ஆப்பிளின் iOS 18.2 இயங்குதளம் கடந்த சில தினங்களுக்கு முன் பயன்பாட்டிற்கு வந்தது. இதன்மூலம், ஐபோன் மற்றும் ஐபாட் கருவிகளில் காட்சி நுண்ணறிவு (visual intelligence), வேடிக்கைப் படங்கள் உருவாக்கும் செயலி (Image playground), ஜென்மோஜி எனப்படும் AI போன்றவை பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இவற்றோடு இசைக்கலைஞர்கள், உள்ளடக்கத்தை உருவாக்குபவர்கள் (content creator), வலைபரப்பு (Podcast) தொகுப்பாளர்களுக்கென இன்னொரு சேவையும் வழங்கப்பட்டுள்ளது. ஒலிப்பதிவு செய்யும் போது அடுக்குகளாகப் பதிவாகும் வசதி.

ஒலி அடுக்குப் பதிவு (layered recording) என்பது ஆப்பிள் இயங்குதளத்தில் உள்ள Voice memo என்ற செயலியின் புதிய சேவையில் ஒன்றாகும். இச்செயலி குரல் பதிவிற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம் நீங்கள் பயன்படுத்தும் இசைக்கருவியை ஆப்பிள் திறன்பேசியின் ஒலிபெருக்கி மூலமாகவே இசைக்க வைக்க இயலும். அதோடு இசைக்கலைஞர்கள் பதிவு செய்யும்போது, ஒவ்வொரு இசைக் கருவியின் இசை, பாடுபவரின் ஒலி போன்றவை தனித்தனி அடுக்குகளாகப் பதிவு செய்யப்படுகின்றன.
இதன்மூலம் பலருடைய குரல்களையும் எளிதாக ஒன்றாக இணைக்க இயலும். அவ்வாறு இணைக்கும்போதும் அவை தனித்தனி அடுக்குகளாகவே பராமரிக்கப்படுகின்றன. அடுக்குகளாக இருப்பதால் அதனைத் திருத்துவது எளிமையாகிறது. அதாவது ஒருவருடைய ஒலியில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அதைமட்டும் தனியாகத் திருத்த இயலும். பிழைதான் என்றில்லை, மேம்படுத்த வேண்டிய தேவை இருந்தாலும் அடுக்குகளாக இருந்தால் அதைச் செய்வது எளிது. அதோடு ஒரு பாடலைப் பதிவு செய்யும் போது காப்பீட்டுக்காக, குரல் மற்றும் கருவிகளின் ஒலிகளுக்கென இரண்டு தனித்தனியாக ஒலிப்பதிவு செய்யப்படுகிறது.
எப்படிப் பயன்படுத்துவது?
உங்கள் திறன்பேசியில் வாய்ஸ் மெமோ செயலியைத் திறக்கவும். பின்னர், நீங்கள் ஏற்கனவே திறன்பேசியில் வைத்திருக்கும் ஒலிப்பதிவு, இசைப்பதிவு எதையேனும் உள்ளீடு செய்யவும். நீங்கள் குறிப்பிட்ட பதிவின் கீழ் இடதுபுறத்தில் குறியீடு ஒன்றைக் காண்பீர்கள். அதைத் தொட்ட பிறகு, திரையில் ‘+’ சின்னம் காண்பிக்கப்படும். அதைத் தொடுவதன்மூலம், உங்களுக்குத் தேவையான மாற்றங்களை தனித்தனி அடுக்குகளாகச் செய்துகொள்ள இயலும். இந்த அம்சம் ஐபோன் 18 புரோ மற்றும் 16 புரோ மேக்ஸில் மட்டுமே பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஏனெனில் இதற்குத் தேவையான நுண்சில்லு, இந்த புதிய வகை திறன்பேசிகளில் மட்டுமே உள்ளது. இதற்கு முந்தைய ஆப்பிள் இயங்குதள வெளியீட்டில் ஒவ்வொரு ஒலிக்கும் தனித்தனி ஒலிக்குறிப்புகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- இசக்கிமுத்து
