சொல்வளம் 3 முன்னோட்டப் பதிப்பு

களிப்பூட்டும் விளையாட்டனுபவம் தரும் சொல்வளம் செயலியின் முன்னோட்டப் பதிப்பினை மகிழ்ச்சியுடன் அறிமுகப்படுத்துகிறோம். 

சொல்வளம். ஒரே செயலியில் நான்கு தமிழ் சொல் விளையாட்டுகள். மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இவை, தமிழ் சொல்விளையாட்டில் ஓர் அரிய அனுபவம் அளிப்பவை. 

சொல்வளம், 2016இல் ஓர் எளிய தமிழ் சொல் தேடல் விளையாட்டாகத் தொடங்கியது. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு சொல்வளம் 3 தற்போது முற்றிலும் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

நான்கு விளையாட்டுகள் அடங்கிய தொகுப்பு இது. சொல் தேடல், கட்டத்தில் மறைந்துள்ள சொற்களை இழுத்திணைத்துச் சொற்களைக் கண்டெடுப்பது. சொல் ஆக்கம், உயிர்மெய் எழுத்துகளைத் தொட்டிணைத்துச் சொற்களை உருவாக்குவது. சொல் வரிசை, கலைந்திருக்கும் திருக்குறள், பழமொழி வரிகளின் சொற்களைச் சரியான வரிசையில் அமைத்து முறையான வாக்கியமாக்குவது. 

நான்காவது விளையாட்டு, தமிழின் தொன்மையைத் தொடரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொன்மை வாய்ந்த பழந்தமிழ் வரிவடிவமான தமிழி எழுத்துகளைப் படிப்படியாக எழுதக் கற்றுக்கொள்ளலாம். பழைய கல்வெட்டுகளைப் படிக்கலாம். தமிழி வடிவத்தில் எழுதலாம். இதுமட்டுமின்றி, தமிழி எழுத்துகளைக்கொண்டு சொற்றொடர்களை வண்ணமயமான பின்னணியில் வைத்து உருவாக்கலாம். நண்பர்களுக்குப் பகிரலாம். 

சிறப்பான விளையாட்டுனுபவத்தினை வழங்கும் விதத்தில் இவ்விளையாட்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிறிய வெற்றியும் கொண்டாடப்படுகிறது. ஒரு புதிரை வெற்றிகரமாக முடித்தவுடன், வண்ணக் காகித மழை பொழிவதையும், தமிழ் எழுத்துகள் மலர்ந்து திரையை நிரப்புவதையும் காணலாம். தொடுவதிர்வும், மெல்லொலியும் வெற்றி ஆரவாரத்தில் இணைந்து உற்சாகத்தைக் கூட்டுகின்றன. 

ஒவ்வொரு விளையாட்டுக்கும் தனித்துவமான வடிவமைப்பு. அனைத்திலும் ஒரே வகைக் காசு, பல்வகைப் பயன்பாடு. 

ஐபோன் அல்லது ஆண்டிராய்டில் பதிவிறக்கம் இலவசம். விளையாட்டுக் கணக்கு தேவையில்லை.

முன்னோட்டப் பதிப்பை நிறுவ முதலில் பரிசோதனை செய்யும் பயனராக இணையுங்கள். இப்போதே புதிய சொல்வளம் செயலியைப் பதிவிறக்கம் செய்யுங்கள். இணைப்புகளை சொல்வளம் இணைய தளத்தில் (solvalam.com) காணலாம்.

solvalam.com

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now