தொலைப்பேசியும் தமிழ் பேசட்டும்

நாம் செய்யும் ஒரு சிறிய ‘அமைப்பு’ மாற்றம், தமிழின் தொழில்நுட்ப எதிர்காலத்துக்கு வலு சேர்க்கும் வல்லமை உடையது.

மறைந்துபோன ஓலைச்சுவடிகளிலிருந்தும், காலத்தால் அழியாத கல்வெட்டுகளிலிருந்தும் காகிதப் பக்கங்களுக்கு நகர்ந்த தமிழ் மொழி, இன்று தொடுதிரைகளின் வழியே தன் அடுத்தகட்டப் பரிணாமத்தை எட்டியுள்ளது.

தமிழைப் போற்றும் பாங்கு நம்மிடம் உண்டு. ஆனால் நாம் தமிழ் மொழியை நேசிக்கிறோம் என்பது, நம் கைகளில் இருக்கும் திறன்பேசிகளுக்குத் தெரியுமா என்ற கேள்வி எழும்போது, பெரும்பாலானோரின் பதில் ‘இல்லை’ என்பதாகத்தான் இருக்கிறது. திறன்பேசி இதனைத் தெரிந்துகொள்வதால் என்ன நடந்துவிடப்போகிறது என்பதும் பலருடைய கேள்வியாக இருக்கும். ஆனால் அதற்குள் தமிழ் மொழியின் வளர்ச்சியும், உலகளாவிய நிறுவனங்களின் தொழில்நுட்ப அரசியலும் அடங்கியிருக்கிறது. முதலில் இதன் பின்னணியில் என்ன நடக்கிறது என்பதை உணர்ந்துகொண்டு, பின்னர் திறன்பேசிக்கு அதை எப்படித் தெரியவைப்பது என்பதைப் பார்க்கலாம்.

திறன்பேசிகளின் பின்னணியில் படிமுறைத் தீர்வு (Algorithm)

பயனர் தன் திறன்பேசி அமைப்புகளில் சென்று ஒரு மொழியைத் தேர்ந்தெடுக்கும்போது, பின்னணியில் இயங்குதளம் (ஆண்டிராய்டு அல்லது ஐஓஎஸ்) ஒரு தனித்துவமான உள்ளிடக் குறியீட்டை (Locale) உருவாக்குகிறது. தமிழைப் பொறுத்தவரை அது இந்தியத் தமிழ் (ta-IN) அல்லது இலங்கைத் தமிழ் (ta-LK) எனப் பிரிக்கப்படுகிறது. நாம் அமைப்பில் தமிழைச் சேர்க்கும்போது, அந்தப் படிமுறை (Algorithm) திறன்பேசியில் உள்ள ஒட்டுமொத்தச் செயலிகளின் கோப்புகளையும் ஆய்வு செய்கிறது.

இதன் விளைவாக, தமிழ் எழுத்துகள் திரைக்கு ஏற்றவாறு துல்லியமான இடைவெளியிலும், முறையான வடிவத்திலும் தோன்றுவதோடு, தமிழ் விசைப்பலகை நமக்கு எளிதாகக் கிடைப்பதையும் இந்த படிமுறையே உறுதி செய்கிறது.

பல பயனர்கள் தங்கள் திறன்பேசியை முழுமையாகத் தமிழுக்கு மாற்றினால், தட்டச்சு செய்வதிலோ அல்லது செயலிகளைப் பயன்படுத்துவதிலோ குழப்பம் ஏற்படுமோ என்று அஞ்சுகின்றனர். ஆனால், நவீன திறன்பேசி படிமுறைகளில் உள்ள ‘காப்பு வழிமுறை’ (Fallback Mechanism) இதற்கு மிக எளிய தீர்வை வழங்குகிறது. இதன் மூலம் திறன்பேசியின் முதன்மை மொழியாக ஆங்கிலமே இருக்கும். ஆனால், தமிழ் மொழியை ஆதரிக்கும் செயலிகள் இயங்கும்போது, அல்காரிதம் உங்கள் முன்னுரிமைப் பட்டியலில் இருக்கும் தமிழைப் படித்துவிட்டு, அந்தச் செயலியைத் தானாகவே தமிழில் காட்டும். திறன்பேசியும் குழம்பாது, பயனருக்கும் தமிழ் விசைப்பலகையும் தமிழ் எழுத்துருக்களும் தடையின்றிக் கிடைக்கும்.

தரவுகள்தான் அரசன்

இவ்வாறு சேகரிக்கப்படும் படிமுறைத் தரவுகளை கூகுள், ஆப்பிள், மெட்டா, மைக்ரோசாஃப்ட் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் நன்கு ஆய்வு செய்கின்றன. அவற்றைப் பொறுத்தவரை, தரவுகள்தான் அரசன். ஒரு பகுதியில் எத்தனை பேர் குறிப்பிட்ட மொழியைத் தங்கள் அமைப்புகளில் பட்டியலிட்டுள்ளனர் என்ற தரவுகளின் அடிப்படையில்தான், அந்த மொழி சார்ந்த தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு நிறுவனங்கள் நிதியையும் பொறியாளர்களையும் ஒதுக்குகின்றன.

நாம் தமிழைத் தொலைபேசி அமைப்பில் சேர்க்காதவரை, நாம் ஒரு பெரிய சந்தையாக இருந்தாலும் அவர்களின் கணக்குப்படி ‘புலப்படாத பயனர்களாகவே’ (Invisible Users) நீடிக்கிறோம். நாம் தமிழைப் பட்டியலிடத் தொடங்கும்போது, அது நிறுவனங்களைத் தமிழை நோக்கித் திரும்பிப் பார்க்க வைக்கும் மாபெரும் விழிப்புணர்வுப் புள்ளியாக மாறும்.

மாற்றத்தின் விளைவுகள்: என்னென்ன நடக்கும்?

பயனர்களின் தரவுகள் உயரும்போது, உலகளாவிய நிறுவனங்கள் தமிழ் மொழிக்காகப் பின்வரும் அதிநவீன மாற்றங்களை மேற்கொள்ள வாய்​ப்புள்ளது

  • எழுத்துரு மேம்பாடு: திறன்பேசி திரைகளில் வாசிப்பதற்கு மிகவும் எளிமையான, நவீன ரசனைக்கு ஏற்ற அழகிய தமிழ் எழுத்துருக்களை நிறுவனங்கள் தனித்துவமான வடிவமைப்பாளர்களைக் கொண்டு உருவாக்கும்.
  • அதிநவீன தட்டச்சு: நாம் தட்டச்சு செய்யும்போது அடுத்த சொல்லைத் துல்லியமாகக் கணிக்கும் வசதியும் (Predictive Text), தமிழ் – ஆங்கிலம் கலந்து எழுதும் ‘தங்கிலீஷ்’ முறையைத் தானாகவே தெளிவான தமிழில் பிழையின்றி மாற்றும் தொழில்நுட்பமும் மேம்படும்.
  • செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி: தமிழ் பேசும் மக்களின் வாக்கிய அமைப்புகள் செயற்கை நுண்ணறிவு மாதிரிகளுக்கு (AI Models) பயிற்சியாக வழங்கப்படும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதன் மூலம் எதிர்காலத்தில் சிரி (Siri) அல்லது கூகுள் உதவியாளர் போன்ற குரல் வழிக் கருவிகள் நமது இயல்பான பேச்சுவழக்குத் தமிழைக் கூட நூறு விழுக்காடு துல்லியமாகப் புரிந்துகொண்டு வேலை செய்யும்.
  • விளம்பரச் சந்தை மாற்றம்: தொழில்நுட்பச் சந்தையில் தமிழுக்கான வர்த்தக மதிப்பு கூடும். தனியார் நிறுவனங்கள் தங்களின் விளம்பரங்களையும், சேவைகளையும் வெறும் கூகுள் மொழிபெயர்ப்புத் தரத்தில் தராமல், தமிழ் பேசும் மக்களின் ரசனைக்கு ஏற்ப முறையான தமிழ் இலக்கியத் தரத்திலான விளம்பரங்களாகத் தரத் தொடங்கும்.
  • தொழில்நுட்ப சமத்துவம் ​: நிறுவனங்கள் தமிழுக்கு முதலிடம் அல்லது இரண்டாம் இடம் கொடுக்கும்போது, அரசுச் சேவைகள், வங்கிச் செயலிகள், மருத்துவ வழிகாட்டல்கள் என அனைத்தும் தமிழில் எளிமையாகக் கிடைக்கும். இது அனைவருக்கும் தொழில்நுட்பத்தின் பயன் சமமாகக் கிடைப்பதை உறுதி செய்யும்.

தமிழைத் திறன்பேசியில் நிறுவும் எளிய வழிமுறைகள்

தமிழைத் திறன்பேசியின் பட்டியலில் சேர்ப்பதற்கான வழிமுறையும் எளிமையானதுதான். விரும்பினால் ஆங்கிலத்தை முதலிலேயே வைத்திருக்கலாம். பட்டியலில் தமிழ் இருப்பதே போதுமானது.

ஆன்டிராய்டில்: அமைப்புகள் (Settings) → சிஸ்டம் (System) → மொழிகள் (Languages) → மொழி சேர்க்கவும் (Add a Language) → தமிழ்.

ஆப்பிள் திறன்பேசிகளில்: அமைப்புகள் (Settings) → பொதுவானவை (General) → மொழி மற்றும் பகுதி (Language & Region) → மொழி சேர்க்கவும் → தமிழ்.

இது தொடர்பாக முரசு அஞ்சல், செல்லினம் வடிவமைப்பாளரான முத்து நெடுமாறன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் ஒரு குறிப்பினை எழுதியிருந்தார்.

‘நம்மில் பலர் தமிழோடு வளர்ந்தவர்கள். நம் சிந்தனையிலும், கற்பனையிலும், மனத்தில் ஒலித்துக்கொண்டிருக்கும் பாடல்களிலும் தமிழ் கலந்திருக்கிறது. ஆனால் ஒரு கேள்வி. நமக்குத் தமிழ் தெரியும் என்பதும், தமிழோடு ஈடுபாடு கொண்டவர் என்பதும் நமது தொலைப்பேசிக்குத் தெரியுமா?’ எனத் தொடங்கும் அவர் குறிப்பு அனைவரின் திறன்பேசியிலும் தமிழையும் சேர்க்கச் சொல்லி வலியுறுத்தியது.

‘ஒரு மொழி பேசப்படுவதால், தட்டச்சிடப்படுவதால், படிக்கப்படுவதால் மட்டுமல்ல, தொலைப்பேசியின் அமைப்பில் பட்டியலிடப்படுவதாலும் உயிர்வாழ்கிறது!

எனவே இன்றே ஒரு நிமிடம் எடுத்துக்கொள்வோம். நமது திறன்கருவியில் தமிழையும் சேர்த்துக் கொள்வோம். நம்மைப்போல நமது தொலைப்பேசியும் கொஞ்சம் தமிழ் பேசட்டுமே!’ எனும் அவர் வேண்டுகோளை ஏற்றுப் பலரும் தங்கள் திறன்பேசியில் தமிழ் மொழியைச் சேர்த்துவிட்டு அத்தகவலைப் பகிர்ந்துகொண்டனர்.

நம்மைப் போல நமது தொலைப்பேசியும் கொஞ்சம் தமிழ் பேசட்டும்.

  • மு. இசக்கிமுத்து

முத்து நெடுமாறன் முகநூல் குறிப்பு

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now