உரை செயலியை இன்று (07-09-2026) அறிமுகப்படுத்தியுள்ளார் செல்லினம், முரசு அஞ்சல் வடிவமைப்பாளரும் உருவாக்குநருமான முத்து நெடுமாறன். நம்முடைய தமிழ் உள்ளடக்கங்களைத் தமிழி வடிவத்தில் மாற்றும் இலவசச் செயலி இது.

ஒரு சங்கப்பாடலைத் தமிழி எழுத்தில் நம் கணினித் திரையில் பார்ப்பது மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவம். அந்தப் பாடலும் அது தோன்றும் எழுத்தும் ஒரே காலத்தவை. புதிய வரிகளுக்குப் பழைய எழுத்தை அணிவித்துப் பார்க்கவில்லை; அது புதிதாக இருந்தபோது எப்படி இருந்திருக்குமோ அதைத்தான் பார்க்கிறோம்! உரை செயலியை அறிமுகப்படுத்தி முத்து நெடுமாறன் எழுதியுள்ள குறிப்பினைச் செல்லினம் பயனர்களுக்காகக் கீழே கொடுத்துள்ளோம்.
“எகிப்தின் அரசர் பள்ளத்தாக்கில் தமிழி கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்ட செய்தி நம் எல்லோரையும் வந்தடைந்தது. ‘சிகை கொற்றன்’ எனும் பெயர் ஐந்து கல்லறைகளில் எட்டு இடங்களில் பொறிக்கப்பட்டிருந்தது. ‘வந்து கண்டான்’ என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தனது வருகையை ஒருவர் தமிழி எழுத்துகளில் பதிவு செய்து வைத்திருந்தார்.
இந்தச் செய்தியைப் படித்த பலர் என்னிடம் கேட்ட கேள்வி: ‘என் பெயரைத் தமிழியில் எப்படி எழுதுவது?’ செய்தியைவிட இந்தக் கேள்வியே என் கவனத்தை அதிகம் ஈர்த்தது.
அதற்கான விடை இன்று வெளியாகும் ‘உரை’ — மெக், ஐபோன், விண்டோசு, ஆண்டிராய்டு ஆகிய நான்கு தளங்களிலும் ஒரே வகையில் இயங்கும் ஓர் இலவசச் செயலி.
இது தமிழியில் தட்டெழுதுவதற்கான செயலி அல்ல. அதையும் செய்யும் ஆனால் அதுமட்டுமின்றி, உங்களிடம் ஏற்கெனவே உள்ள தமிழ் வரிகளைத் தமிழியில் காண்பதற்கானது. ஒரு பெயரையோ, வரியையோ அல்லது ஒரு முழுப் பாடலையோ கொண்டு வந்து செயலியில் ஒட்டுங்கள். தமிழ், தமிழி, இலத்தீன் ஒலிபெயர்ப்பு ஆகிய மூன்று தாவல்களில் (tabs) ஒன்றைத் தொட்டால் போதும். அந்தந்த வரிவடிவத்தில் நீங்கள் ஒட்டிய உரை தோன்றும். மாற்றுவதற்குத் தனி பொத்தானோ கட்டளையோ இல்லை. தாவலே மாற்றத்திற்கான கட்டளை. மூன்றில் எதிலிருந்தும் எதற்கும் மாற்றலாம். மாறியது அப்படியே திரும்பவும் வரும்.

ஒரு சங்கப் பாடலை ஒட்டி அதனைத் தமிழியில் பாருங்கள். அந்தப் பாடலும் அது தோன்றும் எழுத்தும் ஒரே காலத்தவை. அந்த எண்ணமே நம்மை மெய்சிலிர்க்க வைக்கும். நீங்கள் புதிய வரிகளுக்குப் பழைய எழுத்தை அணிவித்துப் பார்க்கவில்லை; அது புதிதாக இருந்தபோது எப்படி இருந்திருக்குமோ அதைத்தான் பார்க்கிறீர்கள்!
செயலியில் உங்கள் பெயரை இடுங்கள். உங்கள் ஊரின் பெயரை இடுங்கள். எங்கோ எப்போதோ ஒரு சுவரில் இடம்பெற்றிருந்த உங்கள் முன்னோரின் பெயரையும் இடுங்கள். அவை எப்படித் தமிழியில் தோன்றுகின்றன என்பதைப் பார்த்து மகிழுங்கள்.
‘உரை’ இணையம் இல்லாமல் இயங்கும். கணக்கு தேவையில்லை. விளம்பரமோ இணைய அனுமதியோ இல்லை. உங்கள் எழுத்தை அது தானாக எங்கும் அனுப்பாது; அனுப்பவும் முடியாது.
கல்லில் பொறித்த எழுத்து இன்று உங்கள் உள்ளங்கையில். விளையாடிப் பாருங்கள்.” எனத் தன்னுடைய உரை அறிமுகச் செய்தியைப் பகிர்ந்துள்ளார்.
தமிழியில் நேரடியாகத் தட்டெழுதுவது பற்றியும் குறிப்பிட்டுள்ளார். “அது முரசு அஞ்சல் செயலியின் வேலை. கடந்த ஆண்டு முதல் செய்துவருகிறது. அஞ்சல் செயலியில் உள்ள அனைத்து விசைமுகங்களையும் கொண்டு தமிழியில் எழுதலாம். தமிழி ஓர் இலக்கு. அஞ்சல் விசைமுகத்திலோ, தமிழ்99 விசைமுகத்திலோ அல்லது பல ஆண்டுகளாக நீங்கள் பழகிய பழைய தட்டச்சு விசைமுகத்திலோ பழக்கப்பட்ட உங்கள் விரல்கள் அப்படியே தமிழியில் எழுதும். புதிதாக ஒன்றும் கற்க வேண்டியதில்லை.”
உரை செயலியின் பின்னணியில் உள்ள, ஆர்வத்தைத் தூண்டும், அறிவுக்கு உணவாகும் தகவல்களைத் தன்னுடைய வலைப்பக்கத்தில் விரிவாக எழுதியுள்ளார் முத்து நெடுமாறன். உரை செயலியில் தமிழி வரிவடிவத்திற்கான எழுத்துரு, விசைப்பலகை, விளையாட்டு, ஈராயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு வரிவடிவத்தைப் பயன்படுத்த என்னென்ன தேவை போன்றவற்றை இக்கட்டுரை விரிவாக விளக்குகிறது.

தமிழி வரிவடிவத்துக்கு நம் உள்ளடக்கத்தை மாற்ற உதவும் உரை செயலியின் அறிமுகக் குறிப்பில் முத்து நெடுமாறன் “யாதும் ஊரே” என்கிற சங்கப்பாடல் வரியினைப் பயன்படுத்தியிருந்தார். அந்தச் சுவரொட்டி சொல்வளம் செயலியில் உருவாக்கப்பட்டது. சொல்வளம் செயலிக்கான இணைப்பினைக் கீழே தந்திருக்கிறோம்.
உரை செயலியை பதிவிறக்கம் செய்து தமிழியில் உங்கள் உள்ளடக்கத்தினைக் கண்டு மகிழுங்கள். உரை செயலியைப் பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்புச்சங்கிலி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பயன்படுத்திப் பார்த்து உங்கள் கருத்துகளை எங்களோடு பகிர்ந்கொள்ளுங்கள்.
உரை செயலியின் பின்னணித் தகவல் கட்டுரை

