ஆப்பிள் நுண்ணறிவு இல்லாத நாடுகளில், ஆப்பிள் 16 திறன்பேசியின் விற்பனை குறைவாக உள்ளதாக அதன் தலைமை செயல் அதிகாரி டிம் குக் கூறியுள்ளார்.
ஆப்பிளின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், சிஎன்பிசி செய்தி நிறுவனத்துடனான நேர்காணலில் இதைப் பற்றிப் பேசியுள்ளார். அதில், “ஆப்பிள் நுண்ணறிவோடு இணைந்த ஐபோன் 16 திறன்பேசிகளின் விற்பனையானது, ஆப்பிள் நுண்ணறிவு இல்லாத ஐபோன் 16 திறன்பேசிகளின் விற்பனையை விட அதிகமாக இருந்ததைக் கண்டோம். திறன்பேசிகளின் விற்பனையை அதிகரிப்பதில் ஆப்பிள் நுண்ணறிவு ஒரு முக்கிய காரணியாக இருந்திருக்கிறது.” எனக் கூறியுள்ளார்.

பிற போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது ஆப்பிளின் செயற்கை நுண்ணறிவு பற்றிய அணுகுமுறைகள் சிலரால் குறைத்து மதிப்பிடப்படுகின்றன. செயற்கை நுண்ணறிவு அம்சங்களை அதிக அளவில், ஆப்பிளின் பிற போட்டியாளர்கள் சந்தைப்படுத்துகின்றனர். ஆனால் அவர்களைப் போலல்லாமல், ஆப்பிள் தன் பயனர்கள் மத்தியில் செயற்கை நுண்ணறிவை அமைதியாகக் கொண்டு செல்கிறது. இதுவே ஆப்பிளின் வெற்றியின் ரகசியமாக உள்ளது.
ஆப்பிளின் செயற்கை நுண்ணறிவு பயனர்கள் மத்தியில் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆப்பிள் திறன்பேசியைப் பயன்படுத்தும் அனுபவத்தை மேம்படுத்த, ஆப்பிள் நுண்ணறிவு திரைக்குப் பின்னால் செயல்படுகிறது. சிரியுடன் மேம்பட்ட அரட்டைகள், சிறந்த புகைப்பட திருத்தப் பரிந்துரைகள், செயலிகளுக்கான பரிந்துரைகள் என ஆப்பிள் நுண்ணறிவின் செயல்பாடுகள் நீண்டு கொண்டே செல்லும். தொழில்நுட்பத் துறையில் செயற்கை நுண்ணறிவு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மேலும் எல்லா நிறுவனங்களும் அதில் தங்களை மேம்படுத்திக்கொள்ள முயற்சி செய்து வருகின்றன. கூகுளின் பிக்சல் திறன்பேசிகளில் நிகழ் நேர மொழிபெயர்ப்பு, படக்கருவிக்கான நல்ல மென்பொருள் போன்றவை உள்ளன. இந்த செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் தங்களுக்கென பயனர்கள் மத்தியில் ஒரு பெயரைப் பெற்றுள்ளன. இதற்கிடையில், ஆப்பிள் மிகவும் கவனமாகச் செயல்பட்டு, அதன் கருவிகளுடன் செயற்கை நுண்ணறிவை ஆழமாக ஒருங்கிணைக்கும் அம்சங்களை வெளியிட்டு வருகிறது. சிறந்த படக்கருவிகள் மற்றும் நீண்ட மின்கல ஆயுள் போன்றவற்றிலும் நுண்ணறிவின் பயன்கள் வரத் தொடங்கியுள்ளன.
சீனாவில் இன்னும் ஆப்பிள் நுண்ணறிவு வெளியிடப்படவில்லை. எனினும் ஆப்பிளின் புதிய வளர்ச்சித் திட்டங்களுக்குச் சீனா மையமாக உள்ளது, இது போல ஆப்பிள் நுண்ணறிவைக் குறிப்பிட்ட சந்தைகளில் தேர்ந்தெடுத்து அறிமுகப்படுத்தும் ஆப்பிளின் உத்தி, ஒரு சோதனை ஓட்டம் போல இருக்கிறது. புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதாக இருந்தாலும் சரி அல்லது தயாரிப்பு அம்சங்களை விரிவுபடுத்துவதாக இருந்தாலும் சரி, ஆப்பிளானது பெரும்பாலும் படிப்படியான அணுகுமுறையையே பின்பற்றுகிறது.இது போன்ற இன்னும் பல ஆப்பிளின் யுக்திகளை சிஎன்பிசி நேர்காணலில் பகிர்ந்துள்ளார் டிம் குக்.
- இசக்கிமுத்து
