆதிக்கம் செலுத்துகின்றன. அதனால் நிர்வாகம் சார்ந்த வசதிகளுக்காக பள்ளிக் கல்வியிலும் அவ்வாறான பொது மொழிகளுக்கே முக்கியத்துவம் தரப்படுகின்றது.
பழங்குடியினர் என்கின்ற அடையாளத்தை உதறத் துடிக்கும் இளந்தலைமுறையினரும் அதன் வழி செல்வதும் நடக்கிறது. அதனால், தாய் மொழிக் கல்வி, பின் தங்கி, இல்லாமல் ஆகிக்கொண்டு வருவதும் இவற்றின் அழிவுக்கு இன்னும் ஒரு காரணம்.
தொழில் நுட்பம் வெகுவாக முன்னேறிய இன்றைய இணைய உலகில், சில தொன் மொழிகள், ஒலிக்குறிப்புகளாகக் கிடைப்பதே மிக அரிதாக இருக்கின்றது.
இந்திய மொழிகளுக்கான மைய நிறுவனம் (Central Institute of Indian Languages), இந்த மொழிகளைக் காக்கவும், அப்படி முடியாவிட்டால் ஆவணப்படுத்தவும் கொண்டு வந்த திட்டம்தான் அழியும் நிலையிலுள்ள மொழிகளைப் பாதுகாத்துப் பேணும் திட்டம் (Scheme for Protection and Preservation of Endangered Languages – SPPEL).
பத்தாயிரத்துக்கும் குறைவான பேச்சாளர்களைக் கொண்ட மொழிகளும், முறையாக ஆவணப்படுத்தப்படாமல் இருக்கும் மொழிகளுமே இதன் இலக்கு.
குறிப்பிட்ட மொழி பேசும் இடங்களுக்குச் செல்வது, அதன் கடைசிப் பேச்சாளர்களை நேர்காணல் செய்வது, அவர்களிடம் இருக்கும் கதைகளையும் நாட்டார் பாடல்களையும் அவர்களின் குரலிலேயே பதிவு செய்வது என்பவை இந்த திட்டத்தின் படிமுறைகளாகும்.
அத்தோடு அந்த மொழிகளின் இலக்கணத்தை ஆவணப்படுத்துதல், அவற்றிலிருந்து அகராதிகள் தயாரித்தல், அம்மொழி சார்ந்த பண்பாட்டுப் பழக்க வழக்கங்கள், இயற்கையுடனான தொடர்பு ஆகியவற்றை முறையாக கற்றல் ஆகியவையும் இத்திட்டத்தின் மூலம் நிகழ்கின்றன.
மேலும் வாய்ப்பிருக்கும் சில மொழிகளை அவற்றின் அடுத்த தலைமுறைக்கு ஓர் அடிப்படை அளவிலாவது கற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எழுத்துருக்கள் இல்லாத மொழிகளுக்கு அவை உருவாக்கப்படுகின்றன.
பாரதவாணி திட்டம் அவற்றின் ஒலி, எழுத்து வடிவங்களை இணைய வழியில் தரவேற்றுவதை சாத்தியப்படுத்துகிறது.
இவை தவிர ஒரே குடும்பத்தின் குறிப்பிட்ட மொழிகளுக்கு இடையிலான வட்டார, பேச்சு வழக்கு சார்ந்த வேறுபாடுகளை சரியாக இனம் கண்டு தனித்தனியாக ஆவணப்படுத்தலும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.
இதை செயல்படுத்துவதற்காக இந்நிறுவனம் கோடை, குளிர்கால மொழி ஆவணப்படுத்தும் முகாம்களை அவ்வப்போது நிகழ்த்தி வருகின்றது. இதில் மொழியியல் வல்லுநர்கள் மட்டுமல்லாமல் மாணவர்களும் கலந்து கொள்கின்றனர்.
ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல், கலாசார அமைப்பான யுனெஸ்கோ (UNESCO) பேச ஆரம்பிக்கும் குழந்தைகளுக்கு தாய்மொழிக் கல்வியை கற்றுக்கொடுப்பதே மொழிகளை காப்பதற்கான ஒரே வழி என்று பரிந்துரைக்கிறது.
இந்த அமைப்பு ஒரிசா அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் “தாய் மொழி அடிப்படையிலான பன்மொழி கல்வி” (Mother Tongue Based Multilingual Education) என்கின்ற செயல் திட்டத்தை “சிறந்த மாதிரித் திட்டம்” என்று பாராட்டுகிறது.
இந்த திட்டத்தில் பழங்குடியினக் குழந்தைகள் தங்கள் ஆரம்பக் கல்வியை அவர்களின் தாய்மொழியிலேயே கற்கின்றார்கள். குய் (Kui), சோரா (Saora), ஜுவாங் (Juang), சந்தாலி (Santali), முண்டாரி (Mundari), ஹோ (Ho), போண்டா (Bonda), தேசியா (Desia), குருக் (Kurukh), காரியா (Kharia) போன்ற மொழிகள் அவற்றுள் குறிப்பிடத்தக்கன. அதன் கூடவே ஆங்கிலம், இந்தி போன்ற பொது மொழிகளும் கற்பிக்கப்படுகின்றன.
இவற்றுள் முண்டாரி மொழி சுமார் 16 லட்சம் பேரால் பேசப்படுகிறது. இம்மொழியை எழுதப் பயன்படும் எழுத்துமுறை 1980களில் ரோஹத் சிங் நாக் என்பவரால் உருவாக்கப்பட்ட நாக் முண்டாரி ஆகும். ஒரிசா அரசு தம் மாநிலத்தின் பள்ளிகளில் இதைக் கற்பிக்கத் திட்டம் வகுத்துச் செயல்படுத்திவருகிறது. எனினும் கணினியில் ஏறினால் இம்மொழியின் எதிர்காலம் அழிவின்றிக் காக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். இந்நோக்கத்துடன் கூகுள் போன்ற பெருநிறுவனங்கள் இம்மொழிகளுக்கான யூனிகோடு எழுத்துருக்களை உருவாக்க முனைகிறது. எழுத்துருவியல் வல்லுநர் முத்து நெடுமாறன் நாக் முண்டாரி மொழிக்கான யூனிகோடு எழுத்துருவை வடிவமைத்துத் தந்துள்ளார்.
மேற்கு வங்கத்தின் டோட்டோ (Toto) மொழி தற்பொழுது செயற்கை நுண்ணறிவோடு (Artificial Intelligence) ஒத்திசையும் வகையில் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
அரசு, அரசு சார்பற்ற பல்வேறு நிறுவனங்கள், தன்னார்வலர்களின் முயற்சிகளால் அழியும் மொழிகளை ஆவணப்படுத்தி சேமிக்கவே முடியும். ஆனால் அது போதாது.
அவை மனிதர்களுக்கிடையே பேசப்படவேண்டும். கணினி, திறன்பேசி போன்ற நவீன கருவிகளில் பயன்படுத்தத்தக்க வாய்ப்பினைப் பெறவேண்டும். மொழி விளையாட்டு, அகராதி என்று மற்றெல்லா மொழிகளையும் போலவே எல்லா தளங்களிலும் நிறையவேண்டும். முக்கியமாக, அன்றாட வாழ்வில் புழங்கப்படவேண்டும்.
பெற்றோரை, துணைவரை இழந்த ஒருவரைக் குறிக்கும் சொற்கள் பல மொழிகளில் இருக்கின்றன. லிச்சோவுடன் (Licho) அழிந்து போன அக காரி (Aka Cari) மொழியில் ரவ்புச் (raupuch) என்று ஒரு சொல் இருந்தது. அது சகோதரரை இழந்த ஒருவரைக் குறிக்கும் சொல். உலகில் வாழும் வேறு பல மொழிகளில் இந்தப் பொருள் தரும் சொல் இல்லை.
போஆ (Boa Sr) உடைய பெற்றோர் உறவினர் அனைவரும் இறந்த பின்னர், சுற்றத்தாருடன் இந்தியிலும் ஏனைய அந்தமானிய மொழிகளிளுமே அவர் பேசினார். தாய் மொழியை பேசுவதற்கு அவருக்கு வாய்ப்புகள் இருக்கவில்லை. ஆனால் தன்னை சுற்றி வாழும் பறவைகளை தன் முன்னோர் என்று நினைத்து அவர்களுடன் தன் தாய்மொழியில் பேசியும் பாடியுமே தன் இறுதிக்காலத்தை கழித்தார். அவருடன் அந்தத் தொடர்பாடலும் அறுந்தது.
செயற்கை பெருகப் பெருக மானுடம் சுருங்கிக் கொண்டு செல்கின்றது. போஆ (Boa Sr) சிரித்துக் கொண்டே மீண்டும் மீண்டும் பாடிய கடைசிப் பாடல் “அ டுரே கையோ லருகா”. இந்த உலகம் வாழத் தகுந்ததல்ல என்பது அதன் பொருள்.
- தர்ஷனா கார்த்திகேயன்
