தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால், சமகால மனித உரையாடல் என்பது சொற்களைத் தாண்டி ‘உணர்ச்சிக்குறிகள்’ (Emojis) எனப்படும் காட்சி மொழியை நோக்கி நகர்ந்துள்ளது. அச்சுக்கலையும் எழுத்துருக்களும் காலந்தோறும் மாறுவது போல, இந்த உணர்ச்சிக்குறிகளின் பயன்பாட்டு விதிகளும் தலைமுறைகளுக்கு ஏற்ப அதிவேகமாக மாறி வருகின்றன. 30 வயதைக் கடந்த ஈராயிரக்குழவிகள் தலைமுறையினர் உணர்ச்சிக்குறிகளை அவற்றின் நேரடிப் பொருளில் பயன்படுத்தும் நிலையில், இன்றைய இணைய உலகை ஆளும் ‘ஜென்-சி’ (Gen Z) தலைமுறையினர் தங்களுக்குள் முற்றிலும் புதிய குறியீட்டு மொழியையே கட்டமைத்துள்ளனர்.

மாறிப்போன சிரிப்பின் வடிவமும் அதீத வெளிப்பாடும்
கடந்த பத்தாண்டுகளாக இணையத்தில் உலகளாவிய ரீதியில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ‘மகிழ்ச்சிக் கண்ணீர்’ (😂) குறியீட்டை இன்றைய இளைஞர்கள் முற்றிலும் காலாவதியானதாக ஆக்கிவிட்டனர். அதை வயதானவர்களை கண்டறியும் அடையாளமாக மாற்றிவிட்டனர். அதற்குப் பதிலாக, தங்களின் அதீத நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்த அவர்கள் ‘மரண உணர்ச்சிக்குறி’ (💀) அல்லது ‘அழுகை உணர்ச்சிக்குறி’ (😭) ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
மரணத்தைக் குறிக்கும் மண்டை ஓட்டைச் சிரிப்பிற்கான உச்சக்கட்டக் குறியீடாகப் பயன்படுத்துவது, அதீத உணர்ச்சியின் வெளிப்பாடு என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இன்றைய இளைஞர்களின் உணர்ச்சிக்குறி விதிகளில் முதன்மையானது மறைமுக அங்கதம். அதாவது, நாம் ஒரு கருத்தை வெளியில் நேர்மறையாகக் கூறிவிட்டு, அதன் உட்பொருளை மாற்ற உணர்ச்சிக்குறிகளைப் பயன்படுத்துவதாகும். ஒரு குறியீட்டின் அசல் பொருள் என்னவோ, அதற்கு முற்றிலும் எதிரான ஒரு சூழலில் அதைப் பயன்படுத்துவதில் இவர்கள் தனித்துவம் காட்டுகின்றனர்.
உருகும் முகம் (🫠): கடுமையான மனஅழுத்தம் அல்லது சங்கடமான ஒரு சூழலை எதிர்கொள்ளும்போது “நிலைமை மோசமாக இருக்கிறது, ஆனால் நான் அதை சகித்துக் கொள்கிறேன்” என்பதை உணர்த்த இதைப் பயன்படுத்துகின்றனர்.
தொப்பி மனிதன் (🤠): சோகத்தையோ, வலியையோ மனத்திற்குள் மறைத்துக்கொண்டு வெளியில் போலியாகப் புன்னகைப்பதைக் குறிக்கும் குறியீடாக இது மாறியுள்ளது.
கண்ணீருடன் புன்னகை (🥲): விதியை நினைத்து நொந்து கொள்வதையோ அல்லது வேறு வழியின்றி ஒரு கசப்பான உண்மையைச் சிரித்துக் கொண்டே ஏற்பதையோ இது குறிக்கிறது.
புள்ளிக் கோடுகளாலான முகம் (🫥): ஒரு சங்கடமான சூழலில் இருந்து, “நான் இப்போது இங்கே இல்லாதது போல மறைந்துவிட ஆசைப்படுகிறேன்” என்ற உணர்வின் வெளிப்பாடாகும்.
போலித்தனத்தை உடைத்தலும் அரசியலும்
சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் கருத்துக்களின் போலித்தன்மையைக் கண்டறியவும், தங்களின் தனித்துவமான ஆளுமை நிலையை வெளிப்படுத்தவும் ஜென்-சி தலைமுறை தனித்துவமான விதிகளைப் பின்பற்றுகிறது. யாராவது ஒரு கதையை மிகைப்படுத்தி அல்லது அப்பட்டமாகப் பொய் சொல்கிறார்கள் என்றால், “நீ சொல்வது அப்பட்டமான பொய்” என்பதை வார்த்தைகளால் சொல்லாமல் ‘நீல நிறத் தொப்பி’ (🧢) குறியீட்டை மட்டும் அனுப்பிவிடுகிறார்கள். ஏனெனில், இவர்களின் சமகால மொழியில் தொப்பி என்றால் ‘பொய்’ என்று பொருள்.
அதேபோல, முட்டாள்தனமான செயல்களைக் கேலி செய்ய ‘கோமாளி’ (🤡) குறியீடும், அதிர்ச்சியில் வாயடைத்துப் போய் நிற்பதைக் குறிக்க ‘கண்கள், வாய்’ (👁️👄👁️) இணைப்புக் குறியீடும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், தங்களின் அதீத தன்னம்பிக்கையை நிலைநிறுத்த ‘நகப்பூச்சு’ (💅) குறியீட்டையும், எதற்கும் அசராத பிடிவாதமான குணத்தைக் குறிக்கக் ‘கற்சிலை’ (🗿) குறியீட்டையும் தங்களின் காட்சி அடையாளமாக மாற்றியுள்ளனர்.
அலுவலகச் சூழல்களும் மொழியியல் சிக்கல்களும்
அன்றாட உரையாடல்களில் சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் உயர்த்திய கட்டைவிரல்’ (👍) குறியீடு, இன்று ஜென்-சி பயனர்களிடையே முற்றிலும் எதிர்மறையான அர்த்தத்தைப் பெற்றுள்ளது. மேலதிகாரிகள் அனுப்பும் செய்திகளுக்கு ‘சரி’ அல்லது ‘பார்த்துவிட்டேன்’ என்பதைக் குறிக்கப் போடப்படும் இந்த ஒரு குறியீடு, இன்றைய இளைஞர்களுக்கு “எனக்கு இதில் விருப்பமில்லை” என்ற ஒருவித ‘அலட்சியமான கோபத்தை’ (Passive-Aggressive) வெளிப்படுத்துவதாகத் தோன்றுகிறது.
சொற்களற்ற இத்தகைய குறியீடுகள், மின்னஞ்சல் அல்லது வாட்சாப் போன்ற தளங்களில் தொனியை உணர்த்துவதில் எவ்வளவு பெரிய உளவியல் சிக்கலையும், தேவையற்ற தவறான புரிதல்களையும் வெவ்வேறு தலைமுறையினருக்கு இடையே ஏற்படுத்துகிறது என்பதை ‘தி கார்டியன்’ இதழின் கள ஆய்வு விரிவாக விவரித்துள்ளது.
காதல், அன்பின் பாரம்பரிய அடையாளமான துடிப்பான ‘சிவப்பு இதயம்’ (❤️) உணர்ச்சிக்குறியை விடுத்து, தங்களின் ரசனைக்கு ஏற்ப வெள்ளை (🤍) அல்லது கருப்பு (🖤) இதயங்களைத் தேர்ந்தெடுப்பதும் இவர்களின் புதிய அழகியல் விதியாகும்.
வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், 19-ஆம் நூற்றாண்டில் தட்டச்சுப் பொறிகள் அறிமுகமானபோது, அது மனிதர்களின் எழுத்து வேகத்தைக் கூட்டியதே தவிர, மனித உணர்வுகளை மாற்றவில்லை. ஆனால், இன்றைய தொடுதிரை உலகத்தின் உணர்ச்சிக்குறிகள் மனித உரையாடலின் ஆன்மாவையே மாற்றி வருகின்றன. அந்த வகையில், ஜென்-சி தலைமுறையின் இந்த புதிய விதிகள் என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல. அது மின்னியல் உலகத்தின் புதிய மொழியியல் இலக்கணமாகவும், பன்முகத்தன்மையின் அடையாளமாகவும் உருவெடுத்து வருகிறது என்பதே நிதர்சனம்.
- மு. இசக்கிமுத்து
