துலங்கல் குறியீடு மூலம் கூகுள் சரிபார்ப்பு

குறுஞ்செய்தி மூலம் சரிபார்த்தலுக்குப் பதிலாக விரைவு துலங்கல் குறியீடுகளை (QR – Quick Response code) பயன்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது கூகுள்.

குறுஞ்செய்தி என்பது 1993ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை பயன்படுத்தப்பட்டுவரும் தகவல் தொடர்பு அமைப்பு. நம்மில் பலரின் முதல் கைப்பேசி வழியான தகவல் பரிமாற்றம் குறுஞ்செய்தி மூலமாகவே நிகழ்ந்திருக்கும். காலமாற்றத்திற்கு ஏற்ப பல்வேறு மாற்றங்களைச் சந்தித்துவந்தது குறுஞ்செய்திச் சேவை. பெரும்பாலான பயனர்கள் பிற தகவல் தொடர்பு செயலிகளைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். ஆனாலும் இரண்டு காரணி அங்கீகாரம் போன்ற சிலவற்றுக்கு இப்போதும் குறுஞ்செய்தி முக்கியமான பயன்பாடாக இருந்துவருகிறது. அதில் பயனர்களுக்குப் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனால், பல்வேறு நிறுவனங்களும் மாற்றங்களைச் செய்து வருகின்றனர்.

QR code

இந்நிலையில் கூகுள் நிறுவனம் குறுஞ்செய்திக்குப் பதிலாக விரைவு துலங்கல் குறியீடுகளைப் பயன்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது.‌ இன்னும் சில மாதங்களில், குறுஞ்செய்தி மூலம் சரிபார்க்கும் வகையில், ஆறு இலக்கக் குறியீட்டு எண்களைப் பெறுவதற்குப் பதிலாக, விரைவு துலங்கல் குறியீடுகளைப் பயனர்கள் பெறுவார்கள் எனக் கூறியுள்ளது கூகுள் நிறுவனம். இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளையும் வழங்கியுள்ளது.

இது பற்றி கூகுள் செய்தித் தொடர்பாளர் ரோஸ் ரிச்செண்ட்ர்ஃபர், “குறுஞ்செய்திச் சேவை பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகளைக் கொண்டுள்ளது. இதனால் பயனர்கள் இணையக் குற்றங்களால் பாதிக்கப்பட்டு வந்தனர். அதைத் தொடர்ந்து தொலைப்பேசி எண்களைச் சரிபார்க்கும் வழிமுறைகளை மாற்றம் செய்யத் திட்டமிட்டுள்ளோம். எண் குறியீடுகளுக்குப் பதிலாக தொலைப்பேசி படக்கருவி மூலம் ஊடறிய வேண்டிய விரைவு துலங்கல் குறியீடு பயனர்களுக்குக் காண்பிக்கப்படும்.” எனக் கூறியுள்ளார்.

இனிமேல் பயனரின் திறன்பேசி எண்ணானது, அந்த திறன்பேசி நிறுவனத்தோடு நேரடியாகச் சரிபார்க்கப்படும் எனக் கூறப்படுகிறது. இதற்கான வழிமுறைகள் திறன்பேசி நிறுவனத்தைப் பொறுத்து மாறுபடும்‌. விரைவு துலங்கள் குறியீடு மூலம் பயனர்களின் திறன்பேசிகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க முடியும் எனக் கூறுகிறது கூகுள். இப்போது புதிய திறன்பேசி வாங்கும் பயனர்கள் அவர்களுடைய கணக்கை எப்படிப் பயன்படுத்த முடியும் என்ற கேள்வி எழுகிறது. அதற்கு புதிய திறன்பேசியில் பயனர் அதே எண்ணைப் பயன்படுத்தும் வரை, அவர்களால் எளிதாகக் கணக்கைப் பயன்படுத்த முடியும் என்று கூகுள் கூறுகிறது. வேறு எண்ணைப் பயன்படுத்தினால் அவர்கள் வேறு வழிகளைத்தான் பயன்படுத்த வேண்டியதாயிருக்கும்.

விரைவு துலங்கல் குறியீடுகள் இன்னும் சில மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும் எனக் கூறியிருக்கிறது கூகுள் நிறுவனம்.

  • மு.‌இசக்கிமுத்து.


சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now