அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் அண்மையில் பொன்மாலைப் பொழுது நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முரசு அஞ்சல், செல்லினம் செயலிகளின் வடிவமைப்பாளரும் நிறுவனருமான முத்து நெடுமாறன் ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்ற தலைப்பில் உரையை நிகழ்த்தினார்.

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை பொது நூலக இயக்கம், அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆகியவற்றின் சார்பில் நடத்தபட்ட நிகழ்ச்சி இது. அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் உதவி நூலகர், தகவல் அலுவலர் மணிகண்டன் வரவேற்புரை வழங்கினார். அரசு அதிகாரிகள், நூலகர்கள், வாசகர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் எனப் பல தரப்பினரும் நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்தனர்.
தனது 40 ஆண்டுகாலத் தொழில்நுட்ப அனுபவங்களையும், தமிழ் எழுத்துரு உருவாக்கத்தில் உள்ள சவால்களையும் இவ்வுரையில் முத்து நெடுமாறன் பகிர்ந்துகொண்டார். பன்னாட்டுப் பெருநிறுவனப் பணியை விடுத்து, பேரார்வத்துடன் (Passion) அச்சுக்கலை சார்ந்த பணியைத் தேர்வு செய்தபோது எதிர்கொண்ட விமரிசனங்களுடன் அவரது உரை தொடங்கியது.
பேரார்வமும் வாழ்வின் உயர்வும்
முத்து நெடுமாறனின் இந்த உரையின் ஒட்டுமொத்த மையக்கருத்தும் உள்ளார்ந்த ஆர்வத்துடனும் வேட்கையுடனும் செய்யப்படும் ஒரு வேலை, கடமைக்காகச் செய்யும் பிற வேலைகளைக் காட்டிலும் எவ்வாறு சிறந்து விளங்குகிறது என்பதை ஒட்டியே அமைந்திருந்தது.
வள்ளுவரின் “உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து” என்ற குறளை வாழ்வியல் தத்துவமாக முன்வைத்த அவர், உயர்வு என்பது ஒருவர் இருக்கும் சூழலிலோ, பதவியிலோ அல்லது அவரது பொருளாதார நிலையிலோ தீர்மானிக்கப்படுவதில்லை, மாறாக அது அவரது சிந்தனையின் தரத்திலும், அவர் காட்டும் பேரார்வத்திலுமே தொடங்குகிறது என்றார்.
அவரது உரையில் முன்வைக்கப்பட்ட ‘செய்தல்’ (Doing), ‘ஆகுதல்’ (Being) ஆகிய இரண்டிற்கும் இடைப்பட்ட ஒப்பீடு இந்த மையக்கருத்தை மேலும் வலுப்படுத்துகிறது. கடமைக்காகவும் வாழ்வாதாரத்திற்காகவும் மட்டும் ஒரு பணியைச் செய்வது ‘செய்தல்’ (Skill-based). அது போட்டி நிறைந்த பொதுவான பாதை. ஆனால், தனக்கு உகந்த, தான் நேசிக்கின்ற தனக்குப் பிடித்த துறையைத் தேர்ந்தெடுத்து பணியாற்றுவதே ‘ஆகுதல்’ (Identity-based).
ஒருவர் தன் முழு ஆர்வத்தையும் செலுத்தி ஒரு வேலையைச் செய்யும்போதுதான், வழக்கமான பார்வையாளர்களுக்குத் தப்பக் கூடிய மிக நுட்பமான விவரங்கள் அவரது கண்ணுக்குத் தெரியத் தொடங்கும். அந்தத் தனித்துவமே அவரது படைப்பை பிற படைப்புகளைக் காட்டிலும் மிகச் சிறந்ததாக மாற்றுகிறது. இதற்கு சான்றாக, “அழகாக ஒன்றை உருவாக்கி அதனை உலகிற்கு அர்ப்பணிப்பது” (Make something beautiful – and put it out there) என்ற ஸ்டீவ் ஜாப்ஸின் புகழ்பெற்ற வரியையும் அவர் சுட்டிக்காட்டினார். நமக்கு நாமே வகுத்து வைத்துள்ள எல்லைக் கோட்டை, எப்போது தகர்து எறிந்துவிட்டு எழுகிறோமோ, அப்போது தான் இந்த அழகியலை எட்ட முடியும் என்றார்.
செயற்கை நுண்ணறிவு
தற்போதைய சூழலில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஏற்படுத்தி வரும் மாற்றங்கள் குறித்துப் பேசிய அவர், நாற்பது ஆண்டுகளாகத் தொழில்நுட்பத் துறையில் இருக்கும் தனக்கு செயற்கை நுண்ணறிவு ஓர் அச்சுறுத்தலாகவோ அல்லது பாதிப்பாகவோ தெரியவில்லை என்றார். மனிதரின் தனித்துவமான உயர் சிந்தனைக்கும் பேரார்வத்திற்கும் முன்னால் தொழில்நுட்பக் கருவிகள் வெறும் துணைக் கருவிகளே என்பது அவரது பார்வையாக இருந்தது.
இதன் தொடர்ச்சியாக, அவர் வடிவமைத்துள்ள ‘சொல்வளம்’ என்ற சொல் விளையாட்டு செயலி குறித்த விவரங்களைப் பகிர்ந்துகொண்டார். ஆர்வத்துடன் அவர் செய்யும் பணி அவருடைய ஒவ்வொரு மென்பொருளிலும் உயர் தரத்துடன் வெளிப்படுவதை இச்செயலியின் கூறுகளை விளக்கி எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டார்.
சொல் தேடல், சொல் ஆக்கம், சொல் வரிசை ஆகிய விளையாட்டுப் பிரிவுகளுடன், ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தொன்மையுடைய ‘தமிழி’ (Tamili) எழுத்து வடிவங்களைக் கற்றுக்கொள்ளும் பயிற்சியும் இந்தச் செயலியில் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.
ஒரு படைப்பாளி தன் வேலையை நேசித்துச் செய்யும்போது அது எத்தகைய உலகத்தரமான விளைவை ஏற்படுத்தும் என்பதற்கு, தனது பணிகளையே சான்றாக முன்வைத்து உரையை நிறைவு செய்தார் முத்து நெடுமாறன். அவர் நிகழ்த்திய உரையின் முழு காணொளியின் இணைப்பு கீழே வழங்கப்பட்டிருக்கிறது.
- மு. இசக்கிமுத்து




















படங்கள் : நானா.
